
உலக முடிவு காலத்தை கற்பாந்த காலம் என்று கூறுவார்கள். இதனை ஊழிக்காலம், உகாந்த காலம் என்றும் சொல்வார்கள். உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனையும், இறை வழிபாட்டையும் மறந்து, துறந்து, தீயச் செயல்களைச் செய்யத் தொடங்கும்போது, பஞ்சமா பாதகங்களும் தயவு தாட்சண்யம் இன்றி நடைபெறும். இறைவனை மறந்து எதையும் செய்யலாம் என்று மக்கள் நினைக்கும் நிலை உண்டாகும் காலமே உலகத்தின் முடிவு காலமாகும்.
இறைவனை பூஜித்த அம்பாள்
ஒரு முறை இதுபோன்ற ஊழிக்காலத்தின் போது ஏற்பட்ட பிரளயத்தில் (வெள்ளப்பெருக்கு) உலக உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அப்போது ஈசனின் இடப்பாகம் அமர்ந்த அன்னையானவள், சிவபெருமானை வழிபட்டு, அவரின் அருளைப் பெற்றாள். அழிந்துபோன உயிர்கள் அனைத்தும் முக்தியை அடையவேண்டும் என்று அன்னை, சிவனை வேண்டி வரம்பெற்றாள். அவ்வாறு அம்பாள், சிவபெருமானை வேண்டி தவம் இருந்து வரம் பெற்ற இரவே மகாசிவராத்திரி என்று கூறப்படுகிறது.
மகாசிவராத்திரி அன்று இரவு, சிவபெருமானை நான்கு யாம காலத்திலும் பூஜித்து வழிபட்டால் அவர்கள் முக்தியை அடைவார்கள்.
இதே போல் மற்றொரு கதையும் மகாசிவராத்திரி தோன்றியதற்கான காரணமாக கூறப்படுகிறது. படைப்புத் தொழிலை செய்து வந்த பிரம்மாவுக்கு, உலகை சிருஷ்டிக்கும் தன்னை விட உலகில் உயர்ந்தவர் எவரும் இல்லை என்ற எண்ணம் தோன்றியது. அந்த செருக்குடன், வைகுண்டம் சென்ற அவர் மகாவிஷ்ணுவிடம், உலக உயிர்களை தோற்றுவிக்கும் தானே உலகில் சிறந்தவன் என்று கூறினார்.
இதனால் மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மதேவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு போர் மூண்டது. நூறு வருட காலம் இந்த போர் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஈசன் நெருப்பு பிழம்பாக தோன்றி, எனது அடி, முடியை யார் கண்டு வருகிறார்களோ அவர்களே உலகில் உயர்ந்தவர் என்று கூறினார். அவர் நெருப்பு பிழம்பாக தோன்றி, திருமாலுக்கும், பிரம்மதேவருக்கும் காட்சி கொடுத்த இரவே மகாசிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.
பூஜை செய்வது எப்படி?
மகாசிவராத்திரி பூஜையை வீட்டில் செய்ய விரும்புபவர்கள் அதிகாலையில் நீராடி, தூய ஆடைகளை அணிந்து பகல் முழுவதும் ஜெபம், தியானம், பாராயணம் போன்றவைகளில் ஈடுபட வேண்டும். மாலையில் வீட்டில் ஒரு தூய்மையான இடத்தில் அல்லது பூஜை அறையில் சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
இரவு 4 காலமும் பூஜை செய்ய வேண்டும். இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் லிங்கோற்பவ காலத்திலாவது கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்ய வேண்டும்.
அதிகாலை 3 மணிக்கு வில்வ இலை மற்றும் மலர்களால் தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து ‘சிவாய நம நமசிவாய’ என மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான பாடல்கள் கதைகளை கேட்கலாம். சினிமா, டி.வி. பார்க்கக் கூடாது.
முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், காய்கறி ஆகியவற்றையும், வில்வ பழத்தையும் நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் ஜாமத்தில் லட்டு, பலாப்பழத்தையும், மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயசம், மாதுளை பழங்களையும் நிவேதனம் செய்து வணங்கி வழிபட வேண்டும்.
நான்காம் ஜாமத்தில் கோதுமையால் செய்யப்பட்ட பலகாரம் மற்றும் கிடைக்கும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஜாமத்தில் பூஜை முடிந்ததும் தன்னால் முடிந்த அளவு தானங்கள் செய்ய வேண்டும். விடிந்ததும் நீராடி, நித்ய கடன்களை முடித்து விட்டு சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
விரதம் தரும் பலன்
சிவராத்திரியன்று விரதம் இருந்தால் முக்தி கிடைக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல கணவன் கிடைப்பார்கள். அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும். கோடி பாவங்கள் தீரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
சிவராத்திரி விரதம் இருந்து தான் பிரம்மா, சரஸ்வதி தேவியை மனைவியாக பெற்றதுடன் உலக உயிர்களை படைக்கும் பதவியை அடைந்தார். மகாவிஷ்ணு விரதம் இருந்து சக்ராயுதம் பெற்றதுடன், மகா லட்சுமியையும் உயிர்களை காக்கும் உன்னத பதவியையும் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மகத்துவம் நிறைந்த இந்த மகா சிவராத்திரி விரதத்தை முறைப்படி செய்பவர்கள் முக்தியை எய்துவர். இந்த விரதத்தை 24 ஆண்டுகள் செய்து வர வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் 12 ஆண்டுகளாவது தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். இதனால் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவதுடன், அவர்களின் சந்ததியில், வரும் 21 தலைமுறையினருக்கும் பலன் கிட்டும்.
No comments:
Post a Comment