Wednesday 27 December 2017

சனிபகவான் திருத்தலங்கள்

Related image

திருநெல்லிக்காவல் :

திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு எனும் சந்திப்பில் இறங்கி இத்தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும்.  

இடும்பாவனம் :

முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். இங்கும் தாம் மக்களைத் துன்புறுத்தியதால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்ள இத்தலத்து ஈசனை சனி பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்தத் தலமும் சனிதோஷப் பரிகாரத் தலமாக வழங்கப்படுகிறது.   

திருநறையூர் :

தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோயிலில் உள்ள ராமநாதசுவாமி ஆலயத்தில் சனீஸ்வரபகவான் தன் இரு மனைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடனும், மாந்தன், குளிகன் எனும் இரண்டு மகன்களுடனும் குடும்ப சமேதராய்  மேற்கு திசை நோக்கி தரிசனமளிக்கிறார். மூலவருக்கு இல்லாத கொடிமரமும் பலிபீடமும் சனி பகவானுக்கு உண்டு. காக வாகனத்துடன் காட்சி தரும் இத்தலம் சிறந்த சனிபரிகாரத் தலமாக கூறப்படுகிறது. தசரதர் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை இத்தல சனி பகவானை வணங்கி போக்கிக் கொண்டதாக ஐதீகம். தந்தை வழிபட்டதால் ராமச்சந்திரமூர்த்தியும் இத்தலம் வந்து சனி பகவானையும் ஈசனையும் வணங்கினார். அதனால் இத்தல ஈசன், ராமநாதசுவாமி ஆனார். 

வழுவூர் :

சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனிபகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார். 

எட்டியத்தளி :

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது எட்டியத்தளி. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு இத்தலம் வந்தார். அதே சமயம் அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன் சனிதோஷம் நீங்க திருநள்ளாற்றுக்கு இந்த வழியே வந்தார். இருவரும் சந்தித்தனர். அஷ்டம சனிக்கு பரிகாரமாக அகஸ்தியர் தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி வழிபடச் சொன்னார். மேலும் நவகிரகங்களையும் பிரதிஷ்டை செய்யுமாறும் ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம் அமைக்குமாறும் கூறினார். இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. 

அறையணி நல்லூர் :

திருக்கோவிலூரில் பெண்ணையாற்றின் எதிர்க்கரையில் உள்ளது அறையணிநல்லூர். இங்கு உள்ள பாடல்பெற்ற தலமான அறையணிநாதர் கோயிலின் பிராகாரத்தில் சனிபகவான் காகத்தின் மீது ஒரு காலை வைத்து ஊன்றிய நிலையில் தரிசனமளிக்கிறார். 

No comments:

Post a Comment