Thursday 14 December 2017

நடந்தது அந்தநாள் முடிந்ததா பாரதம்


மகாபாரதப்போர் நடந்த இடம் எது என்றால் குருக்ஷேத்திரம் என்பார்கள். குருக்ஷேத்திரம் எங்கிருக்கிறது என்று கேட்டால் ஹரியானாவில் இருக்கிறது என்று கூட தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், குருக்ஷேத்திர யுத்தம், ஒரு அறிவியல் தத்துவத்தையும் எடுத்துச்சொல்வது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்! மனம் தான் நம் செயல்களுக்கு காரணமாக அமைகிறது என்பது அறிவியல் கலந்த ஆன்மிக உண்மை. ஒவ்வொரு நாளும் நமக்குள்ளும் குருக்ஷேத்திர யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. 

மனசு தான் குருக்ஷேத்திரம். அதில் இருக்கும் நல்ல எண்ணமே நியாயத்திற்காகப் போராடும் தர்மர் தலைமையிலான பாண்டவர்கள். தீய எண்ணங்களே அநியாயத்தின் பக்கமிருக்கும் துரியோதனன் தலைமையிலான கவுரவர்கள். ஓயாமல் இருபிரிவுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கிறது.

பாண்டவர்களும், கவுரவர்களும் ஒரே பரம்பரையில் பிறந்த தாயாதிகள்(சகோதரர்கள்). அதேபோல, நல்லதும், கெட்டதும் ஒரே மனதில் உற்பத்தியானவை தான். அர்ஜூனன், தன் சொந்த பந்தத்தினர் மீது அம்பு விட தயங்கியது போல, உலகியல் வாழ்வில் ஈடுபடும் நமது புத்தியும், ஒன்றைச் செய்வதா வேண்டாமா என திண்டாடுகிறது. 

அப்போது விவேகம் என்னும் கிருஷ்ணர், நம் புத்திக்கு வழிகாட்ட வருகிறார். பாரதப்போரில், விவேகமாக நடந்த கிருஷ்ணர் மூலம் நியாயம் ஜெயித்தது. நம் மனதில் நடக்கும் குருக்ஷேத்திர போரிலும் நன்மை ஜெயிக்க, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இப்போது புரிந்து கொண்டீர்களா! ஆன்மிகத்தை விட சிறந்த அறிவியல் வேறேதும் இல்லையென்று!

No comments:

Post a Comment