Wednesday, 24 January 2018

எருக்க இலை, அருகம்புல், பசுஞ்சாணம், அட்சதை நீராடல்


ரத சப்தமி நன்னாளில், ஏழு எருக்கம் இலைகள், அட்சதை, அருகம்புல், பசுஞ்சாணம் முதலானவற்றைக் கொண்டு நீராடவேண்டும் என்கிறது சாஸ்திரம். இப்படி நீராடினால், சகல தோஷங்களும் நீங்கும். துர்தேவதைகள் நம்மை அண்டா து. தேக ஆரோக்கியத்துடனும் மனத்தெளிவுடனும் வாழலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

மார்கழி மாதம் பகவான் மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் என்பார்கள். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்று சொல்லுவார்கள். அதேபோல், தை மாதம் என்பது சூரிய பகவானுக்கு உரிய மாதம். அதனால்தான் தை மாதப் பிறப்பை, சூரிய நமஸ்காரத்துடன், சூரியப் படையல் செய்து, சூரிய பகவானை வழிபட்டுக் கொண்டாடுகிறோம்.

அதேபோல், தை அமாவாசையில் இருந்து வரும் ஏழாம் நாள் சப்தமி எனப்படுகிறது. சூரியன் தன்னுடைய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் நகர்ந்து வருவதால், ரத சப்தமி என்று போற்றுகிறது சாஸ்திரம்.

தை மாதத்தில் சூரிய பகவான் நகரும் காலம், உத்தராயன புண்ய காலம் தொடங்குகிறது. இந்த நாளில், உடலில் ஏழு எருக்க இலைகள், கொஞ்சம் பசுஞ்சாணம், அருகம்புல், அட்சதை ஆகியவை கொண்டு நீராட வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம் என்று விவரிக்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

அதாவது, புத்தியால் செய்த பாவம் நீங்க தலையில் ஒரு எருக்கம் இலை, கண்களால் செய்த பாவம் நீங்க, கண்களில் இரண்டு எருக்க இலைகள், தோள்களுக்கு இரண்டு, கால்களுக்கு இரண்டு என எருக்கம் இலைகளை வைத்து, கொஞ்சம் பசுஞ்சாணத்தையும் அட்சதையையும் வைத்துக் கொண்டு கிழக்குப் பார்த்தபடி, சூரிய உதயத்தின் போது நீராடுவது மிகுந்த பலன்களைத் தரும். பெண்கள், எருக்கம் இலைகள், பசுஞ்சாணம், அட்சதை ஆகியவற்றுடன் நீராட வேண்டும். இதனால், சகல தோஷங்கள் யாவும் விலகிவிடும். துர்தேவதைகள் அண்டாது. உடல் உபாதைகள் யாவும் அகலும். தேக ஆரோக்கியத்துடனும் மனதில் தெளிவுடனும் நிம்மதியும் நிறைவுமாக வாழலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.

மகாபாரத யுத்தத்தில் வீழ்ந்தார் பீஷ்மர். ஆனாலும் புண்ணியங்கள் நிறைந்த உத்தராயன புண்ய காலத்தில் இறந்தால் புண்ணியம் எனக் காத்திருந்தார் அவர். அப்படி காத்திருக்கும் வரத்தை, நினைத்த நாளில் இறந்து போகிற வரத்தைப் பெற்றிருந்தார்.

ஆனால், செய்த பாவங்கள் அவரை தடுத்துக் கொண்டே வந்தன. முக்கியமாக, சபையில், அத்தனை பேருக்கு நடுவே பாஞ்சாலி மானபங்கப்படுத்தப்பட்ட போது, அதைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பாவம் தடுப்பதைத் தெரிவித்தார் வியாசர்.

அதன்படி, புத்தியால் செய்த பாவம் நீங்க தலையில் ஒரு எருக்கம் இலை, கண்களால் செய்த பாவம் நீங்க, கண்களில் இரண்டு எருக்கம் இலைகள், தோள்களுக்கு இரண்டு, கால்களுக்கு இரண்டு என எருக்கம் இலைகளை வைக்க அருளினார் வியாசர். அம்புப்படுக்கையில் இருந்த பீஷ்மருக்கு அவ்வாறு வைக்கப்பட, சூரிய உதயத்தின் போது, உயிர் பிரிந்தது என்கிறது புராணம்!

ரதசப்தமிக்கு மறுநாள் பீஷ்மாஷ்டமி. இந்த முறை, காலையில் சப்தமியும் மாலையிலேயே அஷ்டமியும் வந்துவிடுவதால், இன்று 24.1.18  ரத சப்தமி வழிபாட்டுடன் பீஷ்மாஷ்டமியும் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், பீஷ்மருக்கு சிராத்தம் செய்வது குரு கிருபையையும் இறையருளையும் ஒரு சேரப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

No comments:

Post a Comment