மேஷ ராசி
இந்த ராசி இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும், வைராக்கியமும் மிக்கது. எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பர். வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள். அவசரக்காரர்கள் என்று உலகத்தால் சொல்வார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. எப்படித்தான் தாயின் வயிற்றில் இருந்தீர்கள் என்று சொல்லித்திரிவார்கள்.
இவர்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யாவிட்டால் தூக்கம் வராது, மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும். தந்திரசாலிகள் மட்டுமல்ல, தைரியசாலிகளும் கூட இவர்கள்.
ரிஷபம்:
இந்த ராசிக்காரர்கள் அமைதியானவர்கள். ஆர்ப்பாட்டம் செய்ய ஆசை இருந்தாலும் செய்ய துணிவில்லாதவர்கள். தோற்றத்தால் மற்றவர்களின் எண்ணங்களை மாற்றம் காணச் செய்யும் ரிஷப ராசிக்காரா்கள் சீற்றம் இல்லாமல் பேசும் தன்மை பெற்றவர். கூட்டங்களுக்கு மத்தியில் இவர்கள் நிற்கும் பொழுது இவர்களை கோட்டீஸ்வரர் என்றே மதிக்கும் அளவிற்கு தோற்றப் பொழிவு இருக்கும். எடுக்கும் முயற்சியில் பின் வாங்கமாட்டார்கள்.
வாகன யோகம் அதிகம் பெற்றவர்கள். ஆடை அணிகலன் அணிவதில் அதிகம் பிரியம் உள்ளவர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகம் இருக்கும். உறவினர்களைவிட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எல்லாம் விதிப்படி நடக்கிறது என்று சொல்வார்கள். இவர்களின் நட்பு விட்டம் பெரியதாக இருக்கும். தலைமை பதவி தக்க சமயத்தில் வந்து சேரும். இவர்கள் வாழ்க்கை ஏற்றம் இறக்கமாகவே இருக்கும்.
மிதுனம்:
இந்த ராசிக்காரர்கள் அதிக அளவு மூளை பலம் உள்ளவர்கள். அதிக புத்திசாலித்தனத்தையும், மிகச்சிறந்த நிர்வாகம் தன்மையும் உடையவர்கள். சங்கீதம், ஆடல் பாடல் ஆகியவற்றில் விருப்பமும் நல்ல மனோசக்தியும் உடையவர்கள். புதுமை செய்வதிலும் புரட்சி செய்வதிலும் புகழ் கொடி நாட்டும் இவர்கள் மிகப்பெரிய காரியங்களைக்கூட மிக எளிதாகச் செய்து முடிப்பார்கள். இவர்கள் மூளை மின்னல் வேகத்தில் செயல்படும். அடுத்தவர்களுக்கு யோசனை சொல்லும் இவர்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திப்பதில்லை.
உடல் பலத்தை காட்டிலும் இவர்களுக்கு மூளை பலமே உறுதுணை புரியும். ஆன்மீகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களிடம் காரியம் சாதித்துக் கொள்ள வேண்டுமானால் இவர்களைப் போற்றி புகழ்ந்து பேசினாலே போதும்.
கடகம்:
இவர்கள் மற்றவர்களின் மனமறிந்தும், குணமறிந்தும் பேசுவதில் வல்லவர்களாகவும், யாரையும் நம்பாதவர்களாகவும், நம்பியவர்களை நாளும் கைவிடாதவர்களாகவும் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதற்காக எள்ளளவும் கலங்காதவர்களாகவும், ஆயுதங்கள் இல்லாமல் இவர்கள் பேச்சையே ஆயுதமாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். வைராக்கிய மனம் பெற்ற இவர்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள்.
பணபலம் பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களைச் சுற்றி ஒரு படை பலம் எப்பொழுதும் இருக்கும். பொது நலத்தில் ஈடுபாடு கொண்ட இவர்களை மக்கள் போற்றி கொண்டாடுவார்கள். வயது கூட கூட இவர்கள் வாழ்க்கை வளம் பெருகும். வாழ்வில் மிக வேகமாக முன்னேற வேண்டும் என்ற ஆவலில் மின்னல் வேகத்தில் செயல்படுவார்கள். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குணங்களை பெற்றவர் இவர்கள்.
சிம்மம்:
இவர்கள் அதிக துணிவும், தலைமை பதவி ஆசையும் உடையவர்கள் எவருக்கும் அடங்காத தன்மையும், அடக்க வேண்டும் என்கிற சர்வதிகார போக்கும் உடையவர்கள். சீறும் குணத்தை பெற்றிருந்தாலும் மக்களைச் சீர்தூக்கி எடைபோடும் ஆற்றலும் அதனை செயல்படுத்தும், விதமும் அருமை. இவர்கள் அதிகாரத்தை உபயோகித்து காரியம் சாதிப்பதை விட அன்பை உபயோகித்தால் அதிகம் சாதித்து காட்டுவார்கள்.
நிர்வாகத் திறமையினால் எண்ணற்ற நெஞ்சங்களின் மனதில் இடம் பிடித்து, கொடுத்து உதவும் தன்மை கொண்ட இவர்கள் கோபம் கொள்வதற்கும் தயங்கமாட்டார்கள். வெளி வட்டாரத்தில் வியக்கும் விதத்தில் செல்வாக்கு பெற்றிருந்தாலும் வீட்டிற்குள் இவர்களுக்கு போராட்டம் தான். மனைவியும் மக்கள் செல்வங்களும் இவர்களை அனுசரித்து செல்வது அரிது.
கன்னி:
இவர்கள் மற்றவர்களின் பாராட்டுதல்களைக் காட்டிலும் பாசத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் புதுமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் பதில் கூறும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம். பார்த்த மாத்திரத்தில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது அரிது. ஏனென்றால் அமைதி இவர்கள் முகத்தில் இருக்கும். ஆக்ரோஷம் இவர்கள் மனதில் இடம் பிடிக்கும். ஒருவரைப் பார்த்தால், பார்த்த உடனேயே இவர்கள் இப்படித்தான் என்று கணித்து விடுவார்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்.
வாழ்க்கை ரகசியங்களையும் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். இவர்கள் புத்திசாலித்தனத்திற்கும் வாழ்வில் நடுப்பங்கில் புகழ் கூடும். மதிப்பும் மரியாதையும் உயரும். கன்னியர்களை தேர்ந்தெடுத்து மணம் முடிக்கும் போது கவனமாகப் பொருத்தம் பார்த்து செய்தால் புகழோடும், பொருளோடும் வாழ இயலும்.
துலாம்:
இவர்கள் கைராசி மிக்கவர்களாகவும், கடமை தவறாதவர்களாகவும், இரக்க சுபாவமும், அரக்க சுபாவமும் கலந்த மனோபாவம் பெற்றிருப்பார்கள். மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். குசேலரும் குபேரர் ஆகும் வாய்ப்பை வழங்குபவர் இவர்கள் ராசி நாதன். எனவே சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். கோபம் இவர்கள் உடன்பிறப்பு, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் மனிதருள் மாணிக்கம்.
வசீகர பார்வையும் கவர்ச்சியான முகத்தோற்றமும் பெற்ற இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குபவர்கள். மற்றவர்கள் தொடங்கும் புதுத் தொழிலுக்கு கைராசி மிக்கவர்கள் இவர்கள் என்ற முறையில் குத்துவிளக்கு ஏற்றவும் புது கணக்கு போடவும் இவர்களை அழைப்பர். இவர்கள் தொழிலுக்கு இவர்களே புதுகணக்கு போட்டால் உயர்வான லாபம் ஏற்படும். மனைவி மக்கள் பேரில் இவர்கள் தொழில் செய்யும்போது மகத்தான பலன்களைக் காண்பார்கள்.
விருச்சிகம்:
இவர்கள் விறுவிறுப்பாக செயல்பட்டு காரியத்தில் வெற்றிகளைக் குவிக்கும் கூர்மையான புத்தியும், குணத்தில் இமயமாக விளங்குவார்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் ஈடு இணையற்றவர்களாகவும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். இவர்களிடம் ஓர் தெய்வீக சக்தி உள்ளதால் இவர்களை யாரம் எளிதில் அசைக்க முடியாது. விருப்பங்களை நிறைவேற்ற நண்பர்கள் மட்டமல்லாமல் தெய்வங்களும் இவர்களுக்கு ஆதரவு புரியும். இரவு நேரத்தில் எந்த செயலையும் ஆர்வத்தோடு செய்வார்கள்.
கற்பனை வளத்தாலும் காரியங்களை எளிதில் முடிக்கும் திறத்தாலும் மக்களைக் கவர்ந்திருப்பார்கள். வாக்கு பலிதமும், கனவு பலிதமும் இவர்கள் வாழ்க்கையை வழி நடத்திச் செல்ல வழிகாட்டியாக விளங்கும், தவறு செய்தவர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் தட்டி கேட்க தயங்க மாட்டார்கள். பத்திரிக்கை, ஆன்மீகம், கலைத்துறை, ஜோதிடம், எழுத்து, விஞ்ஞானம் போன்ற துறைகளெல்லாம் இவர்களுக்கு பொருத்தமான துறைகளாகும்.
தனுசு:
இவர்கள் உதவும் மனதாலும் உழைக்கும் திறத்தாலும், உயர்ந்த நிலையை அடைய முடியும். தெய்வ பக்தியோடு தேச பக்தியும் அதிகம் இருக்கும். அன்பு, பொறுமை, பக்தி, நாணயம் அனைத்தும் இவர்கள் கவரிமான் பரம்பரை என்று தான் சொல்ல வேண்டும். வீரமும், விவேகமும் கொண்டு செயல்படுவதோடு உறுதியோடு நின்று இறுதிவரை போராடுவார்கள். வெளியில் சுதந்திர பறவைகளாகத் திரியும் இவர்களுக்கு வீட்டில் ஏதாவது ஒரு வகையில் நிம்மதியின்மை ஏற்படும். தாரத்தாலும், தனயனாலும் நிம்மதி இழக்காதிருக்க வேண்டுமானால் நல்ல பொருத்தம் பார்த்தே மனம் முடிப்பது அவசியமாகும்.
மகரம்:
இனிமைக் குணத்தோடும் காட்சியளிக்கும் இவர்கள் வைராக்கிய மனம் பெற்றவர்கள். நண்பர்கள் வட்டாரத்தில் ஒர் தனி முத்திரையைப் பதித்து விடுவார்கள். இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது அப்படியே நிகழும் என்பதால் நல்ல சிந்தனையாக இருந்தால் தான் அது நற்பலன்களைக் கொடுக்கும். இவர்களுக்கு உறவும் பகையும் தற்காலிகமானது தான். மந்தனுக்குரிய மகர ராசிக்காரர்களாகிய இவர்களுக்கு குடும்பத்திற்குள்ளேயே பகை குடி கொண்டிருக்கும்.
வெளிவட்டார நட்பு வியக்கும் விதம் அதிகரிக்கும் பொறுமைசாலிகளாக விளங்கும் இவர்கள் வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்ட பிறகு தான் சாதனை உருவாகும். மேதினி போற்றும் வாழ்க்கை பிற்பகுதியில் தான் காணமுடியும். தாரத்தை தேர்ந்தெடுக்கும் போதும், தொழில் அமைக்கும் போதும் ஜாதக பலம் அறிந்து செயல்பட்டால் தான் சாதகம் பெறமுடியும். இவர்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மையை அகற்றினால் வாழ்வில் உயர்நிலை அடைய முடியும்.
கும்பம்:
செய்யும் தொழிலே தெய்வமாகக் கருதும் இயல்புடையவர். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க மாட்டார்கள். கொடுத்தால் அதை நிறைவேற்றாமல் இவர்களுக்கு தூக்கம் வராது. சனியின் ஆதிக்கத் பெற்ற இவர்கள் சமுதாயத்தில் ஒரு தனி முத்திரை பதிப்பார்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற பட்டத்தையும் பெற்று வாழ்வார்கள். தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்க தயங்கமாட்டார்கள். தாராள மனப்பான்மை கொண்ட இவர்களுக்கு ஒரு பகை நட்பாகும் பொழுது மற்றொரு நட்பு பகையாகிவிடும். எனவே அதைப் பற்றி இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
எவ்வளவு உயர்ந்த நிலையில் இவர்கள் இருந்தாலும் நீங்காத மனக்குறை ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும். தன் வாழ்வில் வரும் சந்தோஷமானாலும் சரி, சங்கடமானாலும் சரி பிறரிடம் சொல்லாமல் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறி தேற்றிக் கொள்வார்கள். படிப்பை விட அனுபவத்தால் உயர்நிலை அடைந்தவர்கள் பலர். பலரையும் ஏற்றிவிடும் ஏணியாக விளங்கும் இவர்கள் பெற்றோர் வழியில் பிரச்சினைகளை சந்திப்பார்கள். பெற்றோர்கள் தங்களைவிட சகோதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
மீனம்:
இவர்கள் இல்லம் தேடி வருபவர்களுக்கு உள்ளம் மகிழ கொடுத்து உதவும் இவர்கள் மற்றவர்கள் செய்ய முடியாத காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் திறமை பெற்றிருப்பார்கள். பிறரது மனநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்றார்போல் செயல்படுவார்கள்.வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சியை காண்பார்கள். இவர்கள் தவறு செய்தாலும் அதை ஒப்புக் கொள்வார்கள். இவர்களுக்கு பதவி தானே தேடிவரும்.
அதுதான் இவர்களின் தனித்தன்மை. வெளியூருக்கு செல்லுவது அதிக நாட்டம் கொள்வார்கள். அன்னதானம் முதல் ரத்ததானம் வரை செய்யும் மனப்பான்மை பெற்ற இவர்கள் நிதானம் மட்டும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள். பிறருடைய சொத்துக்காகவோ, பொருளுக்காகவோ ஆசைப்பட மாட்டார்கள்.
No comments:
Post a Comment