Thursday 14 December 2017

காட்டில் காஞ்சிப் பெரியவர்


1934ல், காஞ்சிப் பெரியவர் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, ஆந்திர மாநிலம், கர்னூலில் முகாமிட்டிருந்தார். அங்கிருந்து, ஸ்ரீசைலம் சென்று மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்ய விரும்பினார். அது போக்குவரத்து பாதுகாப்பற்ற காலம். அவ்வூர் மக்கள், ஸ்ரீசைலம் செல்ல இது சரியான தருணமல்ல. மலைப்பாதையில் காட்டு விலங்குகள் தொல்லை இருக்கும். காட்டுவாசிகள் அவர்கள் பகுதிக்குள் வர அனுமதிக்க மாட்டார்கள் என தடுத்தனர். ஆனால், பெரியவரோ, பயணம் உறுதி என சொல்லி விட்டார். 

அந்த மலையில் "செஞ்சுக்கள்' என்னும் மலை ஜாதியினர் வசித்தனர். இவர்கள் தேர்ச்சிபெற்ற வில்லாளிகள். தேனை சேகரித்தும், விலங்குகளை கொன்றும், பழம், கிழங்கு, காய்களினால் வாழ்க்கை நடத்தி வருபவர்கள். அவர்கள் வெளியாட்களை சாதாரண நாட்களில் அங்கே நுழைய அனுமதிப்பதில்லை. மீறி நுழைந்தால் வில் கொண்டு தடுப்பார்கள். மொழியும் புரியாது.

அவர்கள் நூறுபேர், நாகலூட்டி என்ற இடத்தில், சுவாமியுடன் வந்தவர்களைத் தடுத்தனர். பிறகு தான், மகா சுவாமிகளைப் பார்த்தனர். அவ்வளவு தான்! அந்த மக்களை, பெரியவரின் தீட்சண்யமான பார்வை என்ன செய்ததோ! ஏது செய்ததோ! 

யாருக்கும் தெரியாது! அப்படியே பெரியவரின் திருவடிகளில் விழுந்து ஆசி பெற்றனர். யாத்திரைக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் நாங்களே செய்கிறோம் என்றனர். வழி நெடுகிலும் அவர்கள் காவல்காத்து வந்தார்கள். அது மட்டுமல்ல! சுவாமிகள் கொண்டு வந்த பொருட்களை மலையில் ஏற்றிச் செல்லவும் உதவி புரிந்தார்கள்.

சுவாமிகள் அவர்களது இந்த பணியை மிகவும் பாராட்டினார். அவர்களுக்கு பணம் வழங்க அருள் கூர்ந்தார். ஆதிவாசிகள் அதை ஏற்க மறுத்து விட்டனர். அத்துடன் கோரிக்கை ஒன்றையும் வைத்தனர். 

""சுவாமி! மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பெரியவர்கள் இப்பகுதிக்கு வரும்பொழுது, அவர்கள் முன்னால் நடனமாடி அவர்களை சந்தோஷப்படுத்துவது எங்கள் வழக்கம். தாங்களும் எங்கள் நடனத்தை கண்டு சந்தோஷித்து எங்களுக்கு அருளாசி வழங்கினால், அதுவே நாங்கள் செய்த பெரும்பாக்கியம். அதற்கு சுவாமிகள் அருளவேண்டும்', என்று பிரார்த்தித்தார்கள்.

காஞ்சி மடத்தின் அதிகாரிகள் இதை விரும்பவில்லை. ஆனால், எவரையும் மகிழ வைக்கும் கருணை உள்ளம் படைத்த சுவாமியும், அவர்களது நடனத்தை பார்வையிட அன்புடன் இசைந்தார். செஞ்சுக்களும் அதுகேட்டு மகிழ்ந்து தங்களுடைய பெண் குழந்தைகளுடன், அழகாக நடனமாடினார்கள். மகா ஸ்வாமி, அவர்களுடைய பழமையான நடனத்தை மிகவும் ஆர்வத்துடன் ரசித்து, எல்லாருக்கும் நற்சுவை உணவு அளித்து கவுரவித்தார். ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் விபூதி பிரசாதம் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார்.

""ஜாதியில்உயர்வு தாழ்வு இல்லை. அப்பர், சேக்கிழார், நந்தனார்,கண்ணப்பர் ஆகியோர் எந்த ஜாதியினராக இருந்தாலும் கடவுளுக்கு விருப்பமானவர்களாகவே இருந்தார்கள்,'' என்று அருள்வாக்கு அருளிய பெரியவர், ஆதிவாசிகளுக்கும் ஆசி தந்ததில் வியப்பென்ன இருக்கிறது!

No comments:

Post a Comment