Thursday 25 January 2018

கருவறையில் 'தீ' வடிவில் அம்பாள்


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காங்கரா மாவட்டத்தில் "ஜ்வாலாமுகி' என்ற ஊர் உள்ளது. இங்குள்ள அம்மன் கோவில் மூலஸ்தானத்தில் சிலை இல்லை. பதிலாக, தீ கொழுந்து விட்டு எரிகிறது. தட்சன் யாகம் நடத்திய போது, அதற்கு தன் மருமகன் சிவனை அழைக்கவில்லை. இதைத் தட்டிக்கேட்க, அவனது மகள் தாட்சாயிணி (பார்வதி) சென்றாள். ஆனால், அவளை அவன் அவமானப்படுத்தினான். யாகத்தை நிறுத்த தாட்சாயிணி வேள்வி குண்டத்தில் குதித்து விட்டாள். 

உடனே சிவன் தன் அம்சமான வீரபத்திரரை (வடமாநிலங்களில் பைரவர்) அனுப்பி யாகசாலையை அழித்தார். பின், தன் மனைவியின் உடலை தன் மீது போட்டுக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அப்போது, அவளது ஒவ்வொரு அங்கமும் பூலோகத்தில் ஒவ்வொரு இடத்தில் விழுந்தது. அவை விழுந்த இடங்களில் சக்திகோவில்கள் எழுந்தன. அவையே சக்தி பீடங்களாகும். அதில் நாக்கு விழுந்த இடமே ஜ்வாலாமுகி. நாக்கில் இருந்து வெளிப்படும் மோசமான வார்த்தைகள் தீ போல சுடும். இதையே திருவள்ளுவர்,

"தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு'' என்கிறார். 

நாக்கு விழுந்த இடம் என்பதால், அதை நெருப்புக்கு ஒப்பிட்டு, மூலஸ்தானத்தில் நெருப்பை அம்பாளாக பிரதிஷ்டை செய்து விட்டனர். இந்த ஜ்வாலைக்கே பூஜை செய்யப்படுகிறது. அக்பர் காலத்தில் வாழ்ந்த அபுல் பாஸல் என்பவர், தன் "அயினி அக்பரி' நூலில், இந்தக் கோவிலின் சிறப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒரு காலத்தில், மக்கள் தங்கள் நாக்கையே இந்த அம்பாளுக்கு காணிக்கையாகக் கொடுத்தாக அந்நூலில் சொல்லியுள்ளார். இந்தக் கோவில் கோபுரம் தங்கத்தால் ஆனது. கதவுகளுக்கு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment