காஞ்சி எனும் புண்ணிய தலத்திற்கு பல பெயர்கள் உண்டு. அவை பிரளய சிந்து காமபீடம், துண்டீர புரம், சத்ய விரத க்ஷேத்திரம், பூலோக கைலாயம், பிரமபுரம், சகல சித்தி கன்னி காப்பு, மும்மூர்த்தி வாசம், சிவ புரம் போன்றவையாகும். சக்தியின் முழுமையான ஆதிக்கம் பெற்ற தலம் காஞ்சி. ஆதிபராசக்தியே அன்னை வடிவில் அருளாட்சி புரிகின்றாள் இந்த காஞ்சியம் பதியில்! ‘தொண்டைநாடு சான்றோருடைத்து’ என்ற சொற்பெருமை பெற்றதும் காஞ்சி மாநகரம்! பெரும்புகழ் பெற்ற காஞ்சியில் காமாக்ஷியாய் வீற்றிருப்பவள். நீலகண்டனை அடைய பெருந்தவம் புரிந்து பெருமை பெற்றவள். காமனைப் பழிக்கும் பேரழகியான அன்னை பொற்கையில் இன்சுவை அமுதை ஏந்தி கங்காளர் காக்க தேவகர்ப்பம் பீடத்தில் அமர்பவள். சங்கரரின் அன்பில் கட்டுண்டவள். சகல லோகங்களுக்கும் தலைவி. இவளது கருணை மூகனைக் கவி பாட வைக்கும். அருட்பிரகாசம் மோகத்தை அழித்து ஞானம் தரும். அழகுத் திருவடிகள் சம்சாரக் கடலின் கரை காண உதவும். திரு நாம ஜபம் பக்தரை பாகாய் உருகச் செய்யும்.
அவளது அருட்சிறப்பை அறிஞர்களும் விளங்கிட முடியாது. கண்டு கொள்ள இயலாத கருணைப் பிரகாசமுடைய தாய் கடைப்பட்டவனையும் காக்க வல்லவள். தேவர்களுக்கு அருள் புரிந்தவள். மாமாயையான இத்தேவியை வணங்கி அருள் பெற்றோர் எண்ணிலர். இத்தேவி நீலகண்டனை அடைய பெருந்தவம் புரிந்து அடைந்த வரலாற்றை இனி காண்போம். கயிலையில் சிவனின் கண் பொத்தி விளையாடினாள் உமையவள். இதனால் அண்டங்கள் இருண்டது. இதனால் கோபம் கொண்ட சிவனின் நெற்றிக்கண் ஒளிபட்டு பார்வதி தேவி கருமை நிறம் பெற்றாள். சாபத்தின் விளைவால் காசியில் சில காலம் அன்னை பூரணியாகவும், மாங்காட்டில் பஞ்சாக்னி வளர்த்து அதன் மீது தவமிருந்து காமாட்சியாகவும் இருந்து, பல காலம் கழித்து சத்ய விரத க்ஷேத்திரமான காஞ்சியில் மணலை லிங்கமாக பிடித்து பூஜித்தாள். அச்சமயம் கம்பா நதி வெள்ளம் பெருக்கெடுத்தது. சிவனை தன் திருக்கரத்தால் கரையா வண்ணம் காத்தாள் பராசக்தி.
பஞ்சாக்னி வளர்த்து தவமிருந்து காம இச்சையை அக்னி சுட்டெரித்ததால் காமாக்ஷி எனும் பெயருடன் சாப விமோசனம் பெற்று சிவனுடன் கலந்தாள். அன்னையும் எத்துணை துன்பங்களைத் தாங்கியிருக்கிறாள்! ஆதிகாமாக்ஷி எனும் பெயர் கலைமகளையும், திருமகளையும் தனக்குக் கண்ணாக உடையவள் என்று பொருள்படுகிறது. அன்னை தன் அருளால் அன்பர்களுக்கு கல்வி நலனையும், செல்வ நலனையும் அளித்து மகிழ்விக்கிறாள். இவ்வுலகில் முப்பத்திரண்டு அறங்களையும் வளர்த்ததால் (செய்து முடித்ததால்) அறம் வளர்த்த நாயகி என்றும் பெயர் பெறுகிறாள். ஆதிபராசக்தியானவள் அறம் புரிதலும், ஈசனை என்றும் முடிவிலாப் பூஜை செய்து வழிபட்டும், பெண்ணின் நல்லாளாக, பண்பின் திருவிளக்காக இத்திருத்தலத்தில் வீற்றிருக்கிறாள். சக்தியின் முழுமையான ஆதிக்கம் பெற்ற திருத்தலம் இதுவே. ஆதிபராசக்தி தனியேயிருந்து வலக்கண்ணிலிருந்து பிரம்மாவையும், இடக்கண்ணிலிருந்து விஷ்ணுவையும், நெற்றிக் கண்ணிலிருந்து சிவனையும் தோற்றுவித்து படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலுக்கு வித்திட்டதாகவும் கூறப்படுகிறது.
அம்பாளது 51 பீடங்களுமே இந்த சக்தி பீடத்தில் அடக்கம். இப்பீடத்தின் ஸ்ரீயந்திரமானது சகல பீடங்களும் ஒன்று சேர்ந்த ஸமஷ்டிபீடம் என்றே சொல்லப்படுகிறது.
திரிபுரம் என்றால் மூன்று உலகம் என்றுபொருள். மூன்று உலகங்களிலும் இவளுக்கு நிகரான அழகி யாருமிலர். அதனால் தான் அபிராமி பட்டர் “அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி” என்றுரைத்தார். திரிபுரசுந்தரியின் அம்சமே காமாக்ஷி. முப்புரங்களும் இவள் அழகுக்கு ஈடு இணை கிடையாது. காமாக்ஷியின் கையில் உள்ள பாசம் ஆசையை அடக்குகிறது. இன்னொரு கையிலுள்ள அங்குசம் துவேஷங்களை அழிக்கிறது. புலன்களைக் கவர ஐந்து விதமான மலர்க்கணைகளை ஏந்தியிருக்கிறாள். அக்கணைகளை இழுக்க கரும்பாலான வில் கையில் ஏந்தியிருக்கிறாள். காமாக்ஷியின் திருவுருவம் தத்துவமயமானது. பண்டா
சுரனை வதம் செய்தவளும் இவளே.
இது மட்டுமா! அன்னையானவள் ஒரு சமயம் மகாலட்சுமியின் சாபத்தையும் நீக்கி அருள் புரிந்துள்ளாள். மகாலக்ஷ்மி தன் கணவரின் அழகை பரிகசித்ததால் கோபமுற்ற விஷ்ணு பரமாத்மா லக்ஷ்மியை அரூபமாகும்படி சாபமிட்டார். மிகவும் வருத்தமுற்ற தேவி பாபவிமோசனம் நீங்க வரமருள வேண்டிய பொழுது, அவர் தேவியை மண்ணுலகம் சென்று காமாட்சியை நோக்கி தவமிருக்கும்படி கூறினார். அன்னை மகாலக்ஷ்மியும் அவ்வாறே செய்தார். தவத்தில் மகிழ்ந்த கமாக்ஷி தேவி மகாலக்ஷ்மியை தன் இடப்பக்கத்தில் தவம் செய்ய அருள் புரிந்ததோடு அரூபியான தேவியின் மேல் காமாட்சியை பூஜிக்கும் குங்குமம் படும்படி செய்து பழையபடி அழகுபெற்று நாராயணரின் சாபம் நீங்கி சௌந்தர்யலக்ஷ்மியாக கள்வர் பெருமானுடன் மறுபடியும் ஒன்றானாள். இதனாலே இவ்வாலயம் வைணவத் திருப்பதியாகவும் போற்றப்படுகிறது.
என்னை நாடிவரும் பக்தர்களுக்கு கிடைக்கும் மஞ்சள் குங்குமப் பிரசாதத்தை உன் மீது சாத்திய பிறகே அணிந்து கொள்வார்கள். அதன் காரணமாக நீ சுய வடிவம் பெருவாய் என காமாட்சி தேவி அருள் பாலிக்க, ஸ்ரீ மகாலக்ஷ்மி தேவியின் இடது பக்கம் இன்றுவரை அமர்ந்து கொண்டு அன்னையை நோக்கித் தவம் செய்து வருகிறாள். காஞ்சி காமாட்சியின் குங்குமம் பிரசாதத்தை அஞ்சன காமாட்சியாக விளங்கும், மஹாலக்ஷ்மியின் மீது சாத்திய பின்னரே நாம் அணிந்து கொள்ள வேண்டும். ஷெண்பக மலர்களால் சூழப்பட்ட காஞ்சி தலத்திற்கு ‘ஷெண்பகாரண்யம்’ என்ற பெயரும் உண்டு. கேரளாவின் காலடியில் தோன்றி பாரத தேசம் முழுவதும் பயணம் செய்து ‘அத்வைத’ சித்தாந்தத்தை பரப்பிய, சிவபெருமானின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ஆதி சங்கரர், தன் கடமைகளையெல்லாம் முடித்து விட்டு இறுதியில் காஞ்சியில் தங்கி, ஸ்ரீ காமாட்சி அம்மனை வழிபட்டு அவளது பாதார விந்தங்களில் இரண்டறக் கலந்தார்.
அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒட்யாண பீடம் எனும் காமகோடி சக்தி பீடமாகத் திகழ்வது காஞ்சி காமாட்சியம்மன் ஆலயமாகும். காம கோட்டம் என்றால் விரும்பியவற்றையெல்லாம் தருவது என்று பொருள்.காமாட்சியை வலம் வந்து வரம் கேட்டால் தட்டாது தருவாள் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத
நம்பிக்கை. ஆலயத்தில் பலிபீடம் அஸ்திரதேவி எனும் தேவியோடு அபூர்வமாக உள்ளது தங்க கோபுரத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. தேவி காமாட்சி சக்கரமாகவும் விளங்குகின்றாள். இந்த பீடத்தில் திருமியச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை தேவியின் திருவுளப்படி அரங்கேற்றிய வஸின்யாதி வாக்தேவதைகள் எண்மரையும் உருவாக்கி உள்ளனர். காஞ்சியில் ஒரு காலத்தில் அம்மன் மிக உக்கிரமாக விளங்கினாளாம். ஆகையால் இந்த ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினாராம்.
இவருக்கு இக்கோயிலில் தனி சந்நதி உண்டு. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார். இன்றும் காமாட்சி திருவீதியுலா செல்லுமுன்னும் வீதியுலா முடிந்து ஆலயத்துள் நுழையும்போதும் ஆதிசங்கரர் முன் நின்று அவருக்கு தரிசனமளிப்பது வழக்கம். தல விருட்சமாக ஷெண்பக மரமும் தல தீர்த்தமாக பஞ்சகங்கையும் உள்ள தலம் இது. இத்தலத்தில் உள்ள அம்மன் பக்தர்களை தன் குழந்தைகளைப் போல் பார்ப்பதால் வேண்டிய வரங்கள் எல்லாமே கொடுத்தருள்கிறாள். அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மனநிம்மதியும் ஏற்படுகிறது. இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதைத் தவிர திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் ஏற்படுவதில்லை.
எனவே நவகிரக தோஷங்கள் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடல் நலம். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தசரத சக்கரவர்த்தி இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்ததால் தான் ராம, லட்சுமணர்கள் பிறந்தனர் என்று கூறப்படுவதுண்டு. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சந்நதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழ்கிறாள். கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி உள்ளது பலர் பார்த்திராத ஒன்று. இவ்வாலயத்தினுள் முதல் பிராகாரத்தின் மத்தியில் உள்ள காயத்ரி மண்டபத்தின் மத்தியில்தான் காமாட்சி அம்மன் வீற்றிருக்கிறாள். இம்மண்டபத்தினுள் 24 ஸ்தம்பங்கள் (தூண்கள்) உள்ளன.24 அட்சரங்கள் 24 தூண்களாக காட்சியளிப்பது இங்கு சிறப்பு.
இதேநிலையில் இதே போல் மண்டபத்தின் கீழே இருப்பதாவும் ஐதீகம். அதனால் தான் விவரம் அறிந்தவர்களாக இருப்பின் காயத்ரி மண்டபத்திற்குள் சென்று நின்று வணங்கமாட்டார்கள். காரணம் அம்பாள் மீதே நிற்ககூடாது என்ற அச்சம்தான் என்றும் கூறுகின்றனர். இங்கு காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் உள்ளனர். காமாட்சி தேவி காரடையான் நோன்பு மேற்கொண்டு கம்பாநதி வெள்ளப் பெருக்கிலிருந்து ஈசனைக் காப்பாற்றியதால் இத்தலத்தில் காரடையான் நோன்பு விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. அம்பிகை ஸ்ரீசக்ரத்தில் பிந்து மண்டல வாஸினியாக முக்கோணத்துள் அருள்பவள் என்று கூறப்பட்டுள்ளதால், கருவறை முக்கோண வடிவில் அமைந்துள்ளது. வாராஹியின் எதிரே உள்ள சந்தான ஸ்தம்பத்தை வலம் வந்து வணங்குபவர்களுக்கு மழலை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் மேற்கு, காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் உள்ள அன்னபூரணியை தர்மத்வாரம், பிக்ஷத்வாரம் போன்ற துவாரங்கள் மூலமும் தரிசிக்கலாம்.
பிக்ஷத்வாரத்தின் மூலம் அன்னபூரணியை வணங்கி ‘பவதி பிக்ஷாம்தேஹி’ என கையேந்தி பிச்சை கேட்டு வழிபட்டால் நம் வாழ்வில் உணவுப் பஞ்சம் வராது என்கிறார்கள். கனிவான தன் கண் வீச்சிலேயே பக்தர்களைக் காப்பதால், அன்னை தன் கரங்களால் அபய, வரத முத்திரைகளைக் காட்டவில்லை.காமாட்சியை வழிபட வரும் ஆண்கள் மேலாடை அணிந்திருக்கக் கூடாது என்பது இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் ஒன்று.இங்கு எழுந்தருளும் முன் செங்கழுநீரோடை பிள்ளையார் கோயில் தெருவில் ஆதிகாமாட்சியாக கோயில் கொண்டாள், தேவி.ஆகவே ஆதிகாமாட்சியை தரிசிப்பதும் அவசியம்.ஆதிசங்கரருக்கே இத்தலத்தில் முதல் மரியாதை. அவரது அனுமதி பெற்றே அம்பாள் வீதியுலா வருவாள். அப்போது அம்பாளை நோக்கியபடியே உலா வருவார் ஆதிசங்கரர். அம்பிகையின் கருவறை விமானமும், ஆதிசங்கரரின் விமானமும் தங்கத்தால் ஆனவை.
ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு நவாவரண பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று ஏலவார்குழலியம்மன், ஏகாம்பரநாதர் திருமணம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும். அதே சமயம் நூற்றுக்கணக்கான பக்த ஜோடிகளுக்கும் திருமணமும் நடக்கும். காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் அவற்றில் அம்மன் சந்நதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழ்கிறாள். காமாட்சி அம்பாள் சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் காமகோடி காமாட்சி என அழைக்கப்படுகிறாள். கோயிலின் உள்ளே பிராகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன.இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வெளிப்பிராகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம்.சக்தியாக இருக்கும் அன்னை காமாட்சியை வணங்கி ,எல்லா வளங்களும் பெறுவோமாக!
No comments:
Post a Comment