Sunday, 22 April 2018

மீனாட்சி கல்யாண வைபோகமே



ஏப்.27- மீனாட்சி திருக்கல்யாணம்

தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி 

உலகத்திற்கே படியளப்பவள் அன்னை மீனாட்சி. அவள் மீது கொண்ட பக்தியால் மன்னர்களும், பக்தர்களும் பலவித ஆபரணங்களை அணிவித்து அழகு பார்த்தனர். அதிலும் திருமணம் என்றால் விசேஷமான நகை அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா என்ன! அதனால் மீனாட்சி கல்யாணத்தன்று இன்றும் அம்மன், சுவாமிக்கு பிரத்யேகமான நகைகளை அணிவர். 

சுவாமியின் தலையில் நீலக்கற்கள் பதித்த கிரீடம், தங்க பூணுால், கைகள் முழுக்க ரத்தின அலங்காரம், கையில் தங்க பூச்செண்டு, மார்பில் தங்க கவசம், நளமகாராஜா கொடுத்த பதக்கம் ஆகியவை அணிவிக்கப்படும்.

மீனாட்சி கழுத்து முதல் பாதம் வரையில் தங்க அங்கி, தலையில் தங்க கிரீடம், தங்கக்கிளி அல்லது தங்க செங்கழு நீர் மலர், வைரத்தாலி ஆகிய ஆபரணங்கள் அணிந்து பைங்கிளியாக திகழ்வாள். 

திருக்கல்யாணம் ஏன்?

ஒரு செயல் நடக்க இரண்டின் சேர்க்கை அவசியம் என்பதே திருக்கல்யாண தத்துவம். மின்சாரத்தில் பாசிடிவ், நெகடிவ் ஆற்றல் இணைந்தே ஒளி உண்டாகிறது. சக்தி, சிவம் இணைந்தே உயிர்கள் உருவாகின்றன. இறைவனை விட்டு என்றும் நீங்காத தன்மை கொண்டவள் தேவி. பாலில் சுவை போலவும், தீயில் சூடு போலவும் கடவுளுடன் இணைந்து இருப்பவள். மலையத்துவஜ பாண்டியனின் மகளாக 'மீனாட்சி' என்ற பெயரில் அவதரித்து அவரை கணவராக அடைந்தவள். இந்த சக்திகள் இணைவதை 'திருக்கல்யாணம்' என்ற பெயரில், திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

மதுரையில் வாழ்ந்தால் என்ன கிடைக்கும்?

பரம்பொருளாகிய சிவபெருமான் 64 திருவிளையாடல் நிகழ்த்திய தலம் மதுரை. இது 'பூலோக சிவலோகம்' என அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் பெருமை பெற்ற தலம் இது. சிவத்தலங்களில் காசி, காளஹஸ்தி, சிதம்பரம், மதுரை ஆகிய நான்கும் சிறந்தவை. காசியில் இறந்தாலும், காளஹஸ்தியில் சிவபூஜை செய்தாலும், சிதம்பரத்தில் தரிசித்தாலும், மதுரையில் வாழ்ந்தாலும் மோட்சம் கிடைக்கும்.

கல்யாணயோகம் கைகூட...

சுந்தரேஸ்வரர், மீனாட்சி, திருமணம் செய்து வைக்கும் மகாவிஷ்ணு ஆகிய மூவரும், மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள கல்யாண சுந்தரர் சன்னதியில் காட்சி தருகின்றனர். இது சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. திருமண யோகம் உண்டாகவும், திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் இங்கு வழிபடுகின்றனர்.

கிளி ரகசியம்

மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். பாண்டியனின் மகளாக பிறந்த மீனாட்சி, கிளிகளை வளர்த்து மகிழ்ந்தாள். பக்தர்களின் கோரிக்கைகளை, அம்மனிடம் நினைவூட்டும் பணியை இந்த கிளி செய்கிறது. 
இந்திரன் சாப விமோசனம் பெற பூலோகம் வந்த போது மதுரைக்கு வந்தான். அப்போது சிவன், சொக்கலிங்கமாக எழுந்தருளியிருந்த இங்கு, கிளிகள் வட்டமிட்டபடி சிவநாமத்தை சொல்லிக் கொண்டு பறந்தன. அவைகள் வழிகாட்ட சிவனின் இருப்பிடத்தை இந்திரன் அடைந்தான். இதனால் கிளி முக்கியத்துவம் பெற்றது.

ஆண்டுக்கு 'ஆறு'!

எல்லா கோயில்களிலும் வருடத்திற்கு ஒருமுறை விழா நடக்கும். ஆனால் மீனாட்சி கோயிலில் ஆண்டு முழுவதும் விழா நடக்கிறது. சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடியில் முளைக் கொட்டு உற்ஸவம், ஆவணியில் பிட்டுத்திருவிழா, கார்த்திகையில் தீபத்திருவிழா, தையில் தெப்பம், மாசியில் மண்டல உற்ஸவம் என்னும் ஆறு விழாக்களுக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்றுவர். முளைக்கொட்டு விழா, அம்மனுக்கு உரியது என்பதால் மீனாட்சி சன்னதியில் கொடியேற்றுவர். 

வைகாசி வசந்த உற்ஸவம், ஆனி ஊஞ்சல் உற்ஸவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கோலாட்டம், மார்கழியில் மாணிக்கவாசகர் உற்ஸவம், அம்மனுக்கு எண்ணெய் காப்பு விழா மற்றும் பங்குனி பவித்ரோத்ஸவம் ஆகிய ஆறு விழாக்களுக்கு காப்பு மட்டும் கட்டுவர்.


உங்களுக்கு தெரியுமா?

* ஆனி பவுர்ணமியன்று மீனாட்சியம்மனுக்கு உச்சிக்கால பூஜையில் முக்கனி அபிஷேகம் செய்கின்றனர்.

* மீனாட்சி அம்மனின் சிறப்பே மாணிக்க மூக்குத்த தரிசனம்தான். தமிழ்புத்தாண்டு, ஆங்கிலப்புத்தாண்டு, தை அமாவாசை ஆகிய நாட்களில் வைர கிரீடம் அணிந்த அலங்காரத்தில் அம்மனை தரிசிக்கலாம்.

* மீனாட்சி சன்னதி எதிரிலுள்ள கோபுரத்தை சித்திரக்கோபுரம் என அழைப்பர். இதிலுள்ள 25 முகம் கொண்ட சதாசிவ சிற்பம் அற்புதமானது இதனை பொற்றாமரைக் குளக்கரையில் உள்ள துலாபார தூண் அருகில் நின்று பார்க்கலாம்.

* பொற்றாமரைக் குளத்தின் வடக்கு கரையில் உள்ள தூண்களில் மதுரை நகரை நிர்மாணித்த மன்னர் குலசேகர பாண்டியன், தனஞ்செயன் என்ற வணிகரின் சிலைகள் உள்ளன.

No comments:

Post a Comment