ராகு பகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சஞ்சரிக்கிறார். இவரது தசாபுக்தி 18 ஆண்டுகளாகும். ‘ராகுவைப் போல் கொடுப்பவரும் இல்லை... ராகுவைப் போல் கெடுப்பவரும் இல்லை’ என்று இவ்வுலகம் புகழ்ந்து போற்றும்படியாகச் செயல்படுபவர் ராகு மட்டுமே.
* லக்னத்தில் ராகு இருந்தால், ஜாதகர் தேகபலன் உடையவராகவும், பிடிவாத குணம் கொண்டவராகவும், வறட்டு வேதாந்தம் பேசு பவராகவும் இருப்பார்.
* 2-ம் இடத்தில் இருந்தால், முன்கோபம் கொண்டவர். சுடு சொல் சொல்பவராக இருப்பார். ஆடம்பரச் செலவு செய்வதில் ஆர்வம் இருக்கும். தனக்கு சரியெனப் படுவதை மட்டுமே செய்வார்.
* 3-ம் இடத்தில் இருந்தால், சகோதரி உடல் நலியும். அகால போஜனமும் ஏற்படும். சதா பிரயாணமும் செய்பவராக ஜாதகர் இருப்பார். பொன் நகைகள் சேரும் பாக்கியம் உண்டு.
* 4-ம் இடத்தில் இருந்தால், தாயாருக்கு உடல் நலிவு ஏற்படும். அகால போஜனமும் சதா பிரயாணமும் செய்பவர். பொன் நகைகள் சேரும் பாக்கியம் உண்டு.
* 5-ம் இடத்தில் இருந்தால், புத்திரத் தடைகளும், தோஷமும் உண்டு. பூர்வ புண்ணியத்தில் தடை இருக்கும்.
* 6-ம் இடத்தில் இருந்தால், நல்லறமான இல்லறம், செல்வம் செல்வாக்கு, தீர்க்காயுள் உண்டு.
* 7-ம் இடத்தில் இருந்தால், திருமணத்தடை, கலப்பு மணம், வீண் பழிச்சொல் ஏற்படும். திடீர் யோகமும் உண்டு.
* 8-ம் இடத்தில் இருந்தால், கடின மனம் கொண்டவராக இருப்பார். ஆயுள் விருத்தி உண்டு.
* 9 - ம் இடத்தில் இருந்தால், தந்தைக்கு நஷ்டம் ஏற்படும். பிதுர் சொத்துக்களில் வில்லங்கம் உண்டாகும். ஆனா லும், ஜாதகருக்கு பூமி, பொருள் சேர்க்கை உண்டு.
* 10-ம் இடத்தில் இருந்தால், கோடீஸ்வரர். பெண்கள் மூலம் பொருள் சேரும். நவரத்தினங்கள் சேரும். யோகமான வாழ்வு ஏற்படும். வெளிநாடு செல்வார்.
* 11-ம் இடத்தில் இருந்தால், பிதுர் தோஷம் உண்டு. ஜாதகருக்கு திடீர் தனவரவு உண்டு. அசையா சொத்துக்களான நிலத்தின் மூலம் யோகம் கிடைக்கும்.
* 12-ம் இடத்தில் இருந்தால் தூக்கம் கெடும். சதா சிந்தித்துக் கொண்டே இருப்பார். அதிகச் செலவுகள் செய்பவர். சர்ப்ப தோஷமும் உண்டு.
அமிர்த கடிகை நேரம்
ராகு காலத்தை பாம்பாக வைத்து பார்த்தால், முதல் அரை மணி நேரம் தலைப்பாகம், 2-ம் அரை மணி நேரம் உடல் பாகம், 3-ம் அரை மணி நேரம் வால்பாகமும் ஆகும். இதில் இறுதி அரை மணி நேரம் தான் அமிர்த கடிகை எனும் விசேஷ காலமாகும்.
இந்த நேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமாகும், மிகவும் பலன் தரக்கூடியதும் ஆகும். இந்த நேரத்தில் பூஜைகள், பரிகாரங்கள் செய்வதால் தோஷங்கள் நீங்கி குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும்.
பூஜை முறையும் பூஜைப் பொருட்களும்
ராகுவுக்கு இல்லமோ வாரமோ இல்லாததால் எந்த கிழமையும் அவருக்கு ஏற்றதே. நீங்களே ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். முறையாக அந்த கிழமைகளில் காலை நீராடி புளிப்பு, அன்னம் உளுந்து சேர்ந்த பலகாரம் தயாரித்து நுனி இலையில் படைக்கவும். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைக்கவும். மந்தாரை மலர் கட்டி மந்தாரை மலராலேயே பூசிக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த கிழமையில் விரதம் இருப்பது அவசியமாகும். இதன் மூலம் ராகுவின் முழுமையான அருளைப் பெறலாம்.
No comments:
Post a Comment