Tuesday, 26 December 2017

ஆண்டாளின் அவதார நோக்கம் என்னவென்று தெரியுமா ?

andal 1

தனக்கு வேண்டியவற்றை எல்லாம் பகவான் பார்த்துக் கொள்வார் என்பதை உணர்ந்து, அவரது பாத கமலங்களுக்குத் தொண்டு புரிவதே தமது தொழில் என்று வாழ்வதே சரணாகதி. அப்படிப்பட்ட உயர்ந்த தத்துவத்தை நமக்குக் கற்றுக்கொடுப்பதற்காக இம்மண்ணுலகில் தோன்றிய 12 ஆழ்வார்களில் ஒன்பதாவது ஆழ்வாராக ஆண்டாள் அவதரித்தார்.

பகவானின் ஒவ்வொரு அவதாரத்தின் போதும் அவருடைய பத்தினிகளும் உடன் அவதரிக்கின்றனர். பகவானின் துணைவியர் மூவர் - திருமகள், மண்மகள், ஆயர் மடமகள். திருமகள் என்பது லக்ஷ்மியையும், மண்மகள் என்பது பூமி பிராட்டியையும், ஆயர் மடமகள் என்பது நிலா தேவியையும் குறிக்கும்.

மனம் நினைத்ததை வாய் பேசும் படியும், வாய் பேசியதை உடல் செய்யும் படியும் நாம் பழக்கப்படுத்த வேண்டும். மனம், வாக்கு, காயம் இம்மூன்றும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரிடமே நிலைத்திருக்க வேண்டும். அவரை வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க வேண்டும் என்னும் சுலபமான வழியை நமக்கு எடுத்துரைக்கப் பூமி பிராட்டி உயர்ந்த வைகுண்டத்திலிருந்து பூமியில் அவதரித்தாள்.

ஆண்டாள் திருமண வயதை அடைந்தவுடன், பெரியாழ்வார் தன் மகளிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்க, மானிடர்கள் எவரையும் நான் மணக்க மாட்டேன், அந்தக் கண்ணனே என் மணாளன் என்று பதிலுரைத்தாள். பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் திருவரங்கத்தில் சயனித்திருக்கும் அரங்கனை மட்டுமே மணமுடிப்பேன் என்று ஆண்டாள் விருப்பம் தெரிவித்தாள். தனது மகளுக்கு என்ன நடக்கும் என்ற விந்தையுடன் பெரியாழ்வார் வாழ்ந்தார்.

ஒருநாள் பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய ஸ்ரீ ஹரி, உம்முடைய மகளைத் திருமணக் கோலத்தில் திருவரங்கம் அழைத்து வருக, என்று கட்டளையிட்டார். அதேபோல் பாண்டிய மன்னன் வல்லபதேவரின் கனவிலும் தோன்றி, வில்லிபுத்தூருக்குப் போய் பெரியாழ்வாரையும், ஆண்டாளையும் திருவரங்கத்திற்கு அழைத்து வரும்படி பணித்தார்.

அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருமணக் கோலத்தில் ஆண்டாள் திருவரங்கம் சென்றாள். கோவிலுக்குள் நுழைந்தவுடன் தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல், பல்லக்கிலிருந்து குதித்து கர்ப்பகிரகத்தை நோக்கி ஓடினாள். உள்ளே சென்று அரங்கனின் திருவடிகளைத் தொட்டார், தொட்டவுடன் மறைந்தார். முழுமுதற் கடவுளின் நித்திய லீலையில் பங்கேற்க சென்றார்.

ஆண்டாள் கல்யாணம் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் கோவில்களிலும், பல பக்தர்களின் வீடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிலரது வீடுகளில், ஆண்டாள் திருமணத்தை நடத்தாமல் எந்த விஷேசங்களும் நடைபெறுவதில்லை.

ஆண்டாள் திருமணத்தை ஒரு வாரத்திற்கு குறையாமல், ஆண்டாளை ஆராதித்து கொண்டாடுகிறார்கள். பலர் திருப்பாவை பாசுரங்களைச் சொல்லிவிட்டு தான் கடவுளுக்கு பூஜை மற்றும் நெய்வேத்தியம் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

No comments:

Post a Comment