Friday, 27 October 2017

இங்கே இவை இரண்டு


ஒரே கோயிலில் இரட்டை சிற்பங்கள், சிலைகள்,கொடிமரங்கள், கோபுரங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றைக் காண்போமா! 

* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், கோயிலின் முன்னும் பின்னுமாக இரண்டு கொடிமரங்கள் அமைந்துள்ளது.
* மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் மூலஸ்தானத்தின் வலப்புறத்திலும், தென்மேற்கு மூலையிலும் இரட்டை கணபதி வீற்றிருக்கின்றனர்.
* நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் ராஜகோபுரத்தின் உட்புறம் இரண்டு கணபதிகள் நின்ற கோலத்தில் உள்ளனர். 
* சென்னை திருவேற்காடு கருமாரி, தேனி வீரபாண்டி கவுமாரி அம்மன் கருவறையில் அம்மன் இரட்டை வடிவங்களில் காட்சி 
தருகிறாள்.
* கடலூர் மாவட்டம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர், நாகப்பட்டினம் மாவட்டம் திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர், விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அகஸ்தீஸ்வரர், தஞ்சாவூர் மாவட்டம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர், தஞ்சாவூர் மாவட்டம் தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்களில் இரட்டை பைரவர் அருள்பாலிக்கின்றனர்.
* திண்டுக்கலிலிருந்து நத்தம் செல்லும் வழியிலுள்ள தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில், மூலஸ்தானத்தில் மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன்கள் உள்ளனர்.
* சேலம் தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயிலில் மாரியம்மனும், காளியம்மனும் ஒரே பீடத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகின்றனர். 
* திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தில் இரண்டு சிவலிங்கம் உள்ளன.
* திருச்சி மாவட்டம் நெடுங்குளம் நெடுங்குளநாதர் கோயில் மூலஸ்தானத்தில் இரட்டை விமானங்கள் உள்ளன.
* தஞ்சாவூர் மாவட்டம் திருவாப்பாடி பாலுகந்தநாதர் கோயில் வடக்கு பிரகாரத்திலும், அர்த்த மண்டபத்திலும் இரண்டு சண்டிகேஸ்வரர்கள் காட்சி தருகின்றனர்.
* காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோயிலில், ஒரே கோபுரத்தின் கீழே, கிழக்கு நோக்கியவாறு கைலாசநாதரும், தெற்கு நோக்கியவாறு தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். 
* தஞ்சாவூர் மாவட்டம் நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில், இரண்டு தட்சிணாமூர்த்திகள் அருகருகே காட்சியளிக்கின்றனர். 
* கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் மூலவர் ஒருவர் என்றாலும், அலங்காரவல்லி, சவுந்தர நாயகி என இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன.
* கடலூர் திருக்கூடலையாற்றூர் நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன்கள் காட்சியளிக்கின்றனர். 
* தஞ்சாவூர் மாவட்டம் நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் ஒரே ஆவுடையாரில் இரண்டு லிங்கங்கள் உள்ளன.
* கும்பகோணத்துக்கருகிலுள்ள கொருக்கை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மூலவரையும், அம்மனையும் நோக்கியவாறு இரண்டு நந்திகள் உள்ளன. 
* கேரளா திருச்சூர் பெருவனம் இரட்டையப்பர் கோயிலில் ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கம் அமைந்திருப்பது சிறப்பு.
* புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் அம்மன் எதிரே இரண்டு நந்திகள் உள்ளன.
* சிவகங்கை சாக்கோட்டை வீரசேகரன், மதுரை புட்டுத் தோப்பு புட்டு சொக்கநாதர் கோயில்களில் பைரவருக்கு இரண்டு நாய்கள் வாகனமாக உள்ளன.
* கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்கடித்தானம் அற்புத நாராயணன் கோயிலில் இரண்டு கொடிமரங்கள் உள்ளன.

No comments:

Post a Comment