Friday, 13 April 2018

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்



விவசாயி ரங்கசாமி, சொற்ப வருமானத்தில் வாழ்ந்தார். ஒருநாள், அவர் வளர்த்த குதிரை காணாமல் போனது. இதையறிந்த பக்கத்து வீட்டுக்காரர் கோவிந்தசாமி, ''என்ன துரதிர்ஷ்டமான நிலை உனக்கு?'' என பரிதாபம் கொண்டார். ''இருக்கலாம்'' என்றார் ரங்கசாமி.

மறுநாள் காணாமல் போன குதிரை, மூன்று குதிரைகளுடன் திரும்பி வந்தது.
ஓடி வந்த கோவிந்தசாமி, '' ரொம்ப அதிர்ஷ்டசாலி நீ தானப்பா...'' என்றார். இதற்கும் சிரித்தபடி, ''இருக்கலாம்'' என்றார் ரங்கசாமி.

சில நாட்களுக்கு பின், ரங்கசாமியின் ஒரே மகன் புதிய குதிரை மீது சவாரி செய்ய முயன்றான். பழக்கப்படாத காரணத்தால் திமிறிய குதிரை, அவனை கீழே தள்ளியது. இளைஞனின் வலது கால் முறிந்தது. 

ரங்கசாமியிடம், ''என்னப்பா நல்லது நடந்தா, அடுத்து கெட்டது நடக்குதே. உன் மகன் எழுந்து நடக்க ஆறு மாசம் ஆகும் போலிருக்கே. ரொம்ப கஷ்டமான நிலைமை தானப்பா...'' என்று ஆதங்கப்பட்டார் கோவிந்தசாமி. இப்போதும் ''இருக்கலாம்'' என்றார் ரங்கசாமி.

ஒரே வாரத்தில், எதிரி மன்னன் நாட்டின் மீது படையெடுத்ததால் போர் மூண்டது. 'வீட்டுக்கு ஒரு இளைஞன் போரில் பங்கேற்க வேண்டும்; மீறினால் சிறைத்தண்டனை வழங்கப்படும்'' என மன்னன் உத்தரவு பிறப்பித்தான். படைவீரர்கள் வீடு வீடாக வந்து, இளைஞர்களை அழைத்து சென்றனர். கால் முறிந்த ரங்கசாமியின் மகனுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தனர். ''கால் முறிஞ்சது கூட நல்லது போலிருக்கே.... உன்னை போல அதிர்ஷ்டசாலி வேறு யாருமில்லை. '' என்றார் கோவிந்தசாமி. ''இருக்கலாம்'' என சிரித்தபடி, கோவிந்தசாமி...! 

நல்லதும், கெட்டதும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல! இதில் யாருக்கு எந்த பக்கம் என்பது நம் கையில் இல்லை. சந்தோஷமான சூழலில் தலைக்கனம் இல்லாமலும், கஷ்டமான சூழலில் மனம் துவளாமலும் இருந்தால் போதும்.'' என்றார் ரங்கசாமி.

No comments:

Post a Comment