Tuesday 19 December 2017

இனி என்றும் இன்பம்


மன்னன் ஒருவன், சத்ய நாராயண விரதம் இருக்க ஆசைப்பட்டான். ஒரு நதிக்கரையில் இந்த விரதத்தை தன் மனைவியுடன் மேற்கொண்டான். அங்கு ஒரு வணிகர் வந்தார். விரதமிருப்பவர்களை, மன்னர் தம்பதியர் என அறியாத அவர், அவர்கள் மேற்கொண்டுள்ள விரதம் பற்றி கேட்டார். விரத காலத்தில், சத்ய நாராயண விரதத்தால் பலன் பெற்றவர்கள் பற்றிய கதையைச் சொல்ல வேண்டுமென்ற விதி உள்ளதால், மன்னரும் அந்தக் கதையை விளக்கமாகக் கூறினார். 

வீடு சென்ற வணிகரும், அந்த விரதத்தை தன் மனைவி லீலாவதியுடன் ஆரம்பித்தார். செல்வவளம் மிக்க அந்த வணிகருக்கு குழந்தைச் செல்வம் இல்லை. விரதம் துவக்கிய பிறகு, அவரது மனைவி கருவுற்றாள். ஒரு பெண் குழந்தை பிறந்தது. கலாவதி என்று பெயரிட்டார். 

தன் மகளை செல்வச்சீமாட்டியாக வளர்த்தாள். பருவம் அடைந்தவுடன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நற்குணம் மிக்க இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்து, வீட்டு மாப்பிள்ளை ஆக்கினார். மாமனாரும், மருமகனும் இணைந்து வியாபாரம் நடத்தினர். அதன்பின், அந்த குடும்பத்தினர் விரதம் இருக்கவில்லை.

ஒருசமயம், மாமானாரும், மருமகனும் வியாபாரம் செய்யச் சென்ற இடத்தில், செய்யாத தவறுக்காக மன்னனால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருநாள், கலாவதி தெருவில் சென்ற போது, ஒரு வீட்டில் சத்யநாராயண பூஜை நடப்பதைப் பார்த்தாள். வீட்டுக்கு வந்து, அதுபற்றி தன் தாயிடம் சொன்னாள். மீண்டும் அந்த தாயும், மகளும், தங்கள் கணவன்மார் உடனிருப்பதாக பாவனை செய்து விரதம் இருந்தனர். 

மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், மாமனார், மருமகன் குற்றமற்றவர்கள் என்பதை அறிவித்தார். மன்னனும் அவர்களை விடுதலை செய்தான். அவர்களின் இன்ப வாழ்வு மீண்டும் தொடர்ந்தது. எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழலில் இருந்தும் இந்த விரதத்தின் மூலம் தீர்வு பெறலாம்.

No comments:

Post a Comment