புத்தர் ஒரு கிராமத்துக்கு சென்றார். அவருடைய போதனைகளை கேட்ட மக்கள், “இந்த மனுஷன் செய்யும் போதனைகளை கேட்டால் இல்லற எண்ணம் மாறி, துறவற வாழ்க்கை மீது பற்று வந்து விடும் போல் இருக்கிறதே,” என கருதினர். இனிமேல் இவருக்கு மரியாதை தரக் கூடாது என்று தீர்மானித்தனர்.
புத்தர் மீது களங்கம் சுமத்தி பலவகையில் இழிவான சொல்லாலும், தீய வார்த்தைகளாலும் திட்டினர். புத்தர் பொறுமையுடன் அதை ஏற்றார். இவ்வளவு செய்தும், அவர் எதிர்ப்பு காட்டாதது மக்களுக்கு வியப்பாக இருந்தது. குழம்பிப் போன மக்கள் அவரிடமே விளக்கம் கேட்டனர்.
எந்தவித சலனமும் இல்லாமல் புத்தர் சொன்னார். “நான் ஒரு கிராமத்திற்கு நேற்று சென்றிருந்தேன். அங்கே உள்ள மக்கள் என்னை அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்றனர். என் பசியை போக்க நிறைய பழம் கொடுத்தனர். ஆனால், அவற்றை நான் ஏற்று கொள்ளவில்லை. அவர்களிடமே கொடுத்து விட்டேன். அதே போல நீங்கள் பேசிய இழிவான பேச்சையும், உங்களிடமே திருப்பி கொடுத்து விட்டேன். எனக்கு சுவையான பழங்களும் ஒன்று தான், பழிச்சொல்லும் ஒன்று தான்,” என்றார். மக்கள் பதிலளிக்க முடியாமல் மவுனமாகி விட்டனர்.
மற்றவர்களிடம் இருந்து நம் செயல்களுக்கு பாராட்டும் கிடைக்கும், அவமதிப்பும் உண்டாகும். ஆனால், அதை பெரிதுபடுத்தக்கூடாது. அது மட்டுமல்ல!
நாம் என்ன செய்கிறோமோ, அதுவே நம்மை திரும்ப வந்தடையும். எனவே, நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். மனதால் நல்லதையே நினைக்க வேண்டும்.
No comments:
Post a Comment