தெரிந்தே செய்த தவறுகளால் ஏற்பட்ட பாவங்கள் உள்ளிட்ட அனைத்துப் பவங்களையும் நீக்கி மன அமைதியைத் தரும் தலமாகக் கேரள மாநிலம், திருவாரண்விளை (ஆரணமுளா) பார்த்தசாரதி கோவில் திகழ்கிறது.
தல வரலாறு :
மகாபாரதப் போரில், கர்ணனின் தேர்ச் சக்கரம் பூமியினுள் புதைந்து போயிருந்தது. கர்ணன் அந்தத் தேர்ச் சக்கரத்தை வெளியில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தான். அப்போது அர்ச்சுனனின் தேரோட்டியாக இருந்த கண்ணன் அர்ச்சுனனிடம், கர்ணன் மீது அம்பைச் செலுத்தச் சொன்னான். ஆயுதம் எதுவும் இல்லாமலிருந்த கர்ணன் மீது அம்புகளைச் செலுத்த அர்ச்சுனன் முதலில் தயங்கினாலும், கண்ணன் சொல்லைத் தட்ட முடியாமல் அம்பைச் செலுத்தினான். அதில் கர்ணன் இறந்து போனான்.
போர் விதிமுறைகளை மீறி, ஆயுதம் இல்லாமல் இருந்த கர்ணனைக் கொன்றதை நினைத்து, பல ஆண்டுகளாக மனம் வருந்தி வந்தான் அர்ச்சுனன். அந்தப் பாவத்திலிருந்து விடுபட்டு மன அமைதியடைய விரும்பினான். அதற்காகக் கேரளாவில் இருந்த பழைய விஷ்ணு கோவில் ஒன்றைப் புதுப்பிக்க முடிவு செய்தான்.
கேரளாவின் மலைப்பகுதியில் அமைந்திருந்த அந்தக் கோவிலுக்கு அங்கிருந்த பம்பை ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அர்ச்சுனன் ஆறு மூங்கில் துண்டுகளைக் கொண்டு ஒரு மிதவையை உருவாக்கி, அதில் இறைவன் சிலையுடன் ஆற்றைக் கடந்தான். பின்னர், தான் கொண்டு வந்த ஆயுதங்களை எல்லாம் கோவிலுக்கு அருகில் இருந்த வன்னி மரத்தின் பின்னால் மறைத்து வைத்து விட்டுக் கோவிலைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டான்.
கோவிலை புதுப்பித்ததும், தான் கொண்டு வந்த இறைவன் சிலையைக் கோவிலில் நிறுவி, மன அமைதி வேண்டி வழிபட்டான். ஒருநாள் இறைவன் ‘பார்த்தசாரதி’ உருவத்தில் காட்சியளித்து, அவனுக்கு மன அமைதியை வழங்கினார் என்கிறது இந்த ஆலயத்தின் தல வரலாறு.
ஒரு முறை பிரம்மனிடம் இருந்த வேதங்களை, மது, கைடபன் எனும் அரக்கர்கள் அவருக்குத் தெரியால் எடுத்துச் சென்று விட்டனர். பிரம்மன் வேதங்களை மீட்டுத் தரும்படி விஷ்ணுவிடம் வேண்டினார். இறைவனும் அந்த அரக்கர்களைக் கொன்று, அவர்களிடமிருந்த வேதங்களை மீட்டுப் பிரம்மனிடம் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பிரம்மன் இவ்விடத்தில் விஷ்ணுவிற்குக் கோவிலமைத்து வழிபட்டு வந்தார். அவரது வழிபாட்டுக்குப் பின்பு, அந்தக் கோவில் மறைந்த நிலையில் இருக்க, அர்ச்சுனன் கோவிலைப் புதுப்பித்து வழிபட்டான்.
ஆலய அமைப்பு:
சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இக் கோவிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவர் மீது தங்கக் கவசம் சாத்தப்பட்டிருக்கிறது. இத்தல இறைவி பத்மாசனி தாயார் என்று அழைக்கப்படுகிறார். கோவில் சுற்றுப் பாதையில் சாஸ்தா, யட்சியம்மன், நாகராசா, பகவதி மற்றும் பரசுராமர் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலுக்கு வேத வியாசர் தீர்த்தம் மற்றும் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் உள்ள பம்பை நதி தீர்த்தம் ஆகியவை உள்ளன.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் முன் மண்டபத்தில் தினமும் மாலை 6.30 மணிக்கு பக்தர்களின் பங்களிப்பில் அதிக அளவில் குத்து விளக்குகள் ஏற்றப்பட்டு, இறைவழிபாடு நடக்கிறது. பக்தர்களின் பங்களிப்பு இல்லாத நிலையில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவில் நிர்வாகமே இங்கு விளக்குகளை ஏற்றி வைக்கிறது.
மலையாள நாட்காட்டியின்படி, மகரம் (தை) மாதம் அஷ்டமி நாளில் கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா நடக்கிறது. இதேபோல் தனுர் (மார்கழி) மாதத்தில் மகாபாரதத்தில் கிருஷ்ணர் காண்டவ வனத்தைத் தீயிட்டு எரித்த நிகழ்வினை நினைவூட்டும் வகையிலான ‘காண்டவ வனம் தகனம்’ எனும் விழாவும் கொண்டாடப்படுகிறது.
இத்தல இறைவனை வழிபடுவதால், பிறரை ஏமாற்றிச் செய்த பாவங்கள், செய்யக்கூடாது என்று சொல்லியும் அதை மீறிச் செய்த பாவங்கள், ஒருவர் பேச்சாலும் செய்கையாலும் பிறருக்குச் செய்த பாவங்கள் என அனைத்துப் பாவங்களும் நீங்கி மன அமைதி ஏற்படும் என்கின்றனர்.
வன்னிமரக் காய்கள்:
குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாத போது, வன்னிமரக் காய்களை வாங்கி அவர்களது தலையை சுற்றி எறிந்தால், அர்ச்சுனன் அம்பினால் எதிரிகள் ஓடுவது போல, நோய் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இங்குள்ள இறைவனுக்குக் குருவாயூர் போன்று துலாபாரம் வழங்கும் வழக்கமும் உள்ளது. இங்கு வழிபடும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வன்னிமரக் காய்களைத் துலாபாரமாக வழங்குகின்றனர். இதேபோல் இக்கோவிலின் கொடிமரம் மீது வன்னிமரக ்காய்களை வீசி வேண்டி வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது. இதனை “மஞ்சாடி வழிபாடு” என்கின்றனர்.
ஆலயச் சிறப்புகள் :
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று. இத்தலத்தைப் பற்றி நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்து 11 பாசுரங்களைப் பாடியுள்ளார்.
சபரிமலை ஐயப்பனின் ஆபரணங்கள் இக்கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சபரிமலை மகர ஜோதியின் போது, இங்கிருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
சிறிய மலைக்குன்றின் மேல் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு, கிழக்குப் பாதையிலிருந்து 18 படிகளும், வடக்குப் பாதை யிலிருந்து 57 படிகளும் ஏறிச் செல்ல வேண்டும்.
அமைவிடம்:
கேரளா மாநிலம், செங்கனூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், பத்தனம்திட்டாவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், பந்தளம் என்ற இடத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் இந்த ஆலயத்திற்கு மூன்று ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
No comments:
Post a Comment