திருப்பதி ஏழுமலையான் சீனிவாசனாக, பத்மாவதி தாயாரை மணம் புரிந்து கொண்டு, ராமாவதாரத்தில் தான் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றினார்.
ஆண்டாள் அரங்கநாதனை தனது மணாளனாக வரித்துக்கொண்டதுபோல, நாராயணனை தனது மனதில் மணாளனாக வரித்துக்கொண்டவள் பிரம்மரிஷி குசத்வஜரின் மகள் வேதவதி ஆவாள். அவளுடைய அழகில் மயங்கி பல அரச குமாரர்கள் அவளை மணந்து கொள்ள முன்வந்தபோதும், அவர்களை பொருட்படுத்தாமல் நாராயணனை மணந்துகொள்வதில் மட்டுமே வேதவதி உறுதியாக இருந்தது மட்டுமல்லாமல், நாராயணன் தனது கணவராக வாய்க்க வேண்டும் என்பதற்கு கடும் தவமும் மேற்கொண்டாள்.
அந்த சமயத்தில் அவ்வழியாக சென்ற ராவணன் கண்களுக்கு அழகான வேதவதி தவத்தில் இருப்பது தெரிகிறது. அவள் அழகில் மயங்கி, அவளது அருகில் காதலுடன் சென்று, அவள் அழகை வர்ணிக்க ஆரம்பித்தான். தவத்துக்கு பெரும் இடையூறாக அமைந்த அவனது வர்ணனைகள் வேதவதியின் தவத்தை கலைக்கின்றன. கண்களை திறந்து பார்த்த அவளுக்கு அருகில் ஆஜானுபாகுவாகவும், காதல் வேட்கையுடனும் நின்ற ராவணனை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தாள்.
‘அழகு மிகுந்த பெண்ணே..! நான் இலங்காபுரி அரசன் ராவணன். ஈரேழு பதினான்கு உலகங்களையும் வென்ற எனக்கு, முப்பத்து முக்கோடி தேவர்களும், அவர்களது அரசன் இந்திரனும் அடிமைகள். மும்மூர்த்திகளும்கூட என்னை கண்டால், அச்சமடைவார்கள். எனது கைகளில் மூன்று உலகங்களும் இருக்கின்றன. இதுவரையிலும் உன் போன்ற பேரழகியை நான் கண்டதில்லை. உன்னை பார்த்த பிறகு என் மனம் என்னிடம் இல்லை. என்னை மறுக்காமல் திருமணம் செய்துகொள். இலங்கையின் பட்டத்து அரசியாக உன்னை ஆக்குகிறேன்..’ என்று ராவணன் வேதவதியை வர்ணித்தான்.
அவனது வர்ணனைகளை கேட்ட வேதவதி கோபம் கொண்டாலும் அவள் மனதில் பயமும் ஏற்பட்டது. மனதை திடப்படுத்திக்கொண்டு, ‘அரக்கர் தலைவரே.. நாராயணனை தவிர, வேறொருவரை நான் திருமணம் செய்து கொள்வது இயலாது. இப்போது நான் அவரை நினைத்துத்தான் தவம் செய்து வருகிறேன். அவர் என்னை புறக்கணித்தால், எனது உயிரை விடுவேனே தவிர, இன்னொருவரை கனவிலும்கூட நினைக்க முடியாது. அதனால், வந்த வழியே செல்லுங்கள்..’ என்று கூறினாள்.
அந்த பகுதியே அதிர்வதுபோல சிரித்த ராவணன், ‘பெண்ணே.! அந்த நாராயணன் யார்..? அவன் எனது பெயரை கேட்டாலே நடுங்கிவிடுவான். நானே நேரில் வந்து கேட்டாலும்கூட மறுக்கிறாயே..! உன்னை இப்போதே பலாத்காரமாக தூக்கிச்சென்று என் வசமாக்கி கொண்டால், யார் உன்னை காப்பாற்றுவார் என்று பார்க்கலாம்..’ என்று கூறியவாறு ராவணன் வேதவதிக்கு அருகில் சென்றான்.
அவள் கடும்கோபமாக, ‘கேடுகெட்டவனே.. எனது தவத்தை கலைத்தது மட்டுமல்லாமல் விருப்பமில்லாமல், என்னை பலாத்காரமும் செய்ய முன்வந்துவிட்டாயே.! என்னால் வளர்க்கப்பட்ட இந்த யாக அக்னியில் விழுந்து என்னை நானே ஆத்மஹத்தி செய்து கொள்கிறேன். என்னை போன்ற ஒரு மங்கையால் நீயும், உன் குலமும் அழியும்..’ என்று சபித்துவிட்டு, யாக அக்னியில் அவள் விழுந்து இறந்து விட்டாள். அதை சற்றும் எதிர்பாராத ராவணன் உடனடியாக அங்கிருந்து சென்று விட்டான்.
அதன் பிறகு, பல வருடங்கள் கழித்து ராவணன், சீதையை கவர்ந்து கொண்டு புஷ்பக விமானத்தில் சென்ற சமயத்தில் அவன் முன்பாக அக்னி பகவான் தோன்றினார். அவர் சீதையை காப்பாற்ற முடிவு செய்து, ‘ராவணா, நீ கடத்தி கொண்டு போகும் சீதை, மாயத்தோற்றமாகும். உண்மையான சீதையை ராமன் என்னிடம் ஒப்படைத்துள்ளான். இந்த மாய சீதையை என்னிடம் கொடுத்து விட்டு, உண்மையான சீதையை எடுத்துக்கொள்..’ என்று கூறினார்.
அதை உண்மை என்று நம்பிய ராவணன், அவனிடம் இருந்த சீதையை விடுவித்துவிட்டு, அக்னி பகவான் தன்னிடம் சாம்பலாக மாறியிருந்த வேதவதியை பெண்ணுருவமாக மாற்றி ராவணனுக்கு கொடுத்து, உண்மையான சீதையை தனக்குள் மறைத்து வைத்துக்கொண்டார்.
ராமாயண போருக்குப் பின்னர் ராவண வதம் முடிந்து, சீதை அக்னி பிரவேசம் செய்து, தன் கற்பின் மகிமையை உணர்த்தினாள். அந்த சமயத்தில் நெருப்பிற்குள் சென்றவள் மாயத்தோற்றத்தில் இருந்த சீதையான வேதவதி. வெளியில் வந்தது உண்மையான சீதை. அதன்பின் உண்மையான சீதையையும், வேதவதியையும் அக்னி பகவான், ராமனிடம் ஒப்படைத்து, வேதவதியையும் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.
ராமபிரான் அக்னி பகவானிடம், ‘நான் இந்த அவதாரத்தில் ஏக பத்தினி விரதன். அதன் காரணமாக ஒரு மங்கையை மட்டுமே மணந்துகொள்வேன். கலியுகத்தில், இதே வேதவதியை நான் திருமணம் செய்து கொள்கிறேன்..’ என்று வாக்குறுதி அளித்தார். அந்த காரணத்தின் அடிப்படையில் வேதவதி, பத்மாவதி என்ற பெயரில் ஆகாச ராஜனுக்கு மகளாக கிடைத்தாள். அதன் பிறகு, திருப்பதி ஏழுமலையான் சீனிவாசனாக, பத்மாவதி தாயாரை மணம் புரிந்து கொண்டதோடு, ராமாவதாரத்தில் தான் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றினார்.
No comments:
Post a Comment