மதுரை மாவட்டம் தேவன்குறிச்சி, டி.கல்லுப்பட்டி எனும் தலத்தில் அக்னீஸ்வரராக ஈசன் அருள்பாலிக்கிறார். கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கஞ்சனூர் எனும் பிரசித்தி பெற்ற சுக்கிரன் தலத்தில் அக்னீஸ்வரரே மூலவராக அருளாட்சி நடத்துகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள நல்லாடை எனும் தலத்தில் மூலவராக அக்னீஸ்வரர் அருள்கிறார்; அம்பாள் சுந்தரநாயகி எனும் திருநாமத்தோடு அபயம் அளிக்கிறாள். இங்கு அக்னி சொரூபமாக இருப்பதால் அதை தணிக்கும் வகையில் அருகேயே தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டிருப்பது சிறப்பாகும். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் மூலவராகவே அக்னீஸ்வரர் அருள்கிறார்.
கோயிலின் தீர்த்தமே அக்னி தீர்த்தம்தான். திருச்சி, ஸ்ரீரங்கத்திற்கு அருகேயுள்ள எட்டரை கிராமத்தில் அக்னீஸ்வரர் அருள்கிறார். திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூர் அக்னித்தலமாக கருதப்படுகிறது. அதேபோல ராஜவல்லிபுரம் எனும் தலத்தில் அக்னீஸ்வரர் மூலவராக ஆருள்பாலிக்கிறார். அக்னி பகவான் சிவபெருமானை பூசித்த திருத்தலங்கள் ஏழு ஆகும். அவை திருப்புகலூர், கஞ்சனூர், அன்னியூர், திருத்துறைப்பூண்டிக்கு அருகேயுள்ள திருக்கொள்ளிக்காடு, கோட்டூர், திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணத்திற்கு அருகேயுள்ள முழையூர் ஆகும். முழையூர் ஈசனுக்கு வன்னீஸ்வரர் என்பது பெயராகும். ‘வன்னிக்குடி முழையூர்’ என்றே இவ்வூர் அழைக்கப்பட்டிருந்திருக்கிறது.
கரூருக்கு அருகேயுள்ள நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. இதற்கு அருகேயே அக்னீஸ்வரர் எனும் திருப்பெயரில் கோயில் அமைந்துள்ளது. ஈசனின் நெற்றிக் கண்ணை உலைக்கண் என்பார்கள். உலை என்பது கனன்று நெருப்புப் பொறியோடு காணப்படுவதாகும். மாமல்லபுரத்தில் பழைய கலங்கரை விளக்கம் என்ற பெயரில் இருப்பது உலைக்கண்ணீஸ்வரருக்கு கட்டப்பட்ட கோயிலாகும். கார்த்திகை மாதத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு பிரம்மா-விஷ்ணுக்கிடையே ஏற்பட்ட போட்டியால் ஈசனே நெருப்பு ஸ்தம்பமாய் நின்ற நிகழ்வையே விளக்குகிறது.
அந்த பெருந்தீயையே நாம் புறத்திலே எரியவிட்டு அகத்திலும் எரிய வேண்டுமென பிரார்த்திக்கிறோம். இதுதவிர அக்னியை கரத்தில் ஏந்தி (அக்னி சட்டி) வருதல், நெருப்பு மிதித்தல், அக்னிக் காவடி என்று பல்வேறு சடங்குகளினூடாகவும் அக்னி வழிபாட்டை நாம் மேற்கொண்டு வருகிறோம். அந்தணர்கள் மூன்று சந்நதிகளிலும் ‘செந்தீ வேட்டல்’ எனப்படும் ஆஹிதாக்னியை வழிபட்டு அக்னி ஹோத்ரம் செய்வர். ஈசன் இவர்களின் வேள்விக் குண்டத்தில் முத்தீயின் வடிவமாக விளங்குகிறார். அக்னி காலையில் பாலகனாகவும், முற்பகலும் பிற்பகலும் சந்திக்கும் வேளையில் யௌவனாக்னியாகவும், இரவு தொடங்கும் அந்திப் பொழுதில் விருத்தாக்னியாகவும் வழிபடப்படுகிறார். வேதங்கள் அந்தணர்கள் வேட்பித்து வணங்கும் தீயை தட்சிணாக்னி, காருகபத்யம், ஆஹவனீயம் என்று வகைப்படுத்தி வேள்வி செய்து வணங்குகின்றார்கள். அக்னீஸ்வரராக இருந்து இறைவன் அருள்பாலிப்பதுபோல அக்னி தீர்த்தமாகவும் பல்வேறு தலங்களில் அமைந்திருக்கின்றன. திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கே அமைந்துள்ளது திருவெண்காடு, ராமேஸ்வரம், கீழ்வேளூர், கூவம் ஆகிய தலங்களிலும் அருள்பாலிக்கின்றார்.
No comments:
Post a Comment