சிவாலயங்களில், பிரதோஷம், கார்த்திகை சோமவாரம் என விசேஷ நாட்களில் கூட்டம் வருவது போய், இப்பொழுதெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாட்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது.
பெரும்பாலும் ஆலயத்துக்குள் நுழைந்தால், ஆஹா....இத்தனை கூட்டமா? என்று மனதில் ஓர் உற்சாகம் இருந்தாலும்....திடீரென்று பார்த்தால் அவர்கள் மொத்தமாக ஒரே சந்நிதியில் விழுந்து கிடப்பார்கள்.
கடலை மாலைகள்! எள்ளெண்ணெய் தீபங்கள்! ஒன்பது தடவை பிரதட்சணம்! நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை! குரு பகவான், சனி பகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்! ஆனால், இங்கே சிவபெருமான் முன்பு ஒரு ஈ..காக்கா கூட இருப்பதில்லை......என்னதான் நடக்கிறது இங்கே? நாம் வணங்கும் சிவனை விட சக்தி வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள்? எதற்காக மக்கள் இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள்?
"நாமார்க்கும் குடியல்லோம்" என்று முழங்கிய நாவுக்கரசர் பரம்பரையில் தோன்றிவிட்டு. "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே" என்று உரத்துச்சொன்ன சம்பந்தர் மரபில் தோன்றிவிட்டு. இப்படிப்போய் வீழ்ந்து கிடக்கிறீர்களே! மக்களை சொல்லிக் குற்றமில்லை! நவக்கிரகங்களை ஏதோ பேய், பிசாசு போல் உங்களை அச்சுறுத்தி வைத்துள்ளார்கள் பிரபல ஆன்மிக வியாபார பத்திரிகைகளும், ஆன்மிக பேச்சாளர்களும்.
இறைநம்பிக்கை கொண்ட எவரையுமே, நாளும் கோளும் எதுவுமே செய்யாது…….. பின்னே? எதற்காக இத்தனை அச்சம்? ஆழ்ந்துபார்த்தால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. இப்படி தோஷ பரிகாரம், கிரகப்பெயர்ச்சி, என்று ஆயுளைக் கழிக்கும் எல்லோருமே தன்னம்பிக்கை அற்றவர்கள்! மக்கள் அனைவரும் உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். மிகப்பழையான ஆலயங்களுக்குச் சென்று பார்த்தால் அங்கு நவக்கிரகங்களின் திருமுன்களே இருக்காது! அப்படியும் இருக்கின்றதென்றால் அது மிக அண்மையில் கட்டப்பட்டதாகவே இருக்கும்.
அந்தந்த சிவாலயங்கள் யாரால் வழிபடப்பட்டதோ அந்த மூர்த்தி மட்டும் தனியாக பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. உதாரணமாக சனி, திருநள்ளாறில் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதனால் அந்த மூர்த்தியை மட்டும் விசேஷமாகப் பிரதிஷ்டை செய்திருந்தனர். இது நம் நாயன்மார்கள் தோன்றிய தலங்களில் அவர்களின் விசேஷ சந்நிதிகள் அமைவது போல.. திருநள்ளாறு இன்று சிவன்கோயில் இல்லை! அது சனி பகவான் கோயில், திங்களூர் சிவன்கோயில் இல்லை, அது சந்திரன் கோயில்! வைத்தீசுவரன் கோவில் சிவன்கோயில் இல்லை, அது செவ்வாய் கோயில்! இப்படித்தான் இன்று அவை
பிரபலம் பெற்று விளங்குகின்றன.
நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவை! இறைவனின் பரிவாரம் என்ற வகையில், அவையும் நம் வணக்கத்திற்குரியவை! அவை ஒரு மானிடனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை... உண்மைதான்! ஆனால், ஆணை செலுத்துபவனிடமே அடைக்கலம் புகுந்தால், அவை நம்மை என்ன தான் செய்யமுடியும்? அதை விடுத்து, கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருப்பது, நமக்கு அருள்வதற்குக் காத்திருக்கும் இறைவனை அவமதிப்பதே ஆகும் அல்லவா? கோளறு பதிகம், திருநீலகண்டப் பதிகம், திருத்தாண்டகம் போன்ற திருப்பதிகங்கள் நம் எத்தகைய ஆபத்துக்களையும்,
துன்பங்களையும் நீக்கக் கூடியவை. அவற்றை சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.
மேற்படி பதிகங்களையும், அந்தந்த நவக்கிரகங்கள் வழிபட்ட பரிகார தலங்களில் நாயன்மார்களால் பாடப்பட்ட தேவார திருப்பதிகங்களையும் பாடி மூலவரான சிவபெருமானை வழிபடுவதை விட நம் இடர் களைவதற்கான உபாயமே வேறு இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். மூலமூர்த்தியை வழிபட்ட பின் நவகிரகங்களை வழிபடுவது ஏற்புடையது. மூலமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபடாமல் செய்யும் நவக்கிரக வழிபாட்டால் யாதொரு பலனும் இல்லை.
தோஷ நிவர்த்தி பரிகாரம், அது, இது என்று கொட்டும் பணத்தை வசதி குறைந்த சிவாலயங்களில் தொண்டு செய்வதற்கும், சிறிய சிதிலமடைந்த சிவாலயங்களை புனரமைப்பதிலும், சிவனடியார்களுக்கு உதவுவதிலும், ஏதாவது ஏழை எளியவர்களுக்கு உதவுவதிலும், முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என்று எங்காவது போய் அன்னதானம், ஆடைதானம் செய்வதிலும் செலவழியுங்கள். வயிறும் மனமும் நிறைந்து, "ஐயா, அம்மா" என்று அவர்களில் ஒரே ஒருவர் மனதார நினைத்தாலும் போதும். அந்த வாழ்த்தே உங்களைப் பற்றவரும் சனிபகவானை ஓட ஓட விரட்டிவிடுமே!
No comments:
Post a Comment