கண் பார்வை மங்குதல், பார்வை குறைபாடு போன்ற அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் தலமாக ஞாயிறு திருத்தலம் விளங்குகின்றது. இத்திருத்தலம் சென்குன்றத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
தன்னை நாடிவரும் பக்தர்களின் இன்னல்களை போக்கும் அற்புத கடவுளாக இருந்து பக்தர்களின் இன்னல்களை போக்கிவருபவர் தான் சென்னையை அடுத்துள்ள சோழவரம் ஒன்றியத்தில் ஞாயிறு கிராமத்தில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை புஷ்பரதேஸ்வரர் பெருமான்.
உலகிற்கே ஒளிகொடுக்கும் சூரிய பகவான் தனக்கு ஏற்பட்ட சாப விமோச்சனத்திலிருந்து விடுபட இங்குள்ள புஷ்பரதேஸ்வரர் பெருமானை வழிபட்டு பேறுபெற்ற ஸ்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது. கோயிலின் தலவரலாற்றை பார்ப்போம்.
காஷிப மகரிஷியின் புதல்வரான சூரிய பகவான் எமதர்மனின் மகளான சமுக்னாதேவியை மணந்துகொண்டார் நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி (சாயா தேவி) கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள்.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த புதல்வர் தான் சனி பகவான். எமன் மூலமாக சமுக்ஞா தேவி பிரிந்து சென்றதை அறிந்த சூரிய பகவான், மனைவியை அழைத்து வரக் கிளம்பினார். அப்போது அவர் திருவண்ணாமலை சென்று கிரிவலம் செய்து வரும் வேளையில், வானத்தில் ஒரு ஜோதி தோன்றியது. அதைப் பின் தொடர்ந்து சென்ற சூரிய பகவான், அது இங்குள்ள தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலருக்குள் ஐக்கியமானதைக் கண்டார்.
ஜோதியின் நடுவில் தோன்றிய சிவன், அவரது உக்கிரத்தைக் குறைத்து, மனைவியுடன் சேர்ந்து வாழ அருளினார். சூரிய பகவான் விரும்பியவாறு இங்கேயே புஷ்பரதேஸ்வரர் என்ற திருப்பெயரில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இங்கு தலபுஷ்பமாக தாமரை இருக்கிறது. சூரியன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூர் ஞாயிறு என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. பல்லவர், சோழர், பாண்டிய, விஜயநகர மன்னர்கள் வழிபட்ட தலமாகும்.
கண் தொடர்பான நோய்களை நிர்ணயிக்கும் கிரகமாக சூரியன் இருப்பதால் பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள சிவன், சூரியனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிட்டால் கண் நோய் நீங்கப் பெறுகிறார்கள்.
பார்வை குறைபாடு மட்டுமின்றி தொழில் தொடர்பான பிரச்னை, விவாகத் தடை, சொத்துப் பிரச்னைக்கு இத்திருத்தலத்தில் 11 வாரங்கள் பூஜித்து வந்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
இத்திருத்தலம் சென்குன்றத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாரீஸ் கார்னரிலிருந்து மாதவரம் செங்குன்றம் வழியாகப் பேருந்து இயக்கப்படுகிறது.
No comments:
Post a Comment