Wednesday 27 December 2017

தோஷங்கள் நீக்கும் நள தீர்த்தம்

Image result for நள தீர்த்தம்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனிபகவான். சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம். இங்கே நளதீர்த்தத்தில் நீராடி சனீசுவரை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார். விரும்பிய பலன்களை அளிப்பார் என்பது  புராண வரலாறு. 

நளன்குளம் வரலாறு : 

பிரமாண்டமான அரண்மனை கொலு மண்டபத்திலே தமயந்தியின் சுயம்வரத் திருமணம் நடந்தேறியது. நள மகராஜனை மணந்து கொண்ட தமயந்தி, மனமகிழ்ச்சியுடன் நளனுடன் கைகோர்த்துக்கொண்டு மணமாலை சகிதமாய் மணிமண்டபத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். தமயந்தியின்  சுயம்வரம் திருவிழாவில் தானும் பங்கேற்று தமயந்தியை அடைய வேண்டும் என்ற ஆவலோடு எதிரே சற்று தொலைவில் சனீஸ்வர பகவான் வந்து கொண்டிருந்தார்.  

சனீஸ்வரனின் ஒரு கால் ஊனமாக இருந்ததால் அவரால் குறிப்பிட்ட நேரத்துக்குள் சுயம்வரத்துக்கு வரமுடியாமல் போனது. இப்போது சுயம்வரம் முடிந்து நளனும், தமயந்தியும் எதிரே வருவதை கண்டார். தமயந்தி தமக்கு கிடைக்காமல் போனதால் வேதனையும், கோபமும் கொண்டு அப்படியே நின்றுவிட்டார். நளனும் தமயந்தியும் பெருமகிழ்ச்சியுடன் ஆனந்தமாக சிரித்தபடி சனீஸ்வரனை கண்டும் காணாமலும் சென்றனர். சனிபகவானுக்கு அவர்கள் இருவரையும் ஆட்டிப்படைக்கும் சந்தர்ப்பமும் கிட்டியது. இறைவனை பூஜிப்பதற்காக பாதத்தில் தண்ணீர் ஊற்றி கழுவ முனைந்த நளன், சரிவரக்கழுவாமல் பூஜைக்கு சென்றமர்ந்தான். இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த சனிபகவான், நளனின் இடது கால் பாதத்தை பற்றிக்கொண்டான்.  

சனியின் தோஷத்திற்கு ஆளான நள சக்கரவர்த்தி, ஏழரை ஆண்டு சனி பிடித்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்தார். நாரத மகரிஷி அறிவுரையின்படி சனிப்பிரீத்தி செய்ய தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். பல மகான்களை தரிசித்தும், புண்ணிய நதிகளில் நீராடியும் அவனது மனக்கலக்கம் தீரவில்லை. இறுதியில் பரத்வாஜ முனிவரை சந்தித்து தன் மனக்கலக்கம் தீர வழிகேட்டான். அவரும், திருநள்ளாறு சென்று வழிபடுமாறு கூறினார். நளமகராஜனின் இந்த பிரமை நீங்க திருநள்ளாறுக்கு குடும்பத்துடன் வந்து அங்குள்ள குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசித்து கருமை நிற வஸ்திரம் சாற்றி, எள் அன்னம் நிவேதனம் செய்து, எள் விளக்கேற்றி தம் பிழையை பொறுத்தருளவும், நல்வாழ்வு கிட்டவும் வேண்டிக்கொண்டான்.   

சனிபகவான் தனக்கு காட்சி கொடுத்து பேரருள் வழங்கியதால் நளமகராஜனின் ஏழரை சனியின் கொடுமை, துன்பங்களும் நீங்கியதாம். நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நளதீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று சனிபகவான் வரம் அருளினார். நளனும் நள தீர்த்தத்தை  உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை வைகாசி மாதம் புனர்பூச நாளில் நடத்தி இறைபணி செய்து உய்யுற்றான் என்பது வரலாறு.

No comments:

Post a Comment