Wednesday 18 April 2018

அட்சய திருதியில் வாங்குவதைவிடக் கொடுப்பதில்தான் பலன் அதிகம்

akshaya-tritiya1

வறுமையில் வாடிய குசேலன் தன் பால்ய நண்பன் கிருஷ்ணரை சந்தித்து உதவிக் கேட்க புறப்பட்டார். ஒருபிடி அவலைக் கிருஷ்ணனுக்கு எடுத்துக்கொண்டு சென்றார். குசேலனைப் பார்த்ததும் கிருஷ்ண பகவான் அவர் அன்போடு கொண்டு வந்த அவலை மகிழ்ச்சியுடன் எடுத்து உண்டார். அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து அட்சயம் உண்டாகட்டும் என்று வாழ்த்தினார்.

அதே கணத்தில் குசேலனின் குடிசை வீடு மாடமாளிகையாக மாறியது. அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவரது வீட்டில் குடியேறின. பகவான் கிருஷ்ணர் இன்னொரு வாய் சாப்பிட அவலை எடுத்தார். உடனே மகாலட்சுமியின் அம்சமான ருக்மணி, தடுத்தார்.

ஏன் தடுக்கிறாய்? என்று கிருஷ்ணன் கேட்க, ஒரு பிடி சாப்பிட்டதற்கே குசேலனின் வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் குவிந்துவிட்டன. இன்னும் ஒரு பிடி சாப்பிட்டால், மகாலட்சுமியான நானே அவன் வீட்டுக்குப் போக வேண்டியதுதான் என்றாராம். இந்த அற்புதம் நிகழ்ந்தது அட்சய திருதியை நாளாகும்.

அட்சய திருதியைக்கு காரணகர்த்தா ஆதிசங்கரர். ஓர் ஏழைப்பெண்ணின் வீட்டு வாசலில் நின்று "பவதி பிட்சாம் தேஹி' என்று பிட்சை கேட்டார். அந்தப் பெண் தன்னிடமிருந்த உலர்ந்த நெல்லிக்கனியைத் தானமாகக் கொடுத்தார்.

ஏழைப் பெண்ணின் இந்த ஈகைக் குணம் ஆதிசங்கரரைப் பெரிதும் கவர்ந்தது. இதுபோன்ற மனிதர்களிடம் செல்வம் இருந்தால்தான் செல்வத்துக்கு அழகு என்றெண்ணி, மகாலட்சுமியைத் துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார்.

இதில் மகிழ்ந்த மகாலட்சுமி, இவர், 19-ம் ஸ்லோகம் பாடியபோது, அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனியை மழையாகப் பொழிய வைத்தாள். கனகதாரா ஸ்தோத்திரம் பாடிய நாள்தான் அட்சய திருதியை!

அட்சய திருதியை என்பது செல்வ வளம் தரும் நாளாகப் போற்றப்படுகிறது. அன்றைய தினம் மகாலட்சுமி அனைவரின் வீட்டிற்கும் வருகிறாள் என்பது ஐதீகம்!

உண்மையில் அட்சய திருதியைக்கு வாங்குவதைவிடக் கொடுப்பதில்தான் பலன் அதிகம். அன்றைய தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் பொருள் வாங்குவது ஒருபுறம் இருந்தாலும், அன்று செய்யப்படும் தானங்கள், பல ஆயிரம் பலன்களைப் பெற்றுத்தரும்.

நம் சக்திக்கு ஏற்ப தானம் செய்தால் போதும். வீட்டில் சமைக்கும் சாதத்தில் தயிர் ஊற்றிப் பிசைந்து இயலாதோருக்குக் கொடுங்கள். ஒருவருக்குக் கொடுத்தால் கூட ஆயிரம் பேருக்கு கொடுத்தப் புண்ணியம் கிடைக்குமாம்.

No comments:

Post a Comment