Sunday, 24 December 2017

மந்திர கடிகாரம்


காஞ்சிப்பெரியவர், ஒருமுறை புதுக்கோட்டை சத்திரத்தில் தங்கியிருந்தார். இரவு சந்திர மவுலீஸ்வரர் பூஜையை முடித்து விட்டு, தனக்கு பணிவிடை செய்யும் நாகராஜன் என்னும் இளைஞரிடம், "நாகு! நாளை காத்தாலே மூன்றரை மணிக்கு என்னை எழுப்பிடு,'' என்று கட்டளையிட்டார்.

அவரும் பவ்யமாக, "உத்தரவு பெரியவா! நாளை காத்தாலே சரியா மூன்றரைக்கு "ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர'' என்று நாமாவளி கோஷம் பண்றேன் பெரியவா!'' என்றார்.

"ஒங்களை நான் எழுப்பி விட்டுறேன்னு சொன்னா நன்னா இருக்காதுங்கறதாலே "ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர' கோஷமிட்டு எழுப்பறேங்கிறயாக்கும்'' என்று சொல்லி சிரித்தார் பெரியவர்.

நாகராஜனும், "ஆம்' என தலையசைக்க, ""சரி சரி அப்படியே பண்ணு'' என்று கூறி விட்டு புறப்பட்டார். 

இரவு 11 மணிக்கு சத்திரத்தில் அனைவரும் தூங்கி விட்டனர். ஆனால், நாகுவுக்கு தூக்கம் வரவில்லை. 

கடிகாரத்தை எடுத்து மூன்றரை மணிக்கு அலாரம் வைத்து விட்டு, மனதிற்குள் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டே மெல்ல கண்ணயர்ந்தார். 

அதிகாலையில் கடிகார அலாரம் ஒலித்தது. மெல்லிய குரலில் "ஹரஹர சங்கர' கோஷம் சொல்ல, பெரியவரும் கண்விழித்து தரிசனம் கொடுத்தார்.

இப்படியே மூன்று நாட்கள் கடந்தன. நான்காவது நாள் நாகராஜன் எப்படியோ கண் அயர்ந்து விட்டார். அலாரம் அடித்தும் எழவில்லை. ஆனால், பெரியவர் எழுந்து, "நாமாவளி' சொல்லி நாகுவை எழுப்பி விட்டார். எதிரில் சிரித்த முகத்துடன் நின்ற பெரியவரைக் கண்ட நாகுவுக்கு, தூக்கி வாரிப் போட்டது. 

""நாகு! மணி சரியா மூன்றரை. இன்னிக்கு முடியாம தூங்கிட்டே போலிருக்கு! சரி ஸ்நானத்திற்கு ஏற்பாடு பண்ணு,'' என்று சொல்லி விட்டு சென்றார். மதியம் பூஜையை முடித்து விட்டு அமர்ந்திருந்த பெரியவரை வணங்கி நின்றார் நாகராஜன். 

பெரியவர், ""ஏண்டாப்பா நாகு! நீ நிக்கறத பார்த்தா ஏதோ கேட்கணும் போலிருக்கே! ஏன் தயங்கி நிக்கறேன்னு நேக்கு புரியறது. எப்படி அவ்வளவு சரியா மூன்றரைக்கு எழுந்திட்டேன்னு தான குழம்பிண்டிருக்க இல்லியா...'' என்றார்.

நாகுவும் ""ஆமாம் பெரியவா...'' என்று தலையசைத்தார். "ஏதாவது கர்ண யக்ஷிணி(தேவதை) காதுல வந்து சொல்லி எழுப்பிடுத்தோன்னு சந்தேகம் வந்துடுத்தோ,'' என்று சொல்லி பலமாகச் சிரித்தார்.

""கர்ண யக்ஷிணி ஏதும் வந்து காதுல சொல்லலே! அதைச் சொன்னது ஒரு பஸ். தினமும் நீ "ஹர ஹர சங்கர' சொல்லி எழுப்பற வேளையில, பஸ் ஒண்ணு இந்த சத்திர வாசலைக் கடந்து டவுனுக்குள்ள போச்சு. ரெண்டு நாளா அதைக் கவனிச்சேன். அப்புறமா, பகல்ல விசாரிச்சப்போ, அது டி.வி.எஸ்.காரா பஸ்ஸுன்னும், மதுரையிலேர்ந்து புதுக்கோட்டைக்கு வர முதல் சர்வீஸ்ன்னும் சொன்னா.... மூணுநாளா பாத்து வச்சுண்டதால நாலா நாள் பஸ் சத்தம் கேட்டதும் எழுந்துட்டேன். வேற ஒரு ரகசியமும் இதில இல்லடாப்பா!'' என்று சொல்லி தன்னை மறந்து வாய் விட்டுச் சிரித்து மகிழ்ந்தார்.

எதையும் துல்லியமாகக் கவனிக்கும் பெரியவரின் மகிமை கண்ட நாகு மெய் மறந்து நின்றார்.

No comments:

Post a Comment