Saturday 30 December 2017

எலி மீது யானை என்ன இது வினோதம்


யானை வடிவம் கொண்டவர் விநாயகர். இவர் எலி வகையைச் சேர்ந்த மூஞ்சூறுவை வாகனமாகக் கொண்டவர். பெரிய யானையை சிறிய எலி ஏற்றிச் செல்வது என்பது ஏன்? இதன் தத்துவம் தான் என்ன?'' என்பது நம் மனதில் எழும் கேள்வி. ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு வாகனம் உண்டு. அந்தந்த தெய்வத்துக்குரிய வாகனம், அந்த தெய்வத்தின் தனித்தன்மையை விளக்குகிறது. விநாயகரை "மூஞ்சூறு வாகனன்' என்று சொல்கிறோம். 

ஒரு எலி மீது யானை ஏறிச்செல்வது என்பது நகைச்சுவைக்குரிய விஷயமாகத் தோன்றலாம். யானையின் காலடியில் ஒரு துளிப்பகுதி பட்டாலே அது நசுங்கிப் போகும். ஆனால், இதுவே ஒரு யானையைத் தாங்கிச் செல்கிறது என்றால், அதனுள் இருக்கும் தத்துவம் இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை.
மனிதனுக்கு கஷ்டம் வரத்தான் செய்யும். அது உயிரே போகுமளவு தாங்க முடியாத துன்பத்தைக் கொடுக்கும். அந்த சமயத்தில் அதைப் பொறுமையுடன் ஏற்க வேண்டும். அந்தச் சோதனையில் இருந்து மீள முயற்சிக்க வேண்டும் என்பதே இதன் தத்துவம்.

ஆத்மாவைப் பற்றிய உண்மை ஒன்று உண்டு. பெரியதில் எல்லாம் பெரியது ஆத்மா. அதே போல சிறியதில் எல்லாம் சிறியது அதுவே. ஜீவாத்மாக்களின் உடலில் இயங்குவது சிறிய ஆத்மா என்றும், பெரிய உடலில் இயங்குவது பேராத்மா என்றும் எண்ணக்கூடாது. உடல் சிறியது எனினும் உள்ளிருக்கும் ஆத்மா மிகப்பெரியது. வடிவங்களுக்குள் அது கட்டுப்படுவதில்லை. அதாவது, அதற்கு ஒரு அளவைக் காட்ட முடியாது. ஆத்மா பிரிந்து விட்டால், உடல் பயனற்று சாய்ந்து விடுகிறது. 

நம் கண் முன் காணும் பொருட்களுக்கு எடை, அளவு எல்லாம் உண்டு. கனமானது, லேசானது, நீளமானது, அகலமானது, குறுகியது என்று அவற்றைப் பிரிக்கலாம். ஆனால், அறிவுப்பொருளுக்கு இப்படி அளவீடு தர முடியாது. அறிவு வளர்வதால் மூளைக்கோ, உடலுக்கோ பாரம் ஏற்படாது. அதுபோல, சிறியவர்களான நாம், இறைவனைக் குறித்த பேரறிவை வளர்த்து அவனை அடைய வேண்டும் என்பதை இந்த வாகனத்தத்துவம் உணர்த்துகிறது. 

அதாவது எலி என்பது மனிதன். யானை என்பது அறிவு. சிறியவனான மனிதன் மிகப்பெரிய அறிவைப் பெற வேண்டும் என்பதை மூஷிக வாகனன் நமக்கு எடுத்துச் சொல்கிறார். 

No comments:

Post a Comment