Thursday 19 April 2018

குழந்தை வரம் அருளும் நார்த்தாமலை முத்து மாரியம்மன்

Image result for நார்த்தாமலை முத்து மாரியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மூலஸ்தானத்தில் முத்துமாரியம்மன் அருள்பாலிக்கிறார். உற்சவ அம்மன் பூவாடைக்காரி. 

தல வரலாறு:  

ராம ராவண போரில் மாண்ட வீரர்களை உயிர்ப்பிக்க வடக்கிலிருந்து சஞ்சீவி  மலையை வாயு புத்திரனாகிய அனுமான் அடியோடு பெயர்த்து வான் வழியே அதைத்  தூக்கி வரும் போது அம்மலையிலிருந்து சிதறி விழுந்த சிறு துகள்கள்தான் நார்த்தாமலையில் உள்ள குன்றுகள். நிறைய மூலிகைச்செடிகள் இம்மலையில் இருக்கின்றன. நாரதர்  இம்மலையில் வந்து தங்கியதால் நாரதர் மலை என்று  வழங்கப்பட்டது. காலப்போக்கில் இது மருவி நார்த்தாமலை என்றானது. கோயிலின் அம்மன் சிலை நார்த்தாமலையிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலுள்ள கீழக்குறிச்சி என்னும் கிராமத்தில் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டதாகவும், இச்சிலையை இந்த ஊரில் உள்ள குருக்கள் பிரதிஷ்டை செய்து சிறிய கோயில் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. 

பின்னர் திருவண்ணாமலை ஜமீன்தார் வம்சத்தைச் சேர்ந்த மலையம்மாள் என்பவர் இங்கு வந்து அம்பாளின் அருளினால் தன் சொந்த முயற்சியால் கோயிலை விரிவுபடுத்தியும், மண்டபங்கள் எழுப்பியும். விழாக்கள் நடத்தியும் புகழ் பெறச் செய்துள்ளார். அம்மன் சன்னதியின் வடபுற சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் கல்லினால் ஆன  முருகன் எந்திரம் மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.  

திருவிழா:

தமிழ், ஆங்கில வருடபிறப்பு, விஜய தசமி , தீபாவளி, பொங்கல் ஆகிய விஷேச நாட்களில் அம்மன் தங்கரதம் வீதியுலா நடக்கும். வாரத்தின் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கரும்பு தொட்டில் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்னி காவடி எடுத்தால் தீராத வியாதிகள் குணமாகும். அம்மை வியாதிகள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் இருக்கிறது இக்கோயில். புதுக்கோட்டையிலிருந்து பஸ் வசதி உண்டு. திருச்சியிலிருந்து 35 கி.மீ. புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது.

No comments:

Post a Comment