மனிதனைப் புதுப்பிக்கக் கூடிய மிகப் பெரிய சக்தி பயணங்களுக்கு உண்டு. அந்தப் பயணத்தை பக்தி சிரத்தையாக புண்ணிய தலங்களை நோக்கி ஒருவர் மேற்கொள்ளும்போது அது ‘யாத்திரை’யாகிறது. ஒவ்வொரு மதத்தவரும் அவரவர் மரபுப்படி புனிதப் பயணம் மேற்கொள்ள பிரத்யேகமான தலங்கள் உள்ளன. தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் அத்தலங்களுக்குச் சென்றுவர வேண்டும் என ஒவ்வொருவரும் நினைத்தாலும் அக்காலங்களில் அது அத்தனை அவ்வளவு சாத்தியமாய் இருக்கவில்லை. இன்றோ அத்தகைய நிலைமை இல்லை. அக்காலங்களில் மேற்கொண்ட பிரயாத்தனங்கள் இப்போது தேவையில்லை. ஆனால், இப்போதோ, நவீன வசதிகள், சிறுதொலைவு பயணங்களைப் போல நீண்டதூர யாத்திரைகளையும் எளிமையாக்கி விட்டன. வாகன வசதிகளால் வழித்தடங்களும், பயண நேரங்களும் சுருங்கிவிட்டன. இதனால் எல்லோராலும் நினைத்த நேரத்தில் யாத்திரைகளை மேற்கொள்ள முடிகிறது. ஆகமங்கள் தீர்த்த யாத்திரை, தல யாத்திரை என யாத்திரையை இரண்டாக வகைப்படுத்துகின்றன. தீர்த்த யாத்திரை என்பது புனிதமான நீர்நிலையை ஒட்டி அமைந்திருக்கும் தலங்களைக் குறிக்கும்.
தல யாத்திரை என்பது அவ்வாறு நீர்நிலையை ஒட்டியதாக இல்லாத திருத்தலங்களைக் குறிக்கும். தெய்வங்கள் அனைத்தும் நீரில் உறைவதாக வேதங்கள் குறிப்பிடுகின்றன. அதனாலயே ஆலய வழிபாடுகளிலும், தெய்வ காரியங்களிலும் இறைவனை நீரில் ஆவாகனம் செய்கின்றனர். அப்படி இறைவன் உறைந்திருக்கும் புண்ணிய நதிகளை நோக்கிய யாத்திரைகளினால் மனிதர்களாகிய நம்மைப் பிடித்திருக்கும் நோய்கள் மட்டுமல்ல பாவங்களும் நீக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே அக்காலங்களில் மன்னர்களும் சாதாரண குடிமக்களைப் போலவே தீர்த்த யாத்திரைகளை மேற்கொண்டனர். பொதுவாகவே இத்தகைய யாத்திரையை மேற்கொண்டு மீண்டும் தங்கள் இருப்பிடம் திரும்புபவர்கள் புண்ணியம் செய்தவர்களாக போற்றப்பட்டனர். யாத்திரைகளை, பயணங்களைப் போல சட்டென மேற்கொண்டுவிட முடியாது. அதற்கென பல நியதிகளை, வழிமுறைகளை சாஸ்திரங்கள் வகுத்திருக்கின்றன. அத்தகைய நியதிகளின்படி மேற்கொண்டால் மட்டுமே அந்த யாத்திரையின் பலனை முழுமையாகப் பெறமுடியும்.
இஸ்லாமியர் மெக்காவுக்கும், கிறிஸ்தவர் ஜெருசலத்துக்கும், பெளத்தர் கயாவுக்கும் சென்று வருவதை தன் வாழ்நாள் கடமையாக அத்தகைய மதங்கள் விதித்திருப்பதைப் போல ஒவ்வொரு இந்துவுக்கும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் காசி-ராமேஸ்வரம் சென்று வருவது ஆன்மிகக் கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. காசி, ராமேஸ்வரம் இரண்டும் தனித்தனி அல்ல. ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒன்றில் இருந்தே இன்னொன்று தொடங்குகிறது. இவ்விரு தலங்களில் ஏதாவது ஒரு தலத்துக்கு மட்டும் யாத்திரை சென்றுவந்தால், அந்த யாத்திரை முழுமை பெறாது, அதனால் பலனில்லை என்பார்கள். அதனால்தானோ என்னவோ காசி, ராமேஸ்வரம் இரண்டையும் தனித்தனியாக குறிப்பிடாமல் இரண்டையும் சேர்த்தே குறிப்பிடும் வழக்கம் இப்போதும் வழக்கில் உள்ளது. இந்து மதத்தவர் மட்டுமல்ல மற்ற மதத்தவராலும்கூட காசியோடு ராமேஸ்வரத்தை இணைத்தே பார்க்க முடிகிறது. ‘யாத்திரை போகிறேன்’ என யாரிடமாவது சொல்லிப் பாருங்கள், உடனே அவர் ‘காசியா? ராமேஸ்வரமா?’ என்று தனித்தனியாகக் கேட்பதில்லை.
மாறாக ‘காசி-ராமேஸ்வரமா?’ என்று சேர்த்தே கேட்பார். காஞ்சி முனிவர் மஹாஸ்வாமிகளுக்கு வண்டி ஓட்டிச்சென்ற ஒரு சிறுவன் இவ்வாறு கேட்டதனாலேயே ராமேஸ்வர அக்னிதீர்த்தக் கடலில் ‘சங்கர மடம்’ உருவானது என்று சொல்லப்படுகிறது. காசி யாத்திரை என்பது நியதிப்படி ராமேஸ்வரத்தில் தொடங்கி, காசிக்குச் சென்று மீண்டும் ராமேஸ்வரத்தில் முடிவடைகிறது. அத்தகைய நியதிகளோடு காசி யாத்திரையை அக்காலகட்டத்தில் ஒருவர் செய்து முடித்து திரும்புவதற்குப் பல வருடங்கள் தேவைப்பட்டன. சென்றவர்களில் சிலர் திரும்பாமலேயும் போயிருக்கிறார்கள். அத்தனை கஷ்டப்பட்டு மேற்கொள்ளும் இத்தகைய தீர்த்த யாத்திரையை, தருமங்களிலேயே தலையாயது என வேதங்கள் சுட்டுகின்றன. வாகன வசதிகள் பெரிய அளவில் இல்லாத நிலையில் கூட்டம், கூட்டமாக தீர்த்த யாத்திரைகளை மக்கள் மேற்கொண்டனர். மன்னர்கள் அந்த யாத்ரீகர்களுக்குப் பல வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
நடைப்பயணமாய் வருபவர்கள் இளைப்பாற, உண்டு, உறங்க மன்னர்களோடு வசதிபடைத்தவர்களும் பாதைதோறும் சத்திரங்களைக் கட்டிவைத்தனர். இந்தவகையில் சேதுயாத்திரை என்ற ராமேஸ்வர யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அப்பகுதியை ஆட்சி செய்துவந்த சேதுபதிகள் பல வசதிகளை செய்து கொடுத்தனர். அவர்கள் கட்டித்தந்த சத்திரங்களின் சிதைவுகளை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் சில கிலோமீட்டர் இடைவெளிகளில் வரிசையாக இன்றும் காணலாம். சத்திரங்கள் மட்டுமல்ல அந்தச் சத்திரங்களின் பின்னணியில் ஒரு சரித்திர சம்பவமும் உண்டு. ராமநாதபுரத்தை விஜயரகுநாத சேதுபதி ஆட்சி செய்தபோது ராமேஸ்வரம் செல்ல படகில் வந்திறங்கும் பக்தர்களுக்காக பாம்பனில் நிறைய சத்திரங்களைக் கட்டி அதன் ஆளுனராக தண்டத்தேவர் என்பவரை நியமித்திருந்தார். அவருக்கு தன் இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்திருந்தார்.
அந்தகாலத்தில் பாம்பனுக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே சரியான சாலைவசதிகள் இல்லாததால் புதிய சாலைகளை உருவாக்க நினைத்த தண்டத்தேவர் யாத்திரைக்கு வரும் பக்தர்களிடம் சிறுதொகையை வரியாக வசூல் செய்தார். இதைக் கேள்விப்பட்ட சேதுபதி, தண்டத்தேவர் தன்னைக் கேட்காமல் வரிவசூல் செய்ததோடு சிவத்துரோகமும் செய்து விட்டார் எனக்கூறி அவருக்கு மரண தண்டனை விதித்தார். இதையறிந்த சேதுபதியின் மகள்கள் இருவரும் தன் கணவனின் சிதையில் விழுந்து உயிரை விட்டனர். அவர்கள் இவ்வாறு உடன்கட்டை ஏறிய இடம் ‘தீப்பாஞ்சகாணி’ (காணி - இடம்; தீப்பாஞ்சகாணி -தீயில் பாய்ந்த இடம்) என்ற பெயரில் தண்டத்தேவரின் அரண்மனை இருந்த இடத்தின் (இப்போதைய தங்கச்சி மடம்) எதிரே அமைந்துள்ளது. தீயில் விழுந்து உயிர் விட்ட அக்காள், தங்கை இருவரின் நினைவாக இருமடங்கள் உருவாக்கப்பட்டன. அக்காள் மடத்தை சிவக்குமார முத்து விஜயரகுநாத தேவரும், தங்கச்சி மடத்தை கட்டையத் தேவரும் கட்டினர். அம்மடங்களைச் சுற்றி எழுந்த ஊர்கள் பின்னர் அம்மடங்களின் பெயர்களாலயே அழைக்கப்பட்டன.
வேறு சில நூல்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: தண்டத்தேவர் பக்தர்களின் உணவிற்காக பணமும், வரியும் வசூலித்து வந்ததையறிந்த சேதுபதி மருமகனைத் தண்டித்தால் மகள்கள் கவலைப்படுவார்களே என நினைத்தார். எனவே, மகள்களை அழைத்து குற்றவாளி யாரென்று கூறாமல் இதற்கு என்ன தண்டனை கொடுக்கலாம் எனக் கேட்க, அவர்களோ பணம் வாங்கியவரின் கையை வெட்டி விடும்படி கூறினர். அதன்பின் குற்றவாளி யாரென தெரிந்தும் தங்களின் முடிவை அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியின் நினைவாக உருவாக்கப்பட்டவைகளே அக்காள் மடமும், தங்கச்சி மடமும்.
சுற்றுலாவிற்கும், யாத்திரைக்கும் உணர்வுபூர்வமாக வித்தியாசம் உண்டு. சுற்றுலா என்பது பொதுவாக கேளிக்கை, களியாட்டம், குதூகலம், வேடிக்கை, பிரமிப்பு, சாகசம், கொண்டாட்டம் என்றெல்லாம் உற்சாகப் பொழுதுபோக்காகவே அமையும். ஆனால், யாத்திரை ஆன்மிகம் சார்ந்தது. மன அமைதி, பரிபூரண நிம்மதி, இறையருளை உணர்வது, ஒழுங்கைக் கடைப்பிடிப்பது, நிதானமாகவும், விவேகத்துடனும் நடந்துகொள்வது, அடுத்து ஒருமுறை வரமுடியுமோ, முடியாதோ என்ற ஆதங்கத்தில் இப்போதே மனநிறைவாக ஈடுபடுவது எல்லாம் யாத்திரையின் இலக்கணங்கள். ஆக, யாத்திரை நியதிகளின்படி நாமும் ராமேஸ்வரம் நோக்கிப் பயணத்தைத் தொடங்குவோம், வாருங்கள்.
No comments:
Post a Comment