Sunday, 1 April 2018

ஈசனின் உத்தரவால் நோய் தீர்த்த சங்கு சுவாமி

ஈசனின் உத்தரவால் நோய் தீர்த்த சங்கு சுவாமி

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு அருகே உள்ளது பசுவந்தனை என்னும் கிராமம். கரிசல் பூமியாக இருந்தாலும் வளமை மிகுந்தது இந்தக் கிராமம். இங்கு தான் சிவஞான தேசிகர் - ஞானம்மை தம்பதிகளின் மகனாக சங்கு சுவாமிகள் அவதரித்தார். சிறுவயது முதலே சிவன் மீது தீவிர பற்று கொண்டிருந்தார். தினமும் சிவனை எண்ணி துதித்து, தன் பணிகளைத் தொடங்குவதே இவரது வழக்கம்.

ஆரம்பக் காலத்தில் யாரும் இவரைப் பற்றி அறியவில்லை. ஏதோ ஒன்றும் அறியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்; இவர் ஒரு பித்தர் என்று தான் நினைத்தார்கள்.

அதற்கேற்றாற்போல், சங்கு சுவாமிகளும், உலகத்தை மறந்து எப்போதும் சிவ சிந்தையுடன் தான் இருப்பார். வானத்தை நோக்கியபடியே வெகுநேரம் பார்த்துக் கொண்டே நிற்பார். மழை பொழிந்தாலும் அசைய மாட்டார். சில நேரம் சிரிப்பார், சில நேரம் அழுவார். எதற்காக சிரிக்கிறார்; எதற்காக அழுகிறார் என்பதை யாராலும் கணித்துக் கூற முடியாது. சில சமயம் தான் வழிபடும் சிவபெருமானுக்காக பூக்களைக் கொண்டு செல்கையில், அந்த பூக்களுடன் கூட பேசிக்கொண்டே இருப்பார். ‘உன்னை இன்று ஈசனுக்கு சூட்டி மகிழப்போகிறேன்’ என்பார்.

அவர் தன்னுடைய வீடாகவே, எல்லா வீட்டையும் எண்ணுவார். எல்லா வீடுகளில் தரும் உணவையும் உண்பார். இரவிலே ஊருக்கு வெளியேயுள்ள தோப்புகளிலோ, சாலைகளிலோ தனியாக உலவுவார்.

பலரும் இவரைப் பற்றி அறியாமல், தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் வேலை வாங்குவார்கள். ஒருசிலர் நெல் அறுவடைக் காலத்தில், இவரை அழைத்து நெற்கதிரை ஏற்றி சுமக்க விடுவார்கள். அவரும் சுமப்பார். சிலர் இவரை கிணற்றில் தண்ணீரை இறைக்கச் சொல்வார்கள். அதையும் இவர் சிரித்துக் கொண்டே சளைக்காமல் செய்வார். மேகத்தினால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல சங்கு சுவாமி தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் வாழ்ந்து வந்தார்.

ஒரு சமயம் சங்கு சுவாமியின் தந்தை, அவரை விவசாய நிலத்தில் மாட்டை பூட்டி உழவு தொழில் செய்ய அனுப்பியிருந்தார். ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் எருதுகள் தவிக்கிறதே என எண்ணிய சங்கு சுவாமி, தான் உடுத்திருந்த வேஷ்டியை தண்ணீரில் நனைத்து எருது மீது போர்த்தினார். அங்கு வந்த தந்தை அவரை அடித்து உதைத்தார்.

உடனே ‘அப்பா அடிக்காதீர்கள். உங்கள் கை வலிக்கும்' என்றார் சங்குசுவாமி. அதுபோலவே அவருக்கு கை வலித்தது. அவர் துடித்துக்கொண்டே ‘என்னடா செய்தாய்?' என்று கேட்டபடி அடிப்பதை நிறுத்த, ‘அப்பா இனி வலிக்காது’ என்றார். அதுபோலவே வலி நின்று போனது. இவர் ஒரு அதிசய பிறவி என்பதை அவர்கள், அப்போதும் உணரவில்லை.

ஒருநாள் அதிகாலையில், சங்கு சுவாமியின் சகோதரர், அவரை நோக்கி வந்தார். வந்தவர், ‘நமது வயலுக்கு போய் ஏற்றத்தில் தண்ணீர் இறை. விடிவதற்குள் இந்த வயல் முழுவதும் தண்ணீர் பாய வேண்டும்’ என்று சொல்லி விட்டு போய்விட்டார்.

உலக பற்றற்ற சங்கு சுவாமி, எதை பற்றியும் கவலைப்படாமல் சிவசிந்தனையுடன் ஏற்றம் இறைக்கத் தொடங்கினார்.

சங்கு சுவாமியின் இயற்பை அறிந்திருந்த பக்கத்து வயலுக்குச் சொந்தக்காரன், சரியான நேரம் பார்த்து, மெல்ல தண்ணீர் மடையைத் தன் வயலுக்குத் திருப்பிக் கொண்டான். விடிவதற்குள் பக்கத்து நிலத்துக்காரனின் வயலில் நன்றாக நீர் பாய்ந்து தேங்கியது. அதை அறியாதபடி சிவசிந்தனையில் இருந்த சங்கு சுவாமிகள், தண்ணீர் இறைத்தபடியே இருந்தார்.

பொழுது விடிந்தது. சங்கு சுவாமியின் சகோதரன், வயலுக்கு வந்து சேர்ந்தார். தங்கள் வயலில் ஒரு துளி நீர்க் கூடப் பாயவில்லை. அடுத்த வயலில் தடாகம் போல் தண்ணீர் தேங்கியிருந்தது. கோபத்தில், ‘உனக்கு ஏதாவது மூளையிருக்கின்றதா? இத்தனை மணி நேரம் நீர் இறைத்தும் நம்ம வயலில் தண்ணீர் பாயவில்லையே’ என்றார்.

அதற்கு சங்கு சுவாமிகள் மலர்ந்த முகத்துடன் தண்ணீர் இறைத்துக் கொண்டே ‘அதுவும் நம்ம வயல் தானே?’ என்றார்.

அவ்வளவுதான், சகோதரனுக்கு கோபம் அதிகரித்து ஒரு கம்பை எடுத்து வந்து சங்கு சுவாமியை ஓங்கி பல முறை அடித்தார். ஆனால் சிவசிந்தனையில் இருந்த சங்கு சுவாமியோ சிரித்தபடி ‘தம்பீ! இப்படி ஓங்கி அடிக்கிறாய். உனக்குக் கை வலிக்குமே?’ என்றார்.

அடுத்த நிமிடமே அவனது தோள், தேள் கொட்டியதுபோல் வலித்தது. கீழே விழுந்தான்; புழுவைப் போல் துடித்தான்; புரண்டான். ‘ஐயோ! ஐயோ! வலி தாங்க முடியவில்லையே’ என்று கதறினான்.

கருணை வடிவாகிய சங்கு சுவாமி ‘தம்பீ! வருந்தாதே. சரியாகிவிடும்’ என்றார். உடனே வலி நின்றுவிட்டது. அப்போதும் கூட அவரை ஞான மூர்த்தியென்று அவன் அறியவில்லை.

‘இவன் கரு நாக்குக்காரன். இவன் சொன்னால் பலிக்கின்றது. இவன் விஷயத்தில் இனி தலையிடக்கூடாது’ என்று கூறி விட்டு தெருவில் ஓட ஆரம்பித்தான்.

இந்தச் செய்தி ஊரெங்கும் பரவியது. அன்று முதல் சங்கு சுவாமியை கண்டால் எல்லோருக்கும் ஒரு வகையான பயம் தொற்றிக் கொண்டது. அவருக்கு யாரும் வேலை தந்து கஷ்டப் படுத்துவதில்லை.

சங்கு சுவாமிகள் தன்னிச்சைப்படி இடிந்த மண்டபம் ஒன்றில் வந்து தங்கினார். கண்களை மூடி அமர்ந்தார். அப்போதும் பலர், ‘எப்படி உட்கார்ந்தபடியே தூங்குகிறான் பார்’ என்றுதான் நினைத்தார்கள். அவருடைய தவவலிமை ஊருக்குத் தெரியவில்லை.

ஆனால் அவருடைய ஞான சித்தியைப் பற்றி அனைவரும் அறியும் காலம் ஒன்று வந்தது.

ஒரு நாள் வீட்டின் வெளியே அனைவரும் படுத்திருந்தனர். நிலவு வானத்தில் இருந்து தனது ஒளியை பூமிக்கு பாய்ச்சி கொண்டிருந்தது. சுவாமி தீடிரென்று எழுந்து அனைவரையும் உள்ளே சென்று படுக்கச்சொன்னார். கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கொண்டு கட்டினார். அதன் உணவுகளை சேகரித்தார். ‘இவனுக்கு என்ன கிறுக்கு பிடித்து விட்டதா?’ என்று வீட்டில் உள்ளவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் மிகப்பெரிய புயல் காற்று வந்தது. கூரைகள் பறந்தன. கடும் மழையால் வெள்ளம் பாய்ந்தோடியது. இந்த சம்பவத்துக்கு பிறகு சுவாமியை பற்றி உணரத் தொடங்கினர். ஆனால் முழுமையாக நம்பிவிடவில்லை.

ஒரு நாள், சங்கு சுவாமியும், அவரது சகோதரரும் உணவருந்த அமர்ந்தனர். சங்கு சுவாமிகள் சாப்பிடும் முன்பாக தியானிப்பது வழக்கம். அப்படி கண்களை மூடி தியானத்தபோது, அவரது இலையில் இருந்த உணவை, அவரது சகோதரன் எடுத்து விட்டான். ஆனால் சுவாமிகள் இலையில் அள்ள அள்ள குறையாமல் உணவு இருந்தது.

இதனால் அதிர்ந்து போன அவரது சகோதரன், அவரின் சக்தியை உணராமல் அவருக்கு ஏதோ துஷ்ட ஆவி பிடித்து விட்ட தாக நினைத்தான். அதனால் சங்கு சுவாமியை அனைவரும் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றார்கள்.

அந்த மந்திரவாதியைப் பார்த்ததும் சங்கு சுவாமிகள், ‘விதி முடிந்தவனா என் விதியை மாற்றப் போகிறான்?’ என்றார்.

அவர் சொன்னதன் பொருள்.. அப்போது யாருக்கும் புரியவில்லை. மந்திரவாதியோ, எலுமிச்சைப் பழம் எடுப்பதற்காக அருகில் இருந்த பூக்கூடைக்குள் கையை விட, உள்ளே இருந்த கருநாகம் அவரைத் தீண்டியது. அலறியபடி சரிந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார் மந்திரவாதி. பூக்கூடையில் இருந்து வெளியில் வந்த கருநாகம், சங்குச்சுவாமியின் முன் வந்து பணிந்து நின்றது. இந்தச் சம்பவத்துக்கு பின்னர், சங்கு சுவாமி யிடம் ஏதோ சக்தி இருப்பதை பசுவந்தனை மக்கள் நம்பி னார்கள்.

சிங்கம்பட்டி ஜமீன்தாரான நல்லகுத்தி பெரியசாமி தேவருக்கு, மகோதரம் என்னும் நோய் ஏற்பட்டது. அந்த காலத்தில் இதுபோன்ற நோய்கள் வந்தால் மருத்துவரால் காப்பாற்ற முடியாது. இறைவனே கதி என காத்துக்கிடக்கவேண்டியது தான். அதுபோலவே தில்லை அம்பல நடராஜனிடம் ஜமீன்தார் வேண்டினார். தொடர்ந்து 48 மண்டலமாக அங்கு அமர்ந்து வணங்க ஆரம்பித்தார். நோய் தணியவில்லை. எனவே ஜமீன்தார் மனம் நொந்தார்.

ஜமீன்தார் ‘ஐயனே! விடிவதற்குள் என் நோய் தீரவில்லையென்றால், உன் சிவகங்கையில் வீழ்ந்து உயிரிழந்து விடுவேன். இது சத்தியம்’ என்று சபதம் செய்தார்.

அன்று ஜமீன்தாருடைய கனவில் தோன்றிய தில்லைநாதன், ‘அன்பனே! பாண்டி நாட்டிலே பசுவந்தனை என்னும் தலத்திலே சங்கு சுவாமிகள் என்ற பெயர் தாங்கி, எனது அடியவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் சென்று வணங்குவாய். அவன் உன் நோயை விரைவில் தீர்ப்பான்’ என்று அருளினார்.

ஆனந்தத்துடன் உடனே பசுவந்தனை நோக்கி கிளம்பினார்.

அங்கிருந்த மக்கள், சங்கு சுவாமிகள் வாழ்ந்த பாழடைந்த மண்டபத்தை ஜமீன்தாருக்கு காட்டினார்கள். ஜமீன்தார், முத்து முத்தாய் கண்ணீர்த் துளி சிந்தவும், அன்பு வெள்ளம் பெருகவும் ஓடி, அவரது திருவடிகளில் வீழ்ந்தார். தட்டுக்களில் கற்கண்டும் பழங்களும் வைத்துப் பணிந்தார். ஆரவாரத்தினை பார்த்தவுடன் அதுவரை தியானத்தில் இருந்தவர் திடுக்கிட்டு விழித்தார்.

எதிரில் நின்ற ஜமீன்தாரைப் பார்த்ததும் சிரித்தார். ‘என்ன.. நடராஜ மூர்த்தி அனுப்பினாரோ? ரொம்ப சந்தோஷம். இந்தா! இந்தப் பழத்தைச் சாப்பிடு’ என்று தட்டில் உள்ள பழங்களில் ஒன்றையெடுத்துக் கொடுத்தார். அதையுண்டதும் ஜமீன்தாருடைய மகோதரம் அகன்றது. ஊரார் அனைவரும் அதிசயத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.

No comments:

Post a Comment