சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ்சில் தன் இருக்கையில் அமர்ந்தார் அந்த நபர். அரைமணி நேரத்தில், ரயில் புறப்பட்டு விடும். சென்னையில் முகாமிட்டிருந்த காஞ்சி மகாசுவாமிகளை தரிசிக்க வந்தார் அவர். தரிசித்த மனநிறைவுடன் இப்போது ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார்.
அவரது மனதிற்குள் ஒரே சிந்தனை. இன்னும் மூன்றே வாரத்தில் மகளுக்கு திருமணம். 'கடன் தருகிறேன்' என்றவர்கள் திடீரென கைவிரித்தனர். அதன் பின் பலரிடம் முயற்சித்தும் பலனில்லை. உடனடியாக ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்தால் தான் செலவை சமாளிக்க முடியும். கொடுப்பவர் யார்?
இந்த நிலையில் அவரின் மனைவி, ''மகாசுவாமிகளை தரிசித்து வாருங்களேன். நம் பணப்பிரச்னை தீரும்' என்றாள். தள்ளிப் போன விஷயம் இப்போது தான் ஒருவழியாக முடிந்தது.
கலங்கிய கண்களுடன் அவர் சொன்னதை எல்லாம் மகாபெரியவர் கேட்டுக் கொண்டார். ஆனால் அதில் அக்கறை காட்டுகிறாரா என்பது புரியவில்லை. சுவாமிகளின் முகம் சாதாரணமாகத் தானிருந்தது. இருந்தாலும் மனதிற்குள் பிரச்னை தீர்ந்தது போல் அமைதி உண்டானது.
'எந்த வண்டியில் கோயம்புத்துார் திரும்புகிறாய், முன்பதிவு செய்தாயா, இருக்கை எண் என்ன' என்றெல்லாம் பேச்சை மாற்றுவது போல் சுவாமிகள் பல கேள்விகள் கேட்டார். கடைசியாக, வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்து, வாழைப்பழம் வாங்கியதும் விடைபெற்றார் அவர். இதோ... ரயிலும் புறப்படும் நேரம் வந்து விட்டது.
அப்போது அவர் பெயரை உரக்கச் சொல்லியபடி வந்தார் ஒரு அன்பர். முன்பின் தெரியாதவர் என்றாலும், ''நான் இங்கே தான் இருக்கிறேன்!'' என்று குரல் கொடுத்தார்.
ரயிலுக்குள் வந்த அன்பர், ''சார்...! என் மகளின் திருமணம் நன்றாக நடந்ததை முன்னிட்டு, சங்கர மடத்திற்கு காணிக்கை அளிக்க வந்தேன். ஆனால், அதை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது மகாசுவாமிகளின் உத்தரவு'' என்று சொல்லி ஐம்பதாயிரம் கொடுத்தார். வாங்கிய பணத்தை கண்ணில் ஒற்றி கொண்டு நின்றார் அவர். ரயிலை விட்டு இறங்கி விடைபெற்றார் அன்பர். ரயிலும் புறப்பட்டது.
No comments:
Post a Comment