விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள செல்லப்பிராட்டி கிராமத்தில், கற்பலகை வடிவில் லலித செல்வாம்பிகை அருள்பாலிக்கிறாள்.
தல வரலாறு: தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். யாகத்தின் பலனாக ராமர் அவதரித்தார். இந்த யாகத்தை நடத்திய ரிஷ்யசிருங்க முனிவரிடம், அம்பிகையின் அம்சம் கொண்ட மந்திர கற்பலகை ஒன்று இருந்தது. பிற்காலத்தில் இங்கு அந்த கற்பலகை பிரதிஷ்டை செய்யப்பட்டு, 'லலித செல்வாம்பிகை' என பெயர் சூட்டப் பட்டது. தற்போது அதன் கீழே மூன்று அடி உயரத்தில் அம்பாள் விக்ரஹம் உள்ளது. ஆதிசங்கரர் காஞ்சிபுரம் செல்லும் போது, இந்த அம்பிகை காட்சியளித்து வழிகாட்டினாள். ரிஷ்யசிருங்கரின் சிலையும் இங்குள்ளது.
கற்பலகை அம்மன்: நான்கடி உயரம், செவ்வக வடிவம் கொண்ட கற்பலகையில் 12 சதுரங்கள் உள்ளன. கட்டங்களின் நடுவில் திரிசூலமும், சுற்றிலும் ஆதிபராசக்தியின் பீஜாட்சர மந்திரங்களும் பொறிக்கப் பட்டுள்ளன. வலது மேல் பக்கத்தில் சூரியன், இடது மேல் பக்கத்தில் சந்திரன் இடம் பெற்றுள்ளது. நடுநாயகமாக அம்மனின் திருவுருவம் உள்ளது.
மூன்று தேவியர்: ஒரே விக்ரகத்தில் மூன்று தேவியரின் அம்சங்களும் இணைந்திருப்பதை இங்கு தரிசிக்கலாம். சரஸ்வதிக்குரிய அட்சரமாலை, கமண்டலம், லட்சுமிக்குரிய சங்கு, சக்கரம், பார்வதிக்குரிய பாசம், அங்குசம் செல்வ லலிதாம்பிகை அம்மன் கையில் உள்ளது.
No comments:
Post a Comment