அம்பிகை ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் நவரச நாயகியாகத் திகழ்கிறாள். அம்பாள் தவக்கோலத்தில் சிவனை பூஜிக்கும் போது சாந்தம் நிறைந்தவளாகத் திகழ்கிறாள். சிவநிந்தை புரியும் தீயவர்களைக் கண்டால் மனம் வெறுக்கிறாள். அசுரர்களை வதம் செய்யும் போது, வீரத்துடன் போர் புரிந்து வெற்றி கொள்கிறாள். சுடலையாண்டியாக சிவன் இடுகாட்டில் நள்ளிரவில் நடனமிடுவதைக் கண்டால், மென்மையால் பயம் கொள்கிறாள். தர்மத்தை மறந்து அதர்ம வழியில் நடக்கும் அசுரர்களிடம் இருந்து உயிர்களைக் காக்க ஆவேசத்துடன் கோபம் கொண்டு எழுகிறாள்.
பாற்கடலில் எழுந்த நஞ்சைக் கண்டு அஞ்சாமல் அதையும் ஏற்ற சிவனின் செயல் கண்டு ஆச்சரியம் கொள்கிறாள். சிவனின் உடலில் சரிபாதி அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தபோது, "சிருங்காரம்' என்னும் காதல் சுவையோடு இறைவனோடு மகிழ்ந்தாள். கனிக்காக போட்டியிட்டபோது, அம்மையப்பரே உலகம் என வலம் வந்த கணபதியைக் கண்டு ஹாஸ்யத்துடன் (புன்னகை) சிரித்தாள். இரக்கம் கொண்டு உயிர்களைக் காக்க ஓடி வரும் போதெல்லாம் கருணை முகிலாக அருள்மழை பொழிகிறாள்.
இந்த உணர்வுகள் அனைத்தும் மனிதர்களிடமும் உள்ளதை அவள் பிரதிபலிக்கிறாள். குணங்களே இல்லாத அந்த குணவதி, தன் பக்தர்களுக்காக இறங்கியும், இரங்கியும் வந்து இந்த நவகுணங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.
No comments:
Post a Comment