Monday 23 October 2017

சிவனை பித்தா என்பது ஏன்?


"பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடலே இது தான். இறைவனை இவர் "பித்தன்' என அழைக்கக் காரணம் என்ன தெரியுமா?

சுந்தரருக்கு திருமணம் நடக்க இருந்த வேளையில், அவரை ஆட்கொள்ள நினைத்த சிவன், முதியவர் வேடத்தில் வந்தார். சுந்தரர் தன் முன்னோருக்கும், தனக்கும் அடிமை என்றார். ""ஏ பித்தனே! நீ யார்? என்ன உளறுகிறாய்?'' என்று சுந்தரர் கடிந்து கொண்டார். பின்பு தான் வந்தது சிவன் என்ற உண்மை புரிந்தது. தன்னைப் பாடும்படி சிவன் கேட்கவே, என்ன சொல்லி ஆரம்பிப்பது என சுந்தரர் குழம்பினார். ""என்னை பித்தன் என்று திட்டினாயே! அந்த வார்த்தையிலேயே துவங்கு,'' என்றார்.

சுந்தரரும் அந்த வார்த்தையின் அர்த்த புஷ்டியைப் புரிந்து கொண்டார். சிவனின் தலையிலுள்ள கங்கை மூன்று முறை தான் மனிதர்களின் பாவத்தைப் பொறுப்பாள். ஆனால், அவரது துணைவி பார்வதியோ, எத்தனை தடவை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வாள். எத்தனை தடவை தப்பு செய்தாலும் பொறுப்பவளை தலையில் வைத்து கொண்டாடாமல், குறைந்த தடவை பொறுப்பவளை, சிவன் தனது தலையில் வைத்துக் கொண்டாடுகிறார். இத்தகைய புரிந்து கொள்ள முடியாத செயல்களைச் செய்வதால் அவரைப் "பித்தன்' என்றார் சுந்தரர். 

No comments:

Post a Comment