Saturday 16 December 2017

தேவர்களின் செருக்கை அடக்கிய தலைவனின் துரும்பு

Image result for shiva god

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பலகாலமாக இருந்த விரோதம், நாளாக நாளாக மேன்மேலும் வளர்ந்து பெரிதாகிக்கொண்டே சென்றது. எந்தச்சிறு விஷயத்திலும் சண்டையிட்டுதான், அதன் வெற்றி-தோல்வியில்தான் தீர்வு காண்பது என்பது அவர்களுக்கு வாடிக்கையாகிப் போனது. அப்படி ஒரு சண்டை சந்தர்ப்பத்தில் தேவர்கள் வெற்றிபெறும் சூழல் உருவாயிற்று. அவ்வளவுதான், அரக்கர்களைவிடப் பெரிதாக ஆர்ப்பரித்தார்கள் தேவர்கள். அந்த வெற்றியைக் கொண்டாடி, தம் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டார்கள். இவ்வாறு இந்திரன், அக்கினி, வாயு போன்ற ஒவ்வொரு தேவரும் இந்த வெற்றி தன் முயற்சியால் விளைந்தது என்று மார்தட்டிச் சுற்றித் திரிந்ததை சிவபெருமான் கண்டார். இவர்களுக்குச் சரியான  பாடம் புகட்ட எண்ணினான்.

உடனே பேரழகு மிக்க யட்சனாகத் தோற்றம் கொண்டார். சிறு துரும்பு ஒன்றை எடுத்துத் தன் முன்னால் போட்டார். பிறகு அதைப் பார்த்தபடியே அங்கும் இங்குமாக கம்பீர நடை பயின்றார். அவரைக் கண்ட தேவர்கள் அந்தப் புதியவனை வியப்புடன் நோக்கினர். லேசாக மனசுக்குள் தாழ்மனப்பான்மை தோன்றியது. தங்களையும் விஞ்சும் அழகனாக இருக்கிறானே, இவன் யாராக இருப்பான்? ‘நீ யார்?’ என்று கேட்டனர் . இறைவன் எந்த பதிலும் அளிக்காது அதே மிடுக்குத் தோற்றத்துடன் புன்முறுவல் புரிந்தபடி நின்றிருந்தார். 

‘நாங்கள் கேட்பது உன் காதில் விழவில்லையா? நீ யார்?’ குரலில் கடுமே ஏறியது தேவர்களுக்கு. ஈசனிடமிருந்து பதிலாக மீண்டும் அதே  மென்சிரிப்பு . ‘என்ன இறுமாப்பு உனக்கு! பதில் சொல்லமாட்டாயா?’ ‘நான் யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் அமர்ந்திருக்கிறேன். ஏன் என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள்?’ ‘இதோபார், இது எங்கள் உலகம். நாங்கள்தான் இதன் எஜமானர்கள். புதியவன் ஒருவன் இங்கே நுழைவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. சொல், யார் நீ?’ ‘என்ன, நீங்கள் எஜமானர்களா?’ என்று கேட்டு பெருத்த குரலில் சிரித்தார் இறைவன்.

தேவர்களுக்குக் கோபம் அதிகரித்தது. என்ன இளக்காரம்! ‘ஆமாம், நாங்கள் எஜமானர்கள்தான்’ என்று கடுமையான குரலில் சொன்னார்கள். ‘எஜமானர்கள் என்றால் பலசாலிகளாகவும் இருப்பீர்கள், இல்லையா?’ ‘நிச்சயமாக’‘அப்படியானால், இதோ என் எதிரில் இருக்கும் இந்தத் துரும்பை உங்களில் யாரேனும் அசைத்து உங்கள் பலத்தை நிரூபியுங்கள், பார்க்கலாம்.’ ‘ஆனானப்பட்ட அசுரர்களையே சிதற அடித்தவர்கள் நாங்கள். இது வெகு அற்பம். எங்கள் வீரத்துக்கு மிகவும் அற்பமான ஒரு சவால் இது.’ ‘சரி, சரி, வீண் பேச்சு எதற்கு? இதைக் கொஞ்சம் நகர்த்த முடியுமா என்று பாருங்களேன்.’

தங்களை இத்தனைத் துச்சமாக இந்த யட்சன் நினைத்துவிட்டானே என்ற கோபத்தில் வெகு அலட்சியமாக தம் வாயால் காற்று ஊதி துரும்பை விலக்க முனைந்தார்கள். அதுவோ கொஞ்சமும் அசையாமல் அங்கேயே நின்று அவர்களை ஏளனப்படுத்தியது. இந்திரன் முன்னே வந்தான். வாய்க்காற்றால் அகற்ற முடியாத அந்தத் துரும்பை ஒரே அடியில் நசுக்கித் தூக்கியெறிய நினைத்தான். தன் வச்சிராயுதத்தை எடுத்து அந்தத் துரும்பின் மேல்  பலம் கொண்ட மட்டும் வீசினான். ஆனால், கொஞ்சமும் நகராமல் அந்த வச்சிராயுதத்தையும் கேவலமாகப் பார்த்தது துரும்பு. தன் வச்சிராயுதத்தின் கூர் மழுங்கிப் போனது கண்டு திகைத்தான் இந்திரன்.

அடுத்து அக்னிதேவனின் முயற்சி. அக்னிதேவன் தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி அந்தத் துரும்பை எரிக்கச் சித்தமானான். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. வெற்றி காணாது தோற்ற அக்னி, பரிதாபமாக வாயுவைப் பார்த்தான் .நீயேனும் இதைச்  செய்து முடி என்ற சொல் அவன் கண்ணில் தெரிந்தது. அக்னியும் தன்னால் பஸ்மமாக்கப்படாததாக அந்தத் துரும்பு பளிச்சென்று காட்சி தந்தது கண்டு வெட்கித் தலை குனிந்தான். பெரிய மலையையே புரட்டிப் போடக்கூடிய பலமிக்க வாயுவின் முறை இப்போது. பெரும்புயலாக வீசியும் சிறிதும் அசைந்துகொடுக்காத அந்தத் துரும்பைப் பார்த்து அவன் பயப்படவே செய்தான்.

தலை குனிந்தவகையில் தம் தோல்வியை ஒப்புக்கொண்டனர் அம்மூவரும். அப்போது பளிச்சென்று அந்த யட்சன் மறைந்தான். தேவர்கள் அவனைக் காணாது திகைத்து, இங்கும் அங்கும் ஓடினர். யார் அவன், எங்கிருந்து வந்தான்? எதற்காக இப்படி நமக்கு சோதனை வைத்தான்? அப்போது பேரொளியாய் அம்பிகை அவர்கள் எதிரே தோன்றினாள். தேவர்கள் அம்பிகையை வணங்கினர். அம்பிகையும் புன்னகையுடன், ‘நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள்?’ என்று கேட்டாள். ‘ஒரு யட்சன், ஒரு துரும்பை எங்கள் முன் போட்டுவிட்டு அதை அசைக்குமாறு சவால் விட்டான். எவ்வளவோ முயன்றும் எங்களால் அதைச் செய்ய இயலவில்லை. எங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள நினைத்தபோது அவன் மாயமாய் மறைந்துவிட்டான்,’ என்று பரிதாபமாகச் சொன்னார்கள். 

அதனைக் கேட்டு மெல்ல சிரித்த அம்பிகை, ‘வீணாக அஞ்சாதீர்கள். வந்த யட்சன் யார் தெரியுமா? சாட்சாத் சிவபெருமானே!’ என்று கூறினாள். கூடவே, ‘ஒரு துரும்பைக்கூட  அசைக்க முடியாத நீங்கள், அசுரர்களை வென்றதாக இறுமாப்பு கொள்கிறீர்களே!  அந்த வெற்றியின் மூலகாரணம் யார் தெரியுமா? யட்சனாக உங்கள் எதிரில் வந்தப் பரம்பொருள்தான்’ என்றும் அறிவித்தாள். பளிச்சென்று தேவர்களின் மனதிலிருந்து அகம்பாவ மாயை விலகியது. ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற உண்மையை உணர்ந்து தேவர்கள் செருக்கு நீங்கி இறைவனைத் துதித்தனர். 

இந்த சம்பவத்தை கேனோபநிஷத்தும், காஞ்சி புராணமும் விரிவாக வர்ணிக்கின்றன. மாணிக்க வாசகர் தன் திருமுறையில் இந்நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்:அந்தமில் பெருமை அழலுருக் கரந்து சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்டிந்திர ஞாலம் போலவந் தருளி எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்தானே யாகிய தயாபரன் (எட்டாம் திருமுறை, மாணிக்க வாசகரின் கீர்த்தித் திருவகவல்)

No comments:

Post a Comment