Tuesday, 3 April 2018

பில்லி, சூனியம் விலக முருகப்பெருமானுக்கு காணிக்கை

பில்லி, சூனியம் விலக முருகப்பெருமானுக்கு காணிக்கை

ழனி ஆண்டவனுக்கு செலுத்தப்படும் காணிக்கையால் குடும்பத்தில் கடன் தொல்லை தீரும். மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உடலில் ஏற்பட்டுள்ள நோய்கள் விலகவும், உடல் ஊனம் களையவும், தங்களின் விளை நிலத்தில் பன்மடங்கு விளைச்சல் பெருகவும், லாபம் கிடைக்கவும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு காவடி எடுத்து வருகின்றனர். செய்வினை, பில்லி, சூனியம் விலகவும், சந்தோஷம் பெருகவும், உயர்பதவி வேண்டியும், அரசியல் வாழ்வு சிறக்கவும் முருகப்பெருமானுக்கு காணிக்கை செலுத்தப்படுகிறது.

இது தவிர தங்கள் ஊரில் மழைவளம் சிறக்கவும், மருத்துவ கல்லூரியில் தங்கள் குழந்தைகளுக்கு இடம் கிடைக்கவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கவும் பக்தர்களால் பழனி முருகன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. செவ்வாய்தோஷம் விலகி திருமணம் நடைபெறவும், தங்கள் தோட்டத்தில் உள்ள கால்நடைகள் பெருகவும் காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. தங்கள் குழந்தையின் அறுவை சிகிச்சை இனிதே நடைபெற வேண்டி காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. வெளிநாடு சென்று வேலை செய்வதற்கும் காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. நீண்டநாள் பிரிந்த கணவனுடன் இணைந்து வாழவேண்டி காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. தொலைந்து போன தங்கள் குழந்தை மீண்டும் கிடைக்க வேண்டியும், மனநிலை சரியில்லாத பெற்றோர்கள் குணமடைய வேண்டியும் பக்தர்கள் காணிக்கைகள் செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.

அதே போல் அரசு தேர்வுகளில் தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தப்படுகின்றன. கறவை மாடுகள், யானை குட்டிகள், சேவல் முதலானவற்றை நேர்த்திக்கடனாக செலுத்துவதாக வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் பழனி முருகன் கோவிலுக்கு அவற்றை காணிக்கையாக அளிக்கின்றனர்.

மேலும் திருவிழாக்காலங்களிலும், சாதாரண நாட்களிலும் பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தி பழனி ஆண்டவனை வழிபடுகின்றனர். பழனி முருகப்பெருமானுக்கு தானியங்களை காணிக்கையாக அளித்து வழிபடும் வழக்கம் தற்போது வரை இருந்து வருகின்றது. மலைக்கோவிலில் உள்ள படிப்பாதையில் பக்தர்கள் தானியங்களை சூறைவிடும் நிகழ்வும் நடைபெறும்.

தானியங்களை சூறைவிடுதல் கொங்கு நாட்டுப்புற கோவில்களில் காணப்படும் வழக்கமாகும். இந்நாட்டுப்புற வழக்கத்தினை பழனிமுருகன் கோவிலிலும் நம்மால் காணமுடிகின்றது. பழனி ஆண்டவனை செழிப்பு தெய்வமாக கருதி கொங்கு நாட்டு விவசாயிகள் வழிபட்டு செல்கின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் முந்திரி கொட்டைகளை நவதானிய உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்களுக்கு இடையே நிகழும் சமூக ஒருமைப்பாட்டுணர்வை இது காட்டுகின்றது.



பக்தர்கள் மலைக்கோவிலில் துலாபார காணிக்கையாக சர்க்கரை, அச்சுவெல்லம், வாழைப்பழத்தார், நெய், கற்கண்டு போன்றவற்றை காணிக்கையாக வழங்குகின்றனர். பழனி முருகன் கோவிலில் நம்பிக்கை தொடர்பான காணிக்கைகளாக காதுகுத்துதல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அன்னதானம் வழங்குதல், கங்கணக்காணிக்கை, உருவார காணிக்கை, தாலிக் காணிக்கைகளை அளித்தல் முதலியவை பக்தர்களால் செலுத்தப்பட்டு வருகின்றது.

மஞ்சள் துணியில் முடிந்து வைத்துள்ள கங்கணக்காணிக்கையை ஆண்களும் பெண்களும் பழனியாண்டவனுக்கு செலுத்தி வழிபாடு செய்கின்றனர். பக்தர்கள் பழனி ஆண்டவனுக்கு வழிபாட்டின் போது சொத்து காணிக்கைகளாக நிலங்கள், மண்டபங்களை செலுத்தியுள்ளதை அறியமுடிகின்றது. கோவிலுக்கும், சமூகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை இக்காணிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

இதே போல் பக்தர்கள் உண்டியல் காணிக்கைகளாக நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள், காசோலைகள், கைக்கடிகாரங்கள், வேல்கள் போன்றவற்றை செலுத்தி வழிபடுகின்றனர். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருகிற பக்தர்கள் தங்கள் நாட்டு நாணயங்கள், கரன்சி நோட்டுக்களை உண்டியலில் செலுத்தி வழிபட்டு செல்வதை காண முடிகின்றது.

நூற்றுக்கணக்கான கல் இருக்கைகள், படிக்கட்டுகள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளதை மலைக்கோவில் வளாகத்தில் காணமுடிகின்றது. பக்தர்கள் வேண்டுதல் அடிப்படையில் முருகனுக்கு தங்கத்தேர், சப்பரம், தங்கமயில் வாகனம் முதலியவற்றை காணிக்கையாக அளித்துள்ளனர். மன்னர்கள் பழனியாண்டவனுக்கு பூசை செய்வதற்காக நிலங்கள், பூசை பொருள்கள் வழங்கியது பற்றி கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே பழனியாண்டவனுக்கு பங்குனி திருநாளில் காணிக்கை செலுத்தி எல்லா வளமும் பெறுவோமாக...! 

No comments:

Post a Comment