Tuesday, 26 December 2017

மார்கழி மாத பூசையின் சிறப்பும், பூசையில் பொங்கல் நிவேதனமும்

14sriperumal1

ஸ்ரீ ஆகிற  மஹாலக்ஷ்மீ, “தேவதேவ! ஜகந்நாத! பிரம்மருத்திராதிகளால் வணங்கப்பட்டவரே! மார்கழி மாதத்தில் விடியற்காலையின் பூசையின் சிறப்பு என்ன? முத்கான்னாதி (பொங்கல் முதலியன) அக்காலத்தில் எதற்காக நிவேதனம் செய்யவேண்டும்? எதிலிருந்து இந்த உற்சவம் மோக்ஷம் அளிக்கிறது? இதற்கு உயரமான மண்டபம் தேவை என்பது பற்றியும் கூறுங்கள்” எனக்கேட்க, பகவான்  மறுமொழி கூறுகின்றார்.

மார்கழி மாதபூசையின் சிறப்பும், பூசையில் பொங்கல்  நிவேதனமும். மார்கசீர்ஷம் என்பது தேவதைகளுக்கு காலைநேரம் ஆகும். காலை நேரமானது மகான்களால் ஸாத்விகமான நேரம் எனப்பட்டது. பொங்கல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவை ஸாத்விக அன்னங்கள். ஸாத்விக காலத்தில் எம்பெருமானை ஸாத்விக அன்னங்களால் மகிழ்விக்கவேண்டும். ஆதலால் தனுர்மாஸத்தில் மிளகு,பால்,நெய் சேர்த்த முத்கான்னத்துடன் (பொங்கலுடன்) தொட்டுக்கொள்ள சர்க்கரை, வாழைப்பழம், நறுமணமுள்ள லேக்ய சோஷ்யங்கள் போன்றவற்றையும் ஸ்வாமிக்கு நிவேதனமாகச் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு தினமும் காலையில் ஸ்வாமிக்கு நிவேதனம் புரியவேண்டும், இதனால்  12 வருடப் பூசைப்பயன் ஒரு நாளில் கிட்டுகிறது. தனுர்மாஸ(மார்கழி) பூசையின் பயன்களாக சம்பத், ஆயுஷ்யம், புஷ்டி, மோக்ஷம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

மோக்ஷோத்ஸவம்  :

பிரளய காலத்தில் நான் ஆலிலைமேல் துயின்றபோது நீ (லக்ஷ்மீ) சிறியவடிவில் என் மார்பில் குடிகொண்டாய். பிறகு என்னுடைய ஸங்கல்பத்தால் எனது நாபியிலிருந்து நான்முகன் நால்வேதம் உச்சரித்தவாறே தோன்றினார். எல்லாவற்றிற்கும் காரணமான என்னை பிரம்மதேவர் நினைக்கவில்லை. அவருக்கு எதிராக எனது காதிணைகளிலிருந்து இரு அசுரர்கள் தோன்றினர். அவர்கள் பிரம்மதேவரைக்கொல்ல நினைக்க, அப்போது பிரம்மதேவர்  ஜலத்தில் படுத்திருந்த என்னைக்குறித்து தோத்திரம் செய்தார். நானும் தானவர்களைப் பார்த்து உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேளுங்கள் என்றேன். அதற்கிணங்காததால் அவர்கள் என்னுடன் போரிட்டு  மாய்ந்தனர். திரும்பவும் உயிர்த்தெழுந்து அவ்வசுரர்கள் ஒரு மாதகாலம் என்னுடன் போரிட்டனர். இதற்கிடையில் என்னுடன்போரிட்ட தானவர்கள் தேவ பதவியை அடைந்தனர். சங்குசக்ர தாரிகளாக என்னை அறிந்து பூசித்துவணங்கினர். எம்பெருமானிடம் வைகுந்த வாசத்தையும் வேண்டினர். 

தனுர்மாதம், சுக்லபக்ஷம், ஏகாதசீ சூர்யோதயவேளையில் வடக்கு வாயிலைத் திறந்து அவ்வழியால் வைகுந்தம் அடைந்தனர். ஸ்ரீவைகுண்டத்தில் அவர்கள் ஸத்யலோகத்திற்கு மேலேயுள்ள சுத்தசத்வத்தில் நித்யசூரிகணங்களால் சூழப்பட்டதும், ரத்னமண்டபத்தின் நடுவிலும், ரத்னகம்பளத்தில் அரவணையில் கண்துயிலும் என்னைக்கண்டனர். இங்கே நித்யசூரிகளின் கீர்த்தனம், ஏகாயனாதிகளின் ருக்வேதாதி பாராயணம், ஆயுதங்களாகிற சங்கு,ச க்ராதி மூர்த்திகளால் பணிவிடை, வினதைசிறுவன் அஞ்சலிமுத்திரையோடு எம்பெருமானைத்தொழுதல், சேனை முதல்வர் தன்னுடைய குமுதாதிகணங்களுடன் ஆங்கே வீற்றிருத்தல், ஜயாதி துவார பாலகர்கள் வாயிலைக்காத்தல் ஆகியவற்றைப்பார்த்து, எங்களது நிலையையும் உணர்ந்து நாங்கள் மயிற்கூச்செரிய மகிழ்ச்சியுற்றோம். அந்த சுரோத்தமர்கள் ஆங்கே எம்பெருமானை பற்பல தோத்திரங்களால் துதித்தனர்.
    
ஸத்யலோகத்திற்கு மேலான வைகுந்தத்தின் பெருமையை உலக வாழ்க்கையில் உள்ள மக்கள் யாவருமறியார். எத்தனையோ கோடி ஜன்மமெடுத்து உன்னருளால் உலகவாழ்கையெனும் கடலின் கரையைக் கடந்து உன்னைச்சரணடைந்தோம். உன்னால் தள்ளப்பட்ட நாங்கள் உங்களது பாதகமலத்தையே சரணாகப்பற்றினோம். பிரம்மாதிகள் கூட உன்னுலகுக்கு ஒப்பான ரத்னமந்திரம் நிறுவி அர்ச்சையில் உன்னை ஆராதித்து ஏகாதசி உத்ஸவம் செய்யலாம். அப்படி யாவர் உன்னைப்பார்க்கின்றாரோ, வணங்குகின்றாரோ, வடக்கு வாயில் வழியாக நுழைகின்றாரோ அவர்கள் இந்த ஸ்ரீவைகுந்தத்தை அடைந்து நித்யசூரிகள்போலே மகிழ்ச்சியுறட்டும்’ என்று அவ்விருவரும் பிரார்த்தனை செய்தனர். 

அதைக்கேட்ட பக்தவச்யன் ஆன எம்பெருமான், ’உங்களிருவரின் மகிழ்ச்சிக்காகவே இந்த உத்ஸவத்தை செய்யச் செய்கிறேன். அது முதல் எனது ஆக்ஞையால் எங்கும் இவ்வுற்சவம் கொண்டாடி, ஏகாதசியில் வடக்குவாயிலை நுழைகின்ற அனைவருக்கும் மோக்ஷம்  தருகிறேன்’ என்று  அப்போது  கூறினார்.  ஆதலால்  இதற்கு  ‘மோக்ஷோத்ஸவம்’  என்று பெயர். 

மோக்ஷோத்ஸவவிதி :

தசமீ கூடிய மாலையில் - பிரளாயப்தி ஜலேசாயின் மதுகைடப சேவித I பிரார்த்திதம்  து உத்ஸவம்  தாப்யாம் உத்சவம் கர்த்துமாரபே II அனுக்ஞாம் தேஹி தேவேச வைகுண்டாலயபூஷண !  என்று பிரார்த்தித்து எம்பெருமானின் அனுமதிபெற்று ஆசார்யன் மிருத்ஸங்கிரஹணம் முதலியவற்றை சாத்திரம் கூறியபடி அனுஷ்டிக்க வேண்டும். ஏகாதசி விடியற்காலையில் நித்யபூசையை முடித்து, உனக்கு மோக்ஷோத்ஸவம் செய்ய விரும்புகிறேன். ’ஜகத்பதே அஸ்மின் கர்மபிம்பே ஆயாஹி’ இதி விக்ஞாப்ய, பிம்பத்தில் ஆவாஹித்து அர்க்ய பாத்யங்கள் சமர்ப்பித்து, பிம்பத்திற்கு கங்கணதாரணம் செய்து, எம்பெருமானை கல்யாணவேதிகையில் எழுந்தருளச்செய்து அவனைத்தோத்திரத்தால் தொழுத வண்ணம் வடக்குவாயிலுக்கு எழுந்தருளச்செய்ய வேண்டும். 

ஆசார்யரானவர் எம்பெருமானை சிரமபரிஹரமாக அர்க்யபாத்யாதிகளால் உபசரித்து, ருக்வேதாதிமந்திரங்களால் பெருமாளைத்துதித்து கதவத்தையும் பூசிக்க வேண்டும். (வடக்கு) வாயிலுக்கு வெளியில் ஸர்வவேதங்கள், ஸர்வவாத்யங்கள், பாசுரங்கள், தோத்திரங்கள் ஞானிகளால் தொழுதேத்தப்பட்டவாறே அமைய ஆசார்யர் கதவதங்களைத்திறந்து அந்த வழியால் எம்பெருமானை எழுந்தருளச் செய்யவேண்டும். அப்போது தேவனை தரிசிப்ப வர்கள் அந்த வாயிலால் செல்பவர்கள் மகாபாதகர்கள் ஆயினும் மோக்ஷத்தை அடைவராகின்றனர். பிறகு எம்பெருமானை திருமாமணி மண்டபத்திற்கு எழுந்தருளச்செய்து ஆசனத்தில் அமர்த்தி அர்க்யபாத்யங்கள் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு ஆழ்வார்களை ஒவ்வொருவராக எம்பெருமான் முன்னிலை யில் கொணர்ந்து சந்தனம், மாலை, துளஸி போன்றவை அளித்து, ஸ்ரீசடகோபம் சாதித்து எம்பெருமானைப் பார்த்த வாறு எழுந்தருளச்செய்யவேண்டும். 

பிறகு அவர்கள் இயற்றிய திவ்யபிரபந்த்தைப்பாடி எம்பெருமானை மகிழ்விக்கவேண்டும். பிறகு தீபாராதனம் (தைலதீபம்), பக்ஷ்யபோஜ்யநிவேதனம், பலம், தாம்பூலசமர்ப்பணம், கர்ப்பூர நீராஜனம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் எம்பெருமானை புறப்பாடுசெய்து,  ஆஸ்தானத்திற்கு எழுந்தருளவித்து, மூலசக்தியுடன் சேர்க்கவேண்டும். பிறகு சிரமத்திற்கு  க்ஷமைபிரார்த்தித்துக் (மன்னிப்பு கோரிக்) கொண்டு  சயனாசனம் வரை பூசிக்கவேண்டும்.

மறுநாள் துவாதசி முதல் இந்த உற்சவத்தினை  மாலையில் அனுஷ்டிக்க வேணும். இவ்வாறு 9 நாட்கள் கொண்டாடி 10 ஆம் நாள் காலை தீர்த்த ஸ்தானத்திற்கு எழுந்தருளச்செய்து அவபிருதஸ்நானம் (தீர்த்தவாரி) செய்விக்கவேண்டும். பிறகு ஸிம்மாஸனத்தில் எழுந்தருளச்செய்து முன்போல் பக்தபிம்பங்களுக்கு மரியாதைகளைச் செய்து அக்னி, மண்டலம், கும்பம் ஆகிய வற்றிலிருந்து சக்தியை பிம்பத்திலேற்றி கர்பக்ருஹத்திற்கு எழுந்தருளச்செய்து மூலத்தில் இதனையும் இணைக்கவேண்டும். உத்தராயண காலத்தைக்கணக்கிட்டு இந்த அவபிருதம் வருமாறு உற்சவம் செய்ய வேண்டும். மார்கழி முதல் தினத்திலிருந்து 20 நாட்களில் இந்த பகல்பத்து, இராப்பத்து உற்சவத்தைச்செய்து பிறகு கொடியேற்றி மகோத்ஸவமும் செய்யலாம் என்கிறது சாஸ்திரம். 

மோக்ஷோத்ஸவத்திற்கு உயரமான மண்டபம் தேவை  :

மண்டபம் உயர்மட்டத்தில் அமைப்பது பொருளையும் தற்போது விவரிக்கிறேன். இந்த உற்சவம் நடத்த தேவர்களால் முன்பு பிரார்த்திக்கப்பட்டது போல மோக்ஷம் பெற்ற அவ்விருவரும் ராக்ஷஸகுணத்திலிருந்து விடுபட்டு மகோன்னதர்களாகி தினமும் வணங்குவார்கள். அவர்களின் சுகபிரவேசத்தின் பொருட்டு உயர்ந்ததாய்மண்டபம் அமைக்கவேண்டும் என்பது சாஸ்திரம். 

அத்யயனஉற்சவம் பூர்வம், (பகல்பத்து) அபரம்(இராப்பத்து) என இருவகைப்படும்.  அதனை முறையே காலையிலும் மாலையிலும் செய்யவேண்டும் கார்த்திகை (சாந்த்ர மானப்படி) மார்கழியிலோ அத்யயன உத்ஸவம் செய்யவேண்டும். மார்கழி மாதம் சுக்லபிரதமையில் தொடங்கவேண்டும் அத்யயன உத்ஸவத்தை  தசமியில் முடித்துப் பின் கிருஷ்ணபக்ஷ பஞ்சமியில் நிறைவடையுமாறு இராப்பத்தைத் தொடங்கவேண்டும். முதல், இரண்டு, மூன்றாம் திருச்சுற்றிலோ அல்லது எங்தேனும் இதற்கான மண்டபத்தை கிழக்கிலும் பூமியிலிருந்து உயரமாக அமைக்கலாம். மண்டபத்தை தன்னை பாக்குகளாலும் கொடி, பிரதிமைகளாலும் தேவந்த்ராதிகள் வருவதற்கு வசதியாக அலங்கரித்தல் வேண்டும்.

உத்ஸவத்தின் முதல் நாள் அங்குரார்ப்பணம் செய்யவேணும். தினமும், காலைவேளை பூசைமுடித்து திருமகள் கேள்வனை, “பிதாம்பரதர ஸ்ரீமன் கௌஸ்துபானந்த கந்தர! மகாய அத்யயனாய அஸ்மின் பிம்பே ஸந்நிதிம் ஆவஹ” எனப்பிரார்த்தித்து தேவேசனிடத்தில்  மூலத்திலிருந்து சக்தியைச் சேர்த்து புறப்பாடு செய்வித்து, கோயிலை வலம்வந்து மகாமண்டபத்தில் ரத்னஸிம்மாஸனத்தில் எழுந்தருளச்செய்ய வேண்டும். பிறகு தேவனைப் பார்த்தவண்ணம் எம்பெருமானுக்கு எதிரில் பக்தபிம்பங்களை (ஆழ்வார்களை) எழுந்தருளப்பண்ணி தேவனையும், பக்தபிம்பங்களையும், பூசித்து பக்ஷ்யங்கள் நிவேதனம் செய்யவேண்டும். 

பிறகு அவற்றை காதாபாடகர்களுக்கும், பக்தர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும் கொடுக்கவேண்டும். உச்சிகாலத்தில் அலங்காரநிவேதனம் செய்து பிறகு தாம்பூலம் சமர்பிக்க வேண்டும். பக்தபிம்பங்களுக்கும் நிவேதனம்செய்து எம்பெருமானை நிருத்த-கீத-வாத்யத்துடன் சந்நிதிக்கு எழுந்தருளச்செய்யவேண்டும். ஆங்கே மூலசக்தியுடன் இணைக்கவேண்டும். இவ்வாறு 10 நாட்கள் செய்து சதுஸ்தானங்களிலுள்ள மூர்த்திகளையும் தொழுது, மூலத்துடன் சேர்த்து, அஞ்சலி செய்து ஜகன்னாதா! உன் ப்ரீதிக்காக இந்த அத்யயனோத்ஸவம் என்னால் செய்து வைக்கப்பட்டது. மோஹத்தால் சிறிது சாஸ்திரஹீனம் ஏற்பட்டிருக்கலாம். கருணாநிதியே! நீ மன்னித்தருள்வாயாக! என எம்பெருமானிடம் வேண்டிக்கொள்ளவேணும்.

இவ்வாறு லக்ஷ்மிநாராயண சம்வாதத்தின் அடிப்படையில் ஸ்ரீபிரச்னஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ள வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா குறித்த செய்திகளை அறிந்த நாம் ஆலயம் சென்று இறைவனைத் தொழுது இன்புறுவோமாக.

No comments:

Post a Comment