Tuesday, 10 April 2018

மலைத்தாள் மகாலட்சுமி


பெருமாள் என்ற விவசாயி தன் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன், இருப்பதை கொண்டு திருப்தியாக வாழ விரும்பினான். ஆனால், அவன் மனைவி பூவாயிக்கோ பொன், பொருளோடு வாழ ஆசை. எவ்வளவோ புத்தி சொல்லியும் கேட்பதாக இல்லை. ''நமக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் பற்றி என்றாவது சிந்தித்தது உண்டா?'' என்றாள். விவசாயியின் வீட்டில் ஒருநாள், சண்டை முற்றியது.

விஷயம் வைகுண்டத்தை எட்டியது. கலகத்தில் சிறந்த நாரதர் மகா விஷ்ணுவிடம் தெரிவித்தார். உடனிருந்த மகாலட்சுமி, ''என்ன சுவாமி அநியாயம்? ஆஸ்ரமத்தில் வாழும் துறவிகள் கூட என் அருளைப்பெற ஆடம்பரமாகயாகம் நடத்துகிறார்கள்...'' என்றாள். 

மகாவிஷ்ணு சிரித்தபடி, ''ஆசை யாருக்கு இல்லையோ அவன் என் திருவடிகளை அடைவது உறுதி என்று கீதையில் உபதேசித்திருக்கிறேனே... அது நிஜம் தானா என்பதே நீயே பூலோகம் சென்று சோதித்து பார்'' என்று மகாலட்சுமியிடம் சொன்னார்.

உழைப்பின் மீது நம்பிக்கை கொண்ட பெருமாள் அதிகாலையில் வயலுக்கு புறப்பட்டான். உழத் தொடங்கிய சிறிது நேரத்தில், கலப்பை ஓரிடத்தில் 'டங்' என்று ஓசை எழும்பியது. தோண்டிய போது, குடம் நிறைய பொற்காசுகள் இருந்தன. உழைப்பின்றி கிடைத்த பொருளை எடுக்க அவன் விரும்பவில்லை. அரசிடம் ஒப்படைக்க எண்ணி, ஓரிடத்தில் மறைத்து வைத்தான். இதற்குள் குறி சொல்லும் குறத்தியாக மகாலட்சுமி, விவசாயி வீட்டுக்கு வந்தாள்.

பூவாயியின் இடது கையை பார்த்து, ''அம்மா! வலிய வந்த சீதேவியை காலால் உதைத்து விட்டார் உன் கணவர்...! புதையலாக கிடைத்த பொற்காசுகளை அரசிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இப்போது இருக்கிறார். அதை உனதாக்கி மகாராணி போல வாழ்.'' என்றாள். ஏதும் புரியாமல் விழித்தாள் பூவாயி.

வயலில் புதையல் கிடைத்ததை சொல்லி விட்டு, ஓட்டம் பிடித்தாள் மகாலட்சுமி. கணவரின் வரவுக்காக காத்திருந்த பூவாயி, அவன் தலையைக் கண்டதும் சிடுசிடுத்தாள். மனைவியின் மனநிலையை உணர்ந்த பெருமாள், ''பூவாயி... உழைப்பின்றி கிடைத்த பொருள் நிலைக்காது. பேராசை பெருநஷ்டம் என்பார்கள். உழைப்புக்கான கூலி நிச்சயம் நமக்கு கிடைக்கும்'' என்றான் பெருமாள். குறத்தி மீண்டும் அங்கு வந்தாள். 

மகாலட்சுமியாக நேரில் காட்சியளித்து, மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாத விவசாயியை வாழ்த்தினாள். அப்போது பெருமாள், ''தாயே...! யாருக்கும் கிடைக்காத பெருஞ்செல்வமான உன் தரிசனம் கிடைக்கப் பெற்றேன். வாழ்வில் இதை விட வேறு என்ன வேண்டும்'' என்று மகிழ்ந்தான். பெருமாளின் பெரிய மனதைக் கண்ட மகாலட்சுமி மலைத்து நின்றாள். 

No comments:

Post a Comment