இன்று (புதன்கிழமை) தைப்பூச தினமாகும். தைப்பூசம் என்பது சிவன்-பார்வதி இருவரும் ஒன்றிணைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் அம்சத்தை குறிக்கிறது.
தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.
தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.
மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.
விராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். தைப்பூசத்தன்று இங்கு தேரோட்டம் நடைபெறும்.
நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வள்ளி மலை. வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப்படுகிறது. அந்த நாள் சைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.
கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரியானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.
No comments:
Post a Comment