ராவணன் சகோதரர் விபீஷணனை காட்டில் சில அந்தணர்கள் சிறை பிடித்ததாக ராமர் கேள்விப்பட்டார். நேரில் சென்ற ராமர், கட்டப்பட்ட நிலையில் விபீஷணன் இருப்பது கண்டு அதிர்ந்தார். ராமரை கண்ட அந்தணர்கள் பணிவுடன் வணங்கினர். பழங்கள் அளித்து உபசரித்தனர்.
விபீஷணரை தேடியே ராமர் வந்திருப்பதை உணர்ந்து, ''சுவாமி! தர்ப்பை சேகரிக்க முதிய அந்தணர் ஒருவர் காட்டுக்கு வந்திருந்தார். எப்போதும் மவுன விரதமிருக்கும் அவரைக் கண்ட விபீஷணன் பேச முயற்சித்த போது, அவர் பொருட்படுத்தவில்லை. கோபம் கொண்ட விபீஷணன் காலால் உதைக்க, அந்தணர் உயிர் துறந்தார். அதனால் இவனைக் கட்டி வைத்த சமயத்தில் உத்தமரான நீங்களே வந்து விட்டீர்கள். இவனுக்கு தண்டனை வழங்குங்கள்'' என்றனர்.
ராமர், “இவன் என் பணியாளன். பணியாளனின் செயலுக்கு எஜமானனே பொறுப்பு என்பதால் இவனுக்குரிய தண்டனையை நான் ஏற்பது தான் சரி” என்றார். அதை கேட்ட அந்தணர்களின் உள்ளம் நெகிழ்ந்தது.
விபீஷணனுக்கு கொலை செய்யும் நோக்கம் இல்லை என்பதையும், அந்தணரின் மரணம் தற்செயலாக நடந்தது என்பதையும் உணர்ந்தனர். ராமருடன் விபீஷணனை அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment