Wednesday 4 April 2018

யார் அந்த காரைக்கால் அம்மையார் ?

karaikkal_ammaiyar

அறுபத்து மூன்று நாயன்மார்களில் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரும் ஒருவர் ஆவார். காரைக்காலில் தனதத்தன் - தர்மவதி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர். சிவபெருமானின் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்தாள். தனதத்தர் வணிகர் குலத்தலைவன் ஆதலால் புனிதவதிக்கு திருமண வயது வந்ததும், பரமதத்தன் எனும் பெயருடைய வணிகருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். 

புனிதவதியின் பக்தியை சோதிக்க இறைவன் திருவிளையாடல் நடத்தினார். ஒரு நாள் சிவபக்தர் மூலமாக சுவைமிகுந்த இரு மாங்கனிகள் பரமதத்தனுக்கு கிடைத்தது. அதை வீட்டிற்கு பணியாட்கள் மூலம் கொடுத்து அனுப்பினான். புனிதவதி சைவ சமயத்தவள் என்பதால் அடியாருக்கு உணவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள். அன்றும் ஒரு அடியார் வீட்டிற்கு உணவருந்த வர, அவருக்கு மாங்கனிகளில் ஒன்றைப் படைத்தார். பரமதத்தனுக்கு இந்த சைவ மரபில் நாட்டம் இல்லையென்பதால், அவனிடம் அடியாருக்கு உணவிடுவதைப் பற்றி புனிதவதி தெரிவிப்பதில்லை.

பரமதத்தன் உணவருந்த வரும் போது, அவனுக்கு மீதமிருந்த மாங்கனியைப் படைத்தார். அதனுடைய சுவையில் மயங்கிய பரமதத்தன் மற்றொரு கனியையும் தனக்கே வைக்கும்படி கூறினான். கணவனின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய புனிதவதி, சமையல் அறைக்குச் சென்று இறைவனை வேண்டி மாங்கனியொன்றைப் பெற்றாள். அதை கணவன் பரமதத்தனுக்குப் படைத்தார். முதலில் உண்ட கனியை விட தற்போது உண்ட கனி மேலும் சுவைமிக்கதை இருக்கின்றதே காரணம் என்ன என்று வினவினான். புனிதவதியும் இக்கனி இறைவன் தந்தது என்றாள்.

வியப்படைந்து, மீண்டும் அதே போல கனியை இறைவனிடமிருந்து பெற்று காட்டு என்றான். புனிதவதியும் இறைவனை வேண்டி கனியைப் பெற்றாள். அதைக் கண்டு புனிதவதி வணக்கத்திற்கு உரியவள் என்று பரமதத்தன் முடிவு செய்தான். அவளைப் பிரிந்து வேறிடம் சென்று வேறு பெண்ணை திருமணம் செய்து இல்லறம் நடத்தி குழந்தைப் பெற்றான். அப்பெண்ணிற்கு புனிதவதி என்ற தன் முதல் மனைவியின் பெயரையே இட்டான். புனிதவதியை குடும்பத்தினருடன் சென்று காலில் விழுந்து வணங்கினான்.

புனிதவதி இனி இல்லற வாழ்வு வேண்டாம் என தன்னுடைய உடலை பேயுருவமாக மாற்றி இறைவன் மீது பாடல்கள் பாடினார். கைலாயம் வருக என இறைவன் அழைத்தமையால் அவ்விடம் சென்றார். இறைவன் வசிக்கும் இடத்தில் காலால் நடந்து செல்ல கூடாதென தலையால் நடந்து சென்றார். அதைக் கண்ட சிவபெருமான் "அம்மையே" என அழைத்தார்.

இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் 
வேண்டும் நான்மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும்போது 
அடியின்கீழ் இருக்க என்றார் ! 

அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.

காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரில் தனிக் கோயில் உள்ளது. ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் மாங்கனித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இறைவனிடம் வேண்டிப் பெற்ற வரத்தின்படி, திருவாலங்காட்டில், சிவபெருமான் ஆடுவதாகவும், அம்மையார் பாடிக்கொண்டிருப்பதாகவும் என்பது சேக்கிழார் கூற்றாகும். இவ்வகையில் இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சி உள்ளிட்டவை காரைக்காலில் நடத்தப்பட்டுவருகிறது. 

ஆண்டுதோறும் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஐக்கிய விழா காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் சார்பில் நடத்தப்படுகிறது. இவ்விழாவின் தொடக்கமாக, அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், கைலாசநாதர் கோயிலில் ஸ்ரீ கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடத்தப்படுகிறது. 

No comments:

Post a Comment