Monday 2 April 2018

முருகப்பெருமானின் திருநாமங்களும், அருட்சிறப்பும்

முருகப்பெருமானின் திருநாமங்களும், அருட்சிறப்பும்

தமிழர்களின் வாழ்வியல் கூறுகளில் இறைவழிவாடு இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளது. இத்தகைய வழிபாடு தமிழர்களின் சமூக ஒருங்கிணைப்பையும் பண்பாட்டு நெறிகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. திருமால், சிவன், கொற்றவை, இந்திரன், முருகன் போன்ற தெய்வங்கள் சங்க தமிழர்களின் வாழ்வியல் வழிபாட்டுக்குரிய முதன்மை கடவுள்களாக திகழ்கின்றனர். இறைவனிடம் வேண்டும்போது ‘இறைவா எங்களை காக்க வேண்டும்’ என்று தான் வேண்டுகிறோம். எனவே காத்தலைக்குறிக்கும் உகரமே சிறந்தது என்பது உணரத்தக்கது. 

உயிர்களுக்கு அருள் புரிவதற்காகவே இறைவன் சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தினார். அவை சரவண பொய்கையில் சேர்ந்தன. பின்னர் அவை ஆறு குழந்தைகளாயின அவற்றை கண்டு களிப்புற்ற உமாதேவி ஆறு குழந்தைகளையும் சேர்த்தெடுத்தார். 

ஆறு குழந்தைகளும் ஓர் உடலும், ஆறு முகங்களும், பன்னிரு கைகளும் உடையதாயின. அக்குழந்தைக்கு கந்தன் என்று பெயரிடப்பட்டது. கந்தன் என்றால் அழகன், முருகன் என்று பொருள். குமரன், குகன், விசாகன், சரவணபவன், காங்கேயன், கடம்பன், சண்முகம், ஆறுமுகன், சிவகுருநாதன், கதிர்வேலன், ஞானபண்டிதன், வேலாயுதன், தண்டாயுதபாணி, பழனியாண்டவர், செவ்வேள், சுப்பிரமணியன் என்று பல்வேறு பெயர்களும் உண்டு. 

ஆறு திருமுகங்களை கொண்ட முருகப்பெருமான் ஞானத்தின் கடவுள், சக்தியின் கடவுள், அன்பின் கடவுள், அருளின் கடவுள், வீரத்தின் கடவுள், வினைகளைகடந்த வேலையும், பயங்களைகளையும் மயிலையும் உடையவர் ஆவார். சச்சிதானந்தம் சிவம் என்றால் சத்து, உமை என்றால் சித்து, முருகன் என்றால் ஆனந்தம் இதுதான் சோமாஸ்கந்த மூர்த்தம். இதனால் முருகன் ஆனந்த வடிவம் என்பதும், அப்பரம்பொருளை வழிபட்டோர் ஆனந்தம் பெறுவர் என்பதும் உறுதி. 

முருகனது பேரறிவையும் பேராற்றலையும் புலப்படுத்தவே ஆறு தலைகளையும், பன்னிரு கைகளையும் உடையவராகவே அவரை உருவகம் செய்துள்ளனர் என மறைமலை அடிகள் கூறுகின்றார். முருகனின் பன்னிரு கைகளிலும் வெள்ளையாட்டுமறி, மயில், சேவல், வில், தோமரம், வாள், ஈட்டி, கோடாரி, கணிச்சி, மழுப்படை, மாலை, மண் ஆகியன உள்ளன. அவற்றுள் தீக்கடவுள் சேவலையும், இந்திரன் மயிலையும், கூற்றுவன் மறியையும் கொடுத்தனர். மற்ற தேவர்கள் பிறவற்றை வழங்கினர் என பரிபாடல் கூறுகிறது. 

முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரம் ‘சரவண பவ‘ ஆகும். நெற்றியில் தூயதிருநீரு அணிந்து இந்த ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து பக்தி செய்யும் ஒருவரையும் முருகன் என்றுமே கை விடுவதில்லை என்பது நம்பிக்கை. அருணகிரிநாதருக்கு குருவாக வந்து அருள் புரிந்தார். வள்ளலார் ராமலிங்க சுவாமிகளுக்கு குருவாக வந்து முருகப்பெருமான் அருள்பாலித்தார். இப்படி முருகப்பெருமான் குருவாக வந்து அருள்பாலிப்பார் என்பதை சுவாமி நாத வடிவம் உணர்த்துகிறது. குமரனே தனக்கு மகனாக வரவேண்டும் என்று ஈசனே வரம் கேட்டிருக்கிறார். அத்தகைய சிறப்புக்களை பெற்றுள்ள முருகன், பழனியிலே ஞானதண்டாயுதபாணியாகவும், குழந்தையாகரும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment