Tuesday 24 October 2017

மகாராஷ்டிரா மகாபலீஸ்வர்


ஓங்கி உயர்ந்த சிகரங்கள், பள்ளத்தாக்குகள், பசுமை ததும்பி வழியும் காடுகள், வளைந்து நெளிந்து கிடக்கும் மலைத்தொடர்கள், ஜில்லென்று வருடிச் செல்லும் பனிக்காற்று இது தான் மகாபலீஸ்வர். மகாராஷ்டிராவிற்கு பெருமை சேர்க்கும் மலைவாழிடம். ஆங்கிலேயர் ஆட்சியின் போது பம்பாய் மாகாணத்தின் கோடைக்கால தலைநகராக விளங்கிய நகரம். பூனாவிலிருந்து 120 கி.மீ. இந்த ஊரின் பெயரிலேயே கோயில் கொண்டிருக்கிறார் மகாபலீஸ்வர்.

மகாபலீஸ்வர் என்றால் "சக்தி வாய்ந்த ஈஸ்வரன்'. பஞ்ச கங்கைகளான கோயனா, வெண்ணா, சாவித்ரி, காயத்ரி, கிருஷ்ணா நதிகள் சங்கமிக்கும் நதி தீரத்தில் கோயில் கொண்டிருக்கிறார். மகாராஷ்டிர மக்கள் மகா சக்தியாக போற்றும் கடவுள். பஞ்ச கங்கைகளில் புனித நீராடிவிட்டு சுயம்புலிங்கமாய் காட்சி தரும் ஈஸ்வரனை தரிசித்தால் மகாபலம் பெறலாம்.

மகாபலீஸ்வர் பழமையும், நவீனமும் கலந்து சுற்றுலா பயணிகளுக்கு விருந்து படைக்கும் நகரம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கோட்டைகளும், கட்டடங்களும் இங்கு உள்ளன. கவர்னர் மால்கம் வசித்த மால்கம் மவுண்ட், காந்தியடிகள் சில காலம் வாழ்ந்த மொரார்ஜி கோட்டை ஆகியன அக்கட்டடங்களில் அடங்கும். மகாபலீஸ்வரிலிருந்து சிறிது தூரத்தில் வெண்ணா ஏரி இருக்கிறது. இங்கு படகு சவாரி விசேஷம். தங்குவதற்கும், சுவைப்பதற்கும், விளையாடுவதற்கும் வசதிகளை மகாராஷ்டிரா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செய்திருக்கிறது. ஏரியிலிருந்து கீழிறங்கி வந்தால் ஸ்ட்ராபெர்ரி வனம் ரம்மியமாக உள்ளது. மகாபலீஸ்வர் சென்று சிவனை தரிசித்து வாருங்கள்.

No comments:

Post a Comment