Monday 29 January 2018

சித்தர்கள் நடமாடும் கடவுள்

சித்தர்கள் நடமாடும் கடவுள்

சித்தர்கள் என்பவர்கள் நடமாடும் தெய்வம், இறைவனின் பிரதிநிதிகள், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்ற யதார்த்தத்தை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சித்தர்களைப் பற்றிய ஆய்வும், வழிபாடும் தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் சித்தர்கள் என்றதும் ‘‘காட்டுக்குள் வாழ்பவர்கள்’’ என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அவர்களை நெருங்கக் கூட பயப்பட்டதுண்டு.

ஆனால் சித்தர்கள் பற்றிய புரிதல் இப்போது மக்களிடம் வந்துள்ளது. சித்தர்கள் என்பவர்கள் நடமாடும் தெய்வம், இறைவனின் பிரதிநிதிகள், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்ற யதார்த்தத்தை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சித்தர்கள் அனுக்கிரகம் இருந்தால், எந்த இலக்கையும், நம்மால் எட்ட முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் மலர்ந்துள்ளது. 

அது மட்டுமல்ல.... சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டால், தோஷங்கள், பிரச்சினைகள் நீங்கும் என்பதை உணர்ந்துள்ளனர். ஜீவ சமாதிகளில் பரவி நிற்கும் சித்தர்களின் அருள் ஒளி அலைகள் நம் மீது பட்டால் வாழ்வில் புத்துணர்ச்சி பெற முடியும் என்று மனதார நம்புகிறார்கள். 

இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சித்தர்களின் ஜீவ சமாதிகளை நோக்கி செல்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆலயங்களுக்கு எந்த அளவுக்கு ஆத்மார்த்தமான நம்பிக்கையோடு செல்வார்களோ... அந்த அளவுக்கு ஜீவ சமாதிகளுக்கும் செல்கிறார்கள். 

தமிழ்நாட்டில் சராசரியாக 6 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு சித்தர் வீதம் இருப்பதாக சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்கு தமிழகம் சித்தர்களின் தவப்பூமியாக திகழ்கிறது. 

சித்தர்கள் செய்த அற்புதங்கள் ஏராளம். ஆனால் அந்த அற்புதங்களை எல்லாம் சும்மா விளையாட்டுக்காக சித்தர்கள் செய்யவில்லை. மக்கள் தங்களை உணர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே செய்தனர். 

நவக்கிரகங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் சித்தப்புருஷர்களுக்கு உண்டு. பஞ்ச பூதங்களும் அவர்களுக்கு பணிவிடை செய்யும். இதனால் உயிரற்றவர்களுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் அவர்களிடம் இருந்தது. இது அவர்களை ‘‘நடமாடும் கடவுள்’’ என்று சொல்ல வைத்தது. 

எப்போதும் ஆனந்த மயமாகத் திகழும் சித்தர்கள் இப்போதும் ஒளி உடம்புடன் உள்ளனர். அவர்கள் இருக்கும் இடங்கள் ஆற்றல் மிகுந்த இடங்களாக மாறியுள்ளன. இன்று தமிழகத்தில் பல ஆலயங்கள் புகழ் பெற்று, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றிருக்கிறது என்றால் அதற்கு அங்கு ஓங்கி நிற்கும் சித்தர்களின் அருள் சக்தியே காரணமாகும். 

அதிலும் குறிப்பாக சித்தர்களின் ஜீவ சமாதி இருப்பதாக கருதப்படும் ஆலயங்கள் நிகரற்ற ஆற்றல்களை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளன. அதனால்தான் குறிப்பிட்ட சில தலங்களில் பக்தர்கள் வருகையும், வழிபாடும் கட்டுப்படுத்த முடியாதபடி உள்ளது. 

திருப்பதியில் கொங்கணவரும், சிதம்பரத்தில் திருமூலரும், திருவண்ணாமலையில் இடைக்காடரும், மதுரையில் சுந்தரானந்தரும், பழனியில் போகரும், ராமேஸ்வரத்தில் பதஞ்சலியும் உறைந்துள்ளதால்தான் இந்த ஆலயங்களில் இருந்து அருள் ஒளி பிரவாகமெடுத்து வெளியேறியபடி உள்ளது. 

No comments:

Post a Comment