Sunday 17 December 2017

மிரட்டலுக்கு அஞ்சாதீர்


தேவலோக வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள், நோயுற்ற மனிதர்களை இறக்க விடாமல், உயிர் கொடுக்கும் பிரம்ம மந்திரத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தனர். 

கடவுள் மனிதனைப் படைக்கிறார். அந்த மனிதர்களில் சிலர் மட்டுமே தீர்க்காயுளுடன் உள்ளனர். சிலர் அற்ப ஆயுளிலேயே இறந்து போகின்றனர். பலர் நடுத்தர வயதில் காலமாகின்றனர். பிறந்தவர்கள் ஏன் இறக்க வேண்டும்? எனவே, இறந்தாலும் அவர்களை எழுப்பி அவர்களுக்கு மறுபிறவி கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணெத்தால், இந்த மந்திரத்தைக் கற்றாக வேண்டும் என அவர்கள் துடித்தனர்.

ஆனால், இந்த பிரம்ம மந்திரம் தெரிந்தவர்கள் வெகுசிலரே இருந்தனர். இவர்களின் முயற்சி பற்றி அறிந்த இந்திரனுக்கு கடும் கோபமும், பொறாமையும் ஏற்பட்டது.

"இவர்கள் இந்த மந்திரத்தைக் கற்றால், நிலைமை என்னாவது? ஒருவன் கூட சாகமாட்டானே! அப்படியானால், அஸ்வினி தேவர்களுக்கு புகழ் பெருகிவிடுமே! தன்னை யாரும் மதிக்கமாட்டார்களே,'' என்று நினைத்தான்.
அந்த மந்திரம் தெரிந்த மகரிஷிகளை அழைத்தான்.

"ரிஷிகளே! பிரம்ம மந்திரத்தை அஸ்வினி தேவர்களுக்கு போதித்தால், இறப்பென்பதே இல்லாமல் போய், பிரபஞ்சம் நிலைகுலைந்து விடும். எனவே இதை அவர்களுக்கு போதிக்கக்கூடாது. மீறினால் போதித்தவரின் தலையை வாங்கிவிடுவேன்,'' என எச்சரிக்கை விடுத்தான்.

அந்த முனிவர்களில் தத்யங்கர் என்பவர் தனி ரகம். மிகுந்த இரக்கமுள்ளவர். உயிர்கள் தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும் என விரும்புபவர். 

இந்திரனின் மிரட்டலுக்கு பயப்படாத அவர், உலகநலன் கருதி அம்மந்திரத்தை அஸ்வினி தேவர்களுக்கு கற்றுக் கொடுத்து விட்டார். மந்திரம் கற்ற தேவர்கள், தங்கள் சக்தியால் முனிவருக்கு குதிரை தலையைக் கொடுத்து, உங்களது இந்த தலையை இந்திரன் கொய்தாலும், உங்கள் சொந்தத் தலையைப் பொருத்தி, தாங்கள் கற்றுத்தந்த பிரம்ம மந்திரத்தைக் கொண்டு மீண்டும் உயிரூட்டி விடுகிறோம்,'' என்றனர். 

இந்திரனும் முனிவரின் தலையை வெட்ட, அவருக்கு சொந்தத்தலையை மீண்டும் பொருத்தி உயிரூட்டினர் அஸ்வினி தேவர்கள்.

நற்செயல்கள் செய்யும் போது, நமக்கு மிரட்டல்கள் வரத்தான் செய்யும். ஆனால், அந்த மிரட்டல்களைக் கண்டு அஞ்சவும் கூடாது. அவற்றை புத்திசாலித்தனத்துடன் சாதகமாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். இனி மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டீர்கள் தானே!

No comments:

Post a Comment