கணவன் - மனைவிக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளை நீக்கித் தம்பதியர்களை ஒன்று சேர்த்து வைக்கும் தலமாகக் கேரள மாநிலம், திருவஞ்சைக்களம் மகாதேவர் கோவில் அமைந்திருக்கிறது.
இந்த ஆலயத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். இங்கு அம்மனுக்கான தனிச் சன்னிதி இல்லை. கருவறையினுள் இறைவனுடன் அம்மன் இணைந்து, சதாசிவ (உமாமகேசுவர) நிலையில் கிழக்கு நோக்கியபடி இருக்கிறார். இக்கோவில் இறைவன் மகாதேவர், அஞ்சைக்களத்தீசுவரர் எனும் பெயர்களிலும், அம்மன் ‘உமையம்மை’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இந்த ஆலயத்தில் தினமும் மாலை வேளையில் ‘தம்பதி பூஜை’ நடத்தப்படுகிறது. அதன் பிறகு, ‘பள்ளியறை பூஜை’ நடைபெறுகிறது. இந்தப் பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடும் தம்பதியர்களுக்கு, விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும். கணவன்- மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்தால் அவை நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். பவுர்ணமி நாளன்று நடைபெறும் இப்பூஜைகளில் கலந்துகொள்வது மிகவும் சிறப்புக்குரியது என்கின்றனர். இந்தப் பூஜைகளில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கேரள மாநிலம், கொச்சியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சூரிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் கொடுங்கலூர் சென்று, அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் திருவஞ்சைக்களம் சென்றடையலாம்.
No comments:
Post a Comment