Saturday, 28 April 2018

கிருஷ்ணசாமி திருக்கோவில் தல வரலாறு

கிருஷ்ணசாமி திருக்கோவில் தல வரலாறு

கி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இவர் சிறந்த கிருஷ்ண பக்தர் ஆதலால் சர்வாங்கநாதன் என்று அழைக்கப்பட்டவர். இச்செய்தி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வரலாற்றிலும் திருவிதாங்கூர் வைக்கம் கருவூல ஆவணத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இம் மன்னர் திருக்குறுங்குடி கோயிலில் புகழ் வாய்ந்த மணி ஒன்றையும் தானமாக வழங்கியுள்ளார்.

கி.பி.15-ம் நூற்றாண்டு காலத்தில் இருந்து வைஷ்ணவ யாத்ரீகர்கள் வட இந்தியாவிலிருந்து இத்திருக்கோவிலுக்கு விஜயம் செய்துள்ளனர். கங்கை மற்றும் யமுனா எனும் பகுதிகளின் இடையே இருக்கும் தீர்க்கப்பட்டர் என்னும் வைஷ்ணவ பக்தரால் பல்வேறு பொருள்கள் இத்திருக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை ஆராய்ச்சியின்படி இச்சம்பவம் கி.பி.1464-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதுர்வேதி மங்கலத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலுக்கு 2 அந்தண பெண்களையும், சிறிய அளவில் நிலங்களும் மன்னர் ஆதித்ய வர்மாவால் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதை திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் வைஷ்ணவ அடையாளத்துடன் கூடிய செம்புபட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் வடசேரி மற்றும் கிருஷ்ணன் கோவில் பகுதியே அன்றைய சதுர்வேதி மங்கலம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நாகர் கோவில் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் அமைந்தது. இக்கோவிலில் வீற்றிருக்கும் நவநீத கிருஷ்ண மூர்த்தி தனது இருகரங்களிலும் வெண்ணெய்யை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறார்.

இத்தலத்தை குமரியின் குருவாயூர் என்று சிறப்பாக அழைப்பர். தினந்தோறும் கிருஷ்ணசாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. இது அவரது பக்த கோடிகளுக்கு ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாள் இரவும் பாலகிருஷ்ண சாமி நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண கண்கோடி வேண்டும். இக்காட்சியை கண்டு நெய்வேத்திய பிரசாதம் அருந்தி வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலச் சிறப்பாகும்.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளிக்குப் பிறகு இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்துடன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் வடசேரியை சார்ந்த கே.கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் கமிட்டி மூலமாக சிறப்புற கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment