நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும், காலம் என்ற நியதிக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். உலகிலேயே மிகவும் உயர்ந்தது நேரம் தான். அதனால் தான் நாம் அனைவரும் கால தேவனான எமதர்மனின் பெயரைச் சொன்னாலே பயப்படுகிறோம். ஏனெனில் அவன் தர்மம், நீதி இவற்றிற்கு கட்டுப்பட்டவன். பணக்காரனா ஏழையா படித்தவனா பாமரனா என்றெல்லாம் பார்க்காமல், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உயிரைப் பறிக்கும் ஆற்றல் உடையவன். இதனால் தான் இவனை "தர்மராஜன்' என்று அழைக்கிறோம்.
எமதர்மன் ஒருசமயம். உலக மக்களின் பாவ, புண்ணியங்களைக் கணக்கிட தனக்கொரு உதவியாளர் வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினான். சிவபெருமானும் ஒப்புக்கொண்டார். இந்த சமயத்தில் சூரியனுக்கும், நீலாதேவிக்கும் "சித்ரகுப்தன்' என்ற மகன் பிறந்தான். பிறக்கும் போதே இடக்கையில் ஓலைச்சுவடியும், வலக்கையில் எழுத்தாணியும் வைத்திருந்தான். தன் தந்தையின் விருப்பப்படி சிவபெருமானை நோக்கி கடும்தவம் புரிந்து எமதர்மனின் உதவியாளராகும் பதவியைப் பெற்றான். பார்வதி வரைந்த சித்திரம் ஒன்றிற்கு சிவன் உயிரூட்டியதாகவும், அவரே சித்திர குப்தர் என்றும் ஒரு தகவல் உண்டு.
இவர் நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிதேவதை ஆவார். இவரை வழிபட்டால் கேதுவின் அருள் பெற்று பிறவிப்பிணி நீங்கி நற்கதி அடையலாம். காஞ்சிபுரத்திலும், தேனி அருகிலுள்ள கோடாங்கிபட்டியிலும் சித்ரகுப்தருக்கு கோவில் உள்ளது.
No comments:
Post a Comment