“சுவாமி மலையில் இப்போதும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர் ஒருவர் இருக்கிறார். நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?” மதுரையில் இருந்து ஒரு அன்பர் கேட்டார். இவர் மிகச் சிறந்த சித்தர் ஆர்வலர். தமிழ்நாட்டில் எந்தெந்த ஊர்களில் சித்தப்புருஷர்கள் இப்போது உயிரோடு இருந்து அருள்பாலித்து வருகிறார்கள் என்ற தகவல்களை தேடி.... தேடி கண்டுபிடித்து அவர்களிடம் ஆசி பெற உடனே அந்த ஊருக்கு சென்று விடுவார்.
வாழ்ந்து வழிகாட்டிய சித்தர்களிடம் மட்டுமின்றி வாழும் சித்தர்களிடமும் ஆசி பெற்றவர். அந்த வகையில்தான் அவர் நம்மிடம், “சுவாமி மலையில் வாழும் சித்தரைப் பார்த்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“சுவாமி மலையில் வாழும் சித்தரா.... இல்லையே!” என்றோம்.
“என்னங்க... நீங்க! அவர் எவ்வளவு பெரிய மகான் தெரியுமா? தமிழகத்தில் தற்போது உயிரோடு இருக்கும் சித்தர்களில் மிக, மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் அவர்தான். உடனே போய் பாருங்கள்” என்றார்.
அவரது இந்த அறிவுறுத்தல், சுவாமி மலையில் வாழும் சித்தர் பற்றிய ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
“சார்... சுவாமிமலையில் வாழும் அந்த சித்தரின் உண்மையான பெயர் என்ன?” என்று கேட்டோம். அதற்கு அவர், “பிரகாசம் சுவாமிகள்” என்றார். “அந்த சித்தருக்கு எந்த ஊர்? பெற்றோர் யார்? வயது என்ன இருக்கும்? சுவாமி மலையில் அவர் எங்கு தங்கி இருப்பார்?” என்று அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பினோம்.
அதற்கு அவர், “நதி மூலம், ரிஷி மூலம் எல்லாம் எனக்குத் தெரியாது. அதில் நான் ஆர்வம் காட்டுவதும் இல்லை. அது தேவையில்லாத வேலை. அந்த மகான் மகத்துவம் நிறைந்தவர் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரியும். நிறைய பேரின் கர்மாவை தனது ஓரக்கண் பார்வை யாலேயே கரைத்து விடும் சக்திப் பெற்றவர். நேரில் போய் பார்த்தால்தான், இந்த உண்மையெல்லாம் உங்களுக்குப் புரியும். தாமதம் செய்யாமல் போய் வாருங்கள்” என்றார்.
அடுத்த சில தினங்களில் கும்பகோணத்துக்கு புறப்பட்டு விட்டோம். சுவாமிமலையில் தங்கி, குளித்து புறப்பட சரியான விடுதிகள் இல்லாததால் அருகில் உள்ள பெரிய ஊரான கும்பகோணத்துக்கு சென்றோம். கும்பகோணத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் சுவாமி மலை இருக்கிறது.
கும்பகோணத்தில் இருந்து சுவாமி மலைக்கு அடிக்கடி டவுண் பஸ் வசதி உள்ளது. 9 ரூபாய் கட்டணம். சுமார் 15 முதல் 20 நிமிடங்களில் சுவாமிமலைக்கு சென்று சேர்ந்து விடலாம்.
சுவாமிமலைக்கு வந்து விட்டோம்......
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு இருக்கும் இடம் இது. பழங்காலத்தில் சுவாமிமலைக்கு, “திருவேரகம்” என்று பெயர். புராணங்களில் இந்த ஊர், இந்த பெயரில்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தலத்து முருகனை சிறப்பித்து பல பாடல்கள் பாடியுள்ளார். அதில் 226-வது பாடலில், “இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து..... அமுதவேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சுவாமிமலை தலம், பிறவியை வேரறுக்கும் தலம் என்பது உறுதியாகிறது.
பிறவியை வேரறுப்பது என்பது என்ன, அவ்வளவு சாதாரண விஷயமா? அதை அறுத்து விடுவதற்கு ஆத்ம ஞானம் பெற்றவர்களே அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது, ஆத்ம மேம்பாட்டில் அரைகுறை ஞானத்துடன் இருப்பவர்கள் என்ன பாடுபட வேண்டியதிருக்கும்.ஆனால் கொஞ்சம் முயற்சி செய்தால், பைசா செலவில்லாமல் அனைவரும் ஆத்மஞானம் பெற்று பிறவியை வேரறுத்துக் கொள்ள முடியும். இதை உங்களால் நம்ப முடிகிறதா?
சுவாமிமலையில்தான் இந்த அதிசயம் தினம், தினம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஜென்மத்துப் பிறவியை நிறைவு செய்யும் முன்பு, அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வாழ்வை ஆனந்தமாக, நிறைவாக முடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு சுவாமி மலையில் விடை கிடைக்கிறது. அந்த விடையை நமக்குத் தருபவர், சுவாமிமலையில் சித்தர் பிரகாசம் சுவாமிகள்.
சுவாமிமலை முருகனை “தகப்பன் சாமி” என்று சொல்வார்கள். அதாவது அப்பனுக்கே பாடம் சொன்ன சாமி அவர். அவரது அம்சமாகத் திகழும் பிரகாசம் சுவாமிகளும் தகப்பன் சாமியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முருகப்பெருமானுடன் ஒரு சித்தரை எப்படி ஒப்பிடலாம் என்று உங்களில் பெரும்பாலானவர்களுக்கு கேள்வி எழலாம். ஆனால் அது நிதர்சனமான உண்மை என்பதற்கு பிரகாசம் சுவாமிகளை தினம் தினம் தேடி, நாடி வரும் பக்தர்களே சாட்சி.
சுவாமிமலை முருகன்-தெய்வம், பிரகாசம் சுவாமிகள்- கண் கண்ட தெய்வம். அவ்வளவுதான் வித்தியாசம். நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய இறைவன் அடிக்கடி மனித ரூபத்தில் அவதாரம் எடுத்து வருவார் என்று சொல்வார்கள் அல்லவா? அத்தகைய இறை அவதாரம்தான் பிரகாசம் சுவாமிகள். இவரது பூர்வீகம் இதே சுவாமிமலைதான். பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் சுவாமி மலையில்தான்.
இளம் வயதில் தன் வயதுடைய சக நண்பர்களுடன், இவரும் மற்ற சிறுவர்கள் போல ஓடி, ஆடி, விளையாடி எந்த கவலையும் இல்லாதவராக இருந்தார். என்றோ ஒரு நாள்... எப்படியோ ஒரு மாற்றம்... சித்த புருஷராக அவதரித்து விட்டார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆச்சரியமும் அதிசயமும் நிகழ்ந்தது.
சித்தர்கள் பொதுவாக உடனே தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். நாட்கள் செல்ல... செல்லத்தான் அவர்களது அருமையை உணரச் செய்வார்கள்.
சுவாமிமலை பிரகாசம் சுவாமிகளின் வாழ்க்கையும் அப்படித்தான் அமைந்திருந்தது. ஆத்மஞானத்தின் உச்சத்தைத் தொட்ட அவரால், தன் வீட்டுக்குள் ஒரு குறுகிய அறைக்குள் முடங்கிக் கிடக்க இயலவில்லை. வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் வேறு எந்த ஊருக்கும் அவர் செல்லவில்லை. இமயமலை, திருவண்ணாமலை, சதுரகிரி என்று எதையும் தேடி, எங்கும் அலையவில்லை. சுவாமி மலையையே சுற்றி சுற்றி வந்தார்.
கால் போன போக்கில் நடந்தார். சித்தம் போக்கு, சிவம் போக்கு என்பார்களே... அப்படி தன் நிலை மறந்து அலைந்தார். உடலில் உடை சுற்றி இருக்கிறதா... இல்லையா என்ற உணர்வையும் கடந்து, மிக உயர்ந்த ஆனந்தமான நிலைக்கு அவர் சென்றிருந்தார். சில சமயங்களில் அவதூதராகவும் (நிர்வாணம்) மாறினார்.
உடம்பில் பொட்டுத் துணி கூட இல்லாமல், கால் போன போக்கில் நடந்த ஒருவரைப் பார்த்ததும் எல்லோரது மனதிலும் என்ன தோன்றும்? “மன நலம் பாதிக்கப்பட்ட வராக இருப்பாரோ...?” என்றுதானே நினைக்கத் தோன்றும். சுவாமிமலை மக்களும் அப்படித்தான் நினைத்தனர். பிரகாசத்துக்கு மனநலம் பாதித்து விட்டதாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். அவர் அருகில் சென்று கூட பேசப் பயப்பட்டனர்.
இதனால் ஒரு அவதாரப் புருஷர் யாருடைய ஆதரவும் இல்லாமல் தெருத் தெருவாக அலைந்தார். பெரும்பாலான சித்தப் புருஷர்களின் சித்த வாழ்வின் தொடக்கம் இப்படித்தான் இருந்தது. எண்ணை பார்க்காத பரட்டைத் தலை, எல்லாம் தெரிந்தும் எதுவும் பேசாத மவுனம், வானத்தையே வெறித்துப் பார்க்கும் கண்கள், குளிக்காத தோற்றம் - இவை எல்லாம் ஒன்று சேர்ந்து பிரகாசம் சுவாமிகளை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி இருந்தது.
ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத அவர் 24 மணி நேரமும் ஆனந்தமாக இருந்தார். சுவாமி மலை மாட வீதிகளை சுற்றி சுற்றி வந்தார். பசித்தால், கை ஏந்துவார். யாராவது சாப்பாடு கொடுத்தால் ஓரிரு வாய் சாப்பிடுவார். உணவு எதுவும் கிடைக்கவில்லையா? கவலையேபட மாட்டார். சிரித்துக் கொண்டே அந்த இடத்தில் இருந்து நடக்கத் தொடங்கி விடுவார்.
பிரகாசம் சுவாமிகளின் உறவினர்கள் சிலருக்கு இது அதிருப்தியையும் வேதனையையும் கொடுத்தது. 17 வயது மகன் பித்துப் பிடித்தது போல அலைகிறானே... என்று பெற்றோர் மனம் வாடினார்கள். அவர்களில் ஒருவருக்குக் கூட “பிரகாசம் சுவாமிகள் ஒரு அவதாரப் புருஷர்” என்ற உண்மையும் மகிமையும் தெரியவில்லை.
அதனால் தானோ என்னவோ... அவரை ஏர்வாடிக்குக் கூட அழைத்து சென்றனர். அவரோ... நிறைய பேரை பிடித்துள்ள மாயைக் கலியை அறுத்தொழிக்க வந்த மாயக் கண்ணன் போன்றவர் ஆயிற்றே! அது தெரியாமல் அவரைக் கலி பிடித்து விட்டதாக நினைத்து ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியாக ஏற்றி இறக்கினார்கள்.
நடப்பதையெல்லாம் பார்த்து பிரகாசம் சுவாமிகள் தனக்குள் சிரித்துக் கொண்டார். எவ்வளவு நாட்களுக்குத்தான் நம்மை புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள்.... பார்க்கலாம்.... என்று இருந்து விட்டார்.
நாட்கள் செல்லச்செல்ல பிரகாசம் சுவாமிகள் குடும்பத்தினருக்கே சலிப்பும் வெறுப்பும் வந்து விட்டது. மெல்ல மெல்ல சுவாமிகளை விட்டு விட்டனர். இப்படியே சுமார் 10 ஆண்டுகள் ஓடி விட்டது. இந்த 10 ஆண்டுகளும் சுவாமிகள் எப்படி சாப்பிட்டார்? என்ன சாப்பிட்டார்? யார் சாப்பாடு கொடுத்தது? எப்படி அவர் பொழுது கழிந்தது? எங்கு தங்கினார்? என்ன செய்தார்? யாருக்குமே தெரியாது.
ஆனால் இரவு&பகல் பாராமல் பிரகாசம் சுவாமிகள், சுவாமிமலை மாட வீதிகளில் “கிரிவலம்” வருவது போல சுற்றி சுற்றி வந்ததை மட்டும் மக்கள் பார்த்தனர். எவ்வளவு வெயில் அடித்தாலும் சரி, எவ்வளவு மழை பெய்தாலும் சரி, அவர் மாட வீதிகளை சுற்றிச் சுற்றி நடந்தார்.
எப்போதாவது மாட வீதிகளின் தெருவோரத்தில் உட்காருவார். குறிப்பிட்ட சிலரது வீடுகளின் திண்ணையில் மட்டுமே அமர்வார். முதலில் லிங்கடி வீதியில் இருந்த அவர் பிறகு தேரடி மண்டபத்துக்கு வந்தார்.
விநாயகர் கோவிலில் படுத்து இருப்பார். மக்களின் வினைகளைத் தீர்க்கத்தான் அவர் அவ்வாறு படுத்திருந்தார். அதை அவரே ஒருநாள் வெளிப்படுத்தினார். அதுதான் பிரகாசம் சுவாமிகள் நிகழ்த்திய சாதாரண மனிதர்களுக்கு தெரிந்த முதல் அற்புதமாகும்.
No comments:
Post a Comment