Wednesday 31 January 2018

சிதம்பரத்தில் தைப்பூசம்


தைப்பூச நன்னாள், முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான நாள் என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கே இன்னொரு விஷயம்... சிவ மைந்தனுக்கு மட்டும் அல்ல... சிவனாருக்கும் உரிய முக்கியமான நாளும் கூட!

ஆமாம். தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலம், பூலோக கயிலாயம் என்று போற்றப்பட்ட நன்னாள் இந்த தைப்பூசத் திருநாளே என்கிறது புராணம்!

பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் கடும் தவமிருந்தார்கள். அதன் விளைவாக, தில்லையில் நடராஜரின் திருநடனத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றனர். இவர்களுடன் நானும் இன்னும் எட்டுப்பேரும் தரிசித்தோம் என்கிறார். யார் அவர்... திருமூலர்பெருமான் அவர்!.

பதஞ்சலி மற்றும் வியாக்ர பாத முனிவர்களின் மகத்துவத்தையும் தில்லைச் சிதம்பரத்தில் நிகழ்ந்த புராணச் சம்பவங்களையும் ஏராளமான நூல்கள் விவரித்து எடுத்துரைக்கின்றன.

முப்பத்து முக்கோடி தேவர்கள்,பிரம்மா,விஷ்ணு,தில்லைவாழ் அந்தணர்கள் 3000 பேரோடும், சிவகாமி அம்மையோடும், தில்லையில் திருநடனத்தை எல்லோரும் காணும்படிச் செய்த தவ முனிவரின் கருணையயை விவரிக்க வார்த்தைகளே இல்லை என ஞானநூல்கள் போற்றுகின்றன.

‘‘திருவாரூரிலே சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு திருத்தொண்டத் தொகைபாடுவதற்கு, தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று முதலடி தந்தருளினார் தியாகராஜர்.

முன்பொரு சமயம்... பிரம்ம தேவர், அந்தர்வேதி எனும் இடத்தில் மிகப் பெரிய வேள்வி ஒன்று செய்ய முனைந்த வேளையில், தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீக்ஷிதர்கள் மூவாயிரம் பேரையும் அழைக்க, தில்லைக்கு வந்து அவர்களை வரும்படி வேண்டி கேட்டுக் கொண்டார்.

அப்போது, நாங்கள் பகல் போஜனத்திற்கே திரும்பி வந்துவிடவேண்டும். அதற்கு வேண்டிய சௌகர்யம் செய்து தருவதாக இருந்தால், நாங்கள் அனைவரும் வருகிறோம் என பிரம்மாவிடம் உறுதி கேட்டுவிட்டு, உறுதி தந்தனர்.

யாகம் சிறப்பாக நடந்தது. பின் அந்தணர்கள் தில்லைக்குப் புறப்பட்டனர். பிரம்மதேவன் அடடா... அதிதிகளுக்கு அன்னமிடாமல் அனுப்புகிறோமே என வருந்தி அவர்களை நிறுத்தினார். தயை கூர்ந்து, சாப்பிட்ட பிறகு செல்லலாம் என்று வற்புறுத்தினார். வலியுறுத்தினார். உடனே தில்லைவாழ் அந்தணர்கள்... நடராஜரைப் பூஜிக்காமல், சாப்பிட மாட்டோம் என்று கூறினர். இதனால் ரொம்பவே நொந்து போன பிரம்மா, ஈசனை நினைத்து தியானம் செய்யத் தொடங்கினார்.

பிரம்மாவின் ஆத்மார்த்தமான பிரார்த்தனைக்கு மனமிரங்கினார் சிவனார். இறங்கி வந்தார். வேள்வி தீயிலிருந்து ஜ்யோதிர்மயமான உருவம் ஒன்று கிளம்பியது. அதைக் கண்ணுற்ற தீக்ஷிதர்கள் யாகத் திரவியங்களான பால், தேன், சந்தனம் ஆகியவற்றால் அதை குளிரச் செய்தனர்.

அதில் இருந்து, நடராஜரின் உருவம் கொண்ட சின்னஞ்சிறிய அளவு கொண்ட மாணிக்கமூர்த்தம் தென்பட்டது. பிரம்மா இதைக் கண்டு களிப்புற்றார். கண்கலங்கி நமஸ்கரித்தார். நெகிழ்ந்தார். நெக்குருகினார்.

ஈசனின் அருளால், ஈசனின் இன்னொரு வடிவாய் வந்த மூர்த்தம் இது. ஆகவே இந்த மூர்த்தத்தை பூஜியுங்கள். பிறகு உணவருந்துங்கள். அதையடுத்து தில்லைக்குச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார் பிரம்மா.

அந்தணர்கள் அவர் வேண்டுகோளுக்கு இணங்கினார்கள். அந்த மூர்த்தியையே பூஜை செய்துவிட்டு உணவு அருந்தினார்கள். பிறகு இவர்களை ஒவ்வொருவராக தனித்தனி ரதத்தில் ஏறச்செய்து மூவாயிரம் ரதம் சூழ ஹிரன்யவர்மன் என்ற அரசனை முதலாகக் கொண்டு தில்லையின் எல்லைக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி தில்லை மூவாயிரம் அந்தணர்களும் பயணத்தைத் தொடங்கினார்கள்.

எல்லையை அடைந்ததும் ஒவ்வொருவராக எண்ணிப் பார்க்கப்பட்டது. அப்போது மூவாயிரம் பேர் இருக்கவேண்டும் அல்லவா. ஆனால் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து தொந்நூற்றி ஒன்பது பேர் இருந்தார்கள்.

என்ன இது... ஒரு ஆள் குறைகிறதே என வருந்தினான் ஹிரண்யவர்மன். கவலைப்பட்டான். கலங்கிப் போனான். ‘என் சிவமே... என்ன இது சோதனை. அந்த மூவாயிரமாவது நபரைக் காணோமே...’ என கண்ணீர்விட்டுப் புலம்பினார். அப்போது, வருந்த வேண்டாம். அந்த தில்லை மூவாயிரம் பேரில் அடியேனும் ஒருவன்’ என அசரீரி கேட்டது.

இதைக் கேட்டு எல்லோரும் ஆனந்தித்தார்கள். தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரையும் நாடராஜ பெருமானாகவே பாவித்து உபசாரங்கள் செய்தார்கள். அன்று தொடங்கி இன்று வரையும், அவர்களால் கொண்டு வரப்பட்ட மூர்த்தத்திற்கு, அதாவது ரத்தினசபாபதிக்கு, பால், தேன், சந்தனம் முதலானவை கொண்டு, தினமும் இரண்டாம் கால பூஜையின் போது, காலை 11 மணிக்கு, அபிஷேகம் விமரிசையாக நடைபெறுகிறது என்கிறார் சிதம்பரம் கோயிலின் வெங்கடேச தீட்சிதர். .

சிதம்பரம் திருத்தலத்தில், கடந்த ஒன்பது நாட்களாக ஆதிமூலநாதர் சந்நிதியில், அர்த்தஜாம பூஜையின் போது பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் ஆகியோர் வழிபடும் நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. இன்று 31.1.18 புதன் கிழமை அன்று, முக்கிய நிகழ்வான தைப்பூச விழா சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

இன்றைய தைப்பூச நாளில், பஞ்சமூர்த்தி புறப்பாடுடன் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் இணைந்து நான்கு ரத வீதிகளிலும் திருவீதியுலா வரும் வைபவம் நடக்கிறது. இதையடுத்து சிவகங்கை தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெறும். பிறகு நடராஜர் சந்நிதியில், அன்னப்பாவாடை வழிபாடும் இரண்டு முனிவர்களுக்கான தரிசன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

திருக்கயிலாயமே தில்லை... தில்லையே திருக்கயிலாயம் என்று கயிலாயத்துக்கு இணையாகப் போற்றப்படும் தில்லை சிதம்பரத்தில் நடைபெறும் தைப்பூச நாளில், திருச்சிற்றம்பலத்தானை தரிசிப்போம். வணங்கிப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment