மாசியும், பங்குனியும் சேரும் வேளையில் கடைபிடிக்கப்படும் விரதம் சம்பத் கவுரி விரதம், காமாட்சி நோன்பு, சாவித்ரி விரதம், சுமங்கலி நோன்பு என்று அழைக்கப்படுகிறது.
மாசியும், பங்குனியும் சேரும் வேளையில் காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சம்பத் கவுரி விரதம், காமாட்சி நோன்பு, சாவித்ரி விரதம், சுமங்கலி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் மூலம் கணவன் - மனைவி இடையே ஒற்றுமையும், மாங்கல்ய பலமும், நீண்ட ஆயுள், ஆரோக்கிய, ஐஸ்வர்யமும் உண்டாகும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஐதீகம். இந்த விரதம் வடநாட்டில் கர்வா சவுத் என்ற பெயரில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்துக்கு முக்கிய காரணமாக சத்யவான்- சாவித்ரி கதை சொல்லப்படுகிறது. அஷ்வபதி மன்னனின் மகள் சாவித்ரி. எதிரிகளிடம் நாட்டை பறிகொடுத்த சால்வ நாட்டு மன்னனின் மகன் சத்யவான். சொத்து, சுகங்களை இழந்ததால் காட்டில் விறகு வெட்டி பிழைத்து வந்தான்.
அவனை விரும்பி திருமணம் செய்துகொண்டாள் சாவித்ரி. இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் தன் கணவன் சத்யவானுக்கு ஆயுள் குறைவு என்றும் அதிகபட்சம் ஒரு வருடம்தான் உயிர் வாழ்வான் என்றும் தேவரிஷி நாரதர் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்தாள் சாவித்ரி. கணவனின் ஆயுள் நீடிக்கவும், தன் மாங்கல்யத்தை காத்துக் கொள்ளவும் காட்டில் விரதம் இருக்க ஆரம்பித்தாள். நாரதர் குறிப்பிட்ட நாளும் வந்தது. சாவித்ரியின் மடியிலேயே விழுந்து உயிர் நீத்தான் சத்யவான். சத்யவானின் உயிரை பறித்துக்கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்தார் எமதர்மராஜன்.
மாசி முடிந்து பங்குனி மாதம் பிறக்கப்போகிற நேரம். மங்களகரமான நாள். கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி நோன்பிருந்த அவள் தன் விரதத்தை அன்றுதான் முடித்திருந்தாள். யார் கண்ணுக்கும் தென்படமாட்டார் எமதர்மராஜன். ஆனால், சாவித்ரியின் பதிபக்தியும், விரத மகிமையும் எமதர்மராஜனை அவளது கண்களுக்கு காட்டிக் கொடுத்தது.
சத்யவானின் உயிரை எடுத்துச் செல்லும் எமனை பின்தொடர்ந்தாள். ‘பிறந்தவர் ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். இது உலக நியதி. அதை நான் மீற முடியாது. அதற்கு யாரும் விதிவிலக்கும் அல்ல’ என்று கூறிய எமதர்மன், தர்ம சாஸ்திரங்களை பற்றி சாவித்ரியிடம் விளக்கினான். தன் பின்னால் வரவேண்டாம் என்றும் கூறினான். சாவித்ரி எதையும் கேட்கவில்லை. தொடர்ந்து எமனுடன் வாக்குவாதம் செய்தாள். அவள் மீது எமனுக்கு இரக்கம் பிறந்தது. ‘எடுத்த உயிரை திருப்பி கொடுக்க வாய்ப்பில்லை. அதனால், அதை விட்டுவிடு. ஏதாவது வரம் கேள் தருகிறேன்’ என்றான்.
சாவித்ரி சாதுர்யமாக ‘கற்புநெறி தவறாமல் வாழ்ந்து வரும் என் வம்சம் வாழையடி வாழையாக தழைக்க அருள் புரியுங்கள் தர்ம ராஜனே’ என்றாள். உயிரை எடுத்துக் கொண்டு செல்லும் எமன் அவசரத்தில் சற்றும் யோசிக்காமல், ‘கேட்டதை தந்தோம். உன் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்’ என்று வரம் தந்தான். ‘தர்மராஜனின் கருணைக்கு நன்றி. தங்கள் வாக்கு, வரம் பலிக்க வேண்டும். என் வம்சம் தழைக்க என் கணவனை என்னுடன் அனுப்ப வேண்டும்’ என்று வேண்டி நின்றாள் சாவித்ரி.
அவளது பதிபக்தியையும், சமயோசித புக்தியையும் எண்ணி வியந்த எமதர்மராஜன், சத்யவானுக்கு மீண்டும் உயிர் தந்தான் எமதர்மன். அத்துடன் தீர்க்க சுமங்கலியாக இருக்க வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான். விரதத்தை முடித்திருந்த சாவித்ரி, காட்டிலேயே மண்ணை பிசைந்து அடைகளாக தட்டினாள். காமாட்சி அம்மனை நினைத்து படைத்து அதையே உண்டு விரதத்தை முடித்தாள் என்கிறது புராணம். சாவித்ரி மண்ணை பிசைந்து அடை தட்டி அம்மனுக்கு நைவேத்யம் செய்த அடிப்படையில்தான், மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக் கடன் நிறைவேற்றும் வழக்கம் வந்ததாக கூறப்படுகிறது. சாவித்ரி விரதம் இருந்ததை நினைவுகூர்ந்து, முதல் போகத்தில் விளையும் நெல்லை குத்தி (கார் அரிசி) அதில் அடை செய்து அம்பாளுக்கு படைத்து வழிபடுகின்றனர்.
அதுவே ‘காரடையான் நோன்பு’. இந்நாளில் காமாட்சி அம்மன் படம் வைத்து நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைக்க வேண்டும். அதில் தேங்காய் வைத்து பட்டுத்துணி சுற்றி பூமாலை சாற்ற வேண்டும். மஞ்சள் சரடு (கயிறு) எடுத்து பசு மஞ்சள், பூ இணைத்து அதன்மீது வைக்க வேண்டும். இந்த கும்பத்தில் வந்து அருள்புரியுமாறு அம்மனை வழிபட்டு விரதத்தை முடிப்பார்கள். பின்னர் பெண்கள் மஞ்சள் சரடு அணிந்து கொள்வார்கள். கட்டுக் கிழத்தி என்று சொல்லப்படும் வயதான தீர்க்க சுமங்கலிகளாக இருக்கும் பெண்களை வணங்கி அவர்களது ஆசிர்வாதம் பெற்று, அவர்கள் கையால் சரடு அணிவது சிறப்பாகும்
சிவனுக்காக உப்பு அடை, பார்வதிக்காக வெல்ல அடை நைவேத்யம் செய்து அதை பிரசாதமாக சாப்பிட்டு ‘உருகாத வெண்ணையும் ஓரடையும் நூற்றேன், மறுக்காமல் எனக்கு மாங்கல்ய பாக்யம் தா’ என்று பிரார்த்தனை செய்து கணவன் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்க வேண்டும். நம்பிக்கையுடனும், பக்தி சிரத்தையுடனும் இந்த நோன்பை கடைபிடித்தால் கணவன் - மனைவி இடையே இருக்கும் பூசல்கள், கருத்து வேறுபாடுகள் நீங்கி பாசமும், நேசமும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவார்கள். பெண்களின் ஜாதகத்தில் இருக்கும் அஷ்டம ஸ்தான தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்ய தடை நீங்கி வம்சம் விருத்தியாகும். இந்த நோன்பில் கலந்து கொள்ளும் கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள், தடைகள் நீங்கி அவர்களது கல்யாண கனவுகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment