காஞ்சிப்பெரியவரின் பக்தர் ஒருவர் சில மாதத்திற்கு முன் பணி ஓய்வு பெற்றார். வருமானம் நின்று விட்டால் யாரும் மதிக்க மாட்டார்கள் என வருந்தினார். அதை கண்ட சுவாமி பரிவோடு, ''உன் முகத்தில் சந்தோஷம் இல்லையே?'' என கேட்டார்.
கண்ணீர் பெருகிய கண்களுடன் அவர், ''எதை சொல்வது... பிரச்னை ஒன்றா... இரண்டா... காலையில் எழுந்ததும் காபி கிடைப்பதில்லை. வேளா வேளைக்கு சாப்பாடும் வருவதில்லை. வீட்டில் நான் ஒருவன் இருக்கிறேன் என்பதை கூட யாரும் கவனிப்பதில்லை. எல்லோருக்கும் வேண்டாதவனாகி விட்டேன். வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன் இல்லையா? இனி என்னால் ஆவது ஒன்றுமில்லை. அதனால் தான் இத்தனை அலட்சியம்! பணியில் இருக்கும் போதே காலமாகி இருக்கலாம். இப்போது நான் உயிரோடிருந்து யாருக்கு லாபம்?'' என புலம்பினார். ஓய்வு பெற்றதால் உண்டான விரக்தி, தனிமை உணர்வால் அனைவரும் அலட்சியப்படுத்துவதாக எண்ணுகிறார் என்பது சுவாமிக்கு புரிந்தது.
''அலுவலக பணியிலிருந்து தானே ஓய்வு பெற்றாய்? வீட்டு பணியில் இருந்து இல்லையே... நான் சொல்கிறபடி செய். தினமும் குளித்து விட்டு அரைமணி நேரம் ஜபம் செய். அதை பார்க்கும் மருமகள் மரியாதையுடன் காபி கொடுப்பாள். பேரன், பேத்தியுடன் இணக்கமுடன் பழகு. அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல். ரேஷன் கடைக்கு போவது, கரண்ட் பில் கட்டுவது என வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு செய். நீ இல்லாமல் வீடு நடக்காது, என்றாக்கி விடு. அப்போது எல்லோரும் தாமாகவே மரியாதையளிப்பர்'' என்று சுவாமி சொல்லிய போதே பக்தரின் மகன், தந்தை வர நேரமாகிறதே என தேடியபடி வந்தான்.
சுவாமியும் அதைக் கண்டு சிரித்தபடி, ''பணம் மட்டுமே வாழ்க்கையில்லை. உன் மகன் பாசமுடன் உன்னை தேடி வருவதை பார்... இனி மேலாவது நான் சொன்னபடி நடந்து கொள்!'' என்றார். பக்தரும் மனநிறைவுடன் விடை பெற்றார்.
No comments:
Post a Comment