Saturday, 21 October 2017

அரவணைப்பாள் அங்காள பரமேஸ்வரி


தேவர்களை இனி நாம்தான் காப்பாற்ற வேண்டும். இதைச் செய்வதற்கு ஈசன் எதற்கு என்று விஷமாய் ஓர் எண்ணம் வளர்ந்தது. இப்போது எந்த அரக்கர்கள் எங்கு அட்டகாசம் செய்கிறார்கள் என்று பார்த்தார். அவர்களை அழிக்க ஏதேனும் ஒரு யாகம் நிகழ்த்தி பெரும் பலம் பெற்று எதிர்த்து வரும் அரக்கர்களைக் கிழித்து போட்டால் போயிற்று என்று மனம் கணக்கிட்டது. பிரம்மா, யாக குண்டத்தின் முன் திடமாய் அமர்ந்தார். தீயின் கனல் அடர்ந்து நாற்புறமும் படர்ந்தது.   அகிலமெல்லாம் ஆளும் அரனும் தானும் ஒன்றே என்று அனைவரும் உணர வேண்டுமென்ற கர்வம் தீயோடு தீயாய் உள்ளுக்குள் உருண்டது. நான்முகனான தானும் அந்த முக்கண்ணனும் இணையே என்று ஈரேழுலகமும் அறிவிக்க பேராவல் கொண்டது. 

யாககுண்டத்தில் தகதகத்து பொங்கும் அக்னிக்கு இணையாக தீந்தவம் புரிந்தார். சட்டென்று குண்டம் குளிர்ந்தது. சிவந்த யாகத் தீ வெண் ஜோதியாக எழுந்தது. அதனின்று வெண்மை யாய் தேவலோகத்து நங்கை கைகூப்பி எழுந்தாள். தன் பெயர் திலோத்தமை என மொழிந்தாள். பிரம்மா அவள் வடிவழகில் தம்மை மறந்தார். எழுந்து அவள் பின்னே நடந்தார். ஈசனும் அதைக் கவனித்தவாறு மென்மையாய் சிரித்தார். கயிலாயம் நோக்கி வரும் பிரம்மனையும்,   திலோத்தமையையும் தீக்கண்களால் பார்த்தார். பிரம்மனின் ஐந்தாவது தலை மெல்ல ஆட்டம் கண்டது. மிடுக்காய் நடந்த பிரம்மா திலோத்தமையின் அழகினைப் பின் தொடர்ந்து, கயிலையின் வாயிலை அடைந்தார். 

பிரம்மனைப் பார்த்த பார்வதி, ஈசனா இது என்று வியந்தாள். தம்மையறியாது எழுந்து தலை தாழ்த்த, பிரம்மன் பெருஞ் சிரிப்பாய் சிரித்தார். கேலியாகப் பார்த்தார். திலோத்தமை அச்சத்துடன் ஈசனைப் பார்க்க, ஈசன் தம் மூன்றாவது கண்களைத் திறக்க, அங்கே அக்னி கமழ்ந்தது. பார்வதி தேவி தான் அவமானப்படுத்தப்பட்டோமோ என மருகினாள். ஆனால், மனதில் பொங்கிய சினத்தை அடக்காது பிரம்மனைப் பார்த்தாள். ‘‘ஐந்து முகம் உடையோரெல்லாம், உலகெல்லாம் நிறைந்த ஈசனாக முடியாது. நான்முகமென்பது உன் வேத உருவம். அதையும் ஈசன் தன் மூச்சாகக் கொண்டு, அவர் கரங்களில் உன்னை கருவியாக்கிக் கொண்டு உன்னை ஆளுகிறார். ஆனால், நீ உன் அகங்காரம் எனும் ஐந்தாவது முகம் தாங்கி இங்கு அட்டகாசமாய், கர்வம் பொங்க சிரிக்கிறாய்’’ எனப் பகர்ந்தாள். 

பிரம்மா இன்னும் அசையாது ஈசனையே நேருக்கு நேராய் பார்க்க, ஈசன் மெல்ல நகர்ந்து அருகே வந்தார். நான்முகனின் சிரசில் ஐந்தாவதாக ஒட்டிக் கொண்டு ஆட்டம் போட்ட தலையைக் கிள்ள, பிரம்மன் அலறினான். அவன் அலறல் சத்தத்தின் அதிர்வு சரஸ்வதி மீட்டிக் கொண்டிருந்த வீணையின் தந்தியை அறுத்தெறிந்தது. இதென்ன அபசகுனம் என்று வேதவாணி கண்கள் மூட, கயிலையில் மடங்கி வீழ்ந்து கிடக்கும் பிரம்மனின் நிலை பார்த்து அலறினாள். கயிலையின் வாயிலை அடைந்தாள். ‘இதென்ன விபரீதம், ஈசனே பிரம்மனின் சிரம் கொய்தாரா? நான்கு வேதத்தின் மூலமாய் விளங்கும் சர்வேசனே வேதரூபனான பிரம்மனின் தலையைக் கிள்ளினாரா’ என்று பரபரத்தாள். பிரம்மனின் அலங்கோலம் கண்டு கலங்கி மண்ணில் வீழ்ந்தாள். சீற்றம் கொண்டாள். கைகளில் பிரம்ம கபாலம் ஏந்தி நிற்கும் ஈசனை பார்த்தாள். 

‘‘வேத சொரூபமான என் கணவரின் சிரசைக் கொய்த உங்களை பிரம்மஹத்தி எனும் தோஷம் பீடிக்கட்டும். சுடலைக் காடனான நீர், இனி அன்ன ஆகாரமற்று, சுடலைச் சாம்பல் புசித்து, பசியை ஆற்றிக்கொள்ளுங்கள்’’ என்று ஆக்ரோஷமாக சாபமிட்டாள். சரஸ்வதியின் கோபக்கனல் அக்னீசனையே தீயாய் எரித்தது. கண்கள் மூடினார். தான் சிவம் எனும் பிரக்ஞையை முற்றிலும் மறந்தார். பிரம்ம கபாலத்தை திருவோடாக ஏந்தினார். கயிலையை விட்டு வெளியேறினார். 

உமையன்னை அதிர்ந்தாள். சரஸ்வதி அவளையும் ஏறிட்டுப் பார்க்க, பார்வதியின் அழகு முகம் கோர முகமாக திரிந்தது. உமையன்னை உருக்குலைந்தாள். கோர உருவம் தாங்கினாள். தலைவிரி கோலமாய் கிளம்பினாள். பாற்கடல் பரந்தாமனான விஷ்ணுவை மனதில் நிறுத்தினாள். 

மஹாவிஷ்ணு அருணாசல மலையையும், அதனருகே உள்ள ஓர் ஏரிக்கரையையும் மெல்லிய வெளிச்சமிட்டுக் காட்டினார். அம்மை மகிழ்ந்தாள். அவ்விடம் விட்டு அகன்றாள். சரஸ்வதி குளிர்ந்து பிரம்மனைப் பார்க்க, பிரம்மா முழுவேகத்தோடு பிரபஞ்சத்தைப் பார்க்க, உயிர்கள் பெருகின. அந்த அழகான ஏரிக்கரையை ஒட்டிய கிராமத்திற்கு மலையனூர் என்று பெயர். மலையை சுற்றி பூக்கள் பூத்துக் குலுங்க... மென்மையாய் தென்றல் ஏரியில் நனைந்து சாமரமாய் அவ்வூரில் வீச ஊரே மணந்தது. அதனால் ‘பூங்காவனம்’ என்று பெயர் பெற்றது. மீனவக் குடும்பங்கள் கரையோரமாய் சிறு குடில்கள் அமைத்துத் தங்கியிருந்தனர். அதில் தாசன் என்பவன் தன் நான்கு மகன்களோடு வலைகளை தோளில் போர்த்திக் கொண்டு கிளம்பினான். வலையை நீரில் வீசினான். 

உமையன்னை அருணாசலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கினாள். வலை வலிமையாக இருப்பது பார்த்து தாசன் மேலே இழுக்க வலை அவனை நீருக்குள் இழுக்கப் பார்த்தது. பார்வதி தேவி தன் சுயரூபம் பெற்றெழுந்தாள். மலையனூரின் கரையோரமாய் நடந்தாள். தனக்குள் பொங்கும் கடலளவு அன்பால் அவ்வூர் முழுவதையும் முகிழ்த்திவிட உறுதி கொண்டாள். தன் கணவனின் பிரம்மஹத்தி தோஷத்தை அழிக்கப் போகும்  அவ்வூரை தன் பார்வையால் அளந்தாள். கரையின் அருகே இருந்த மீனவர்களிடம் மெதுவாய் பேச ஆரம்பித்தாள். ‘‘இதோ மூன்று கற்கள். ஒன்றை நீரில் கரையுங்கள்; மீன்கள் பெருகும். மற்றொன்றை நீரில் வீசுங்கள்; வலை நீண்டு, பெருகும். மீன்கள் சிக்கும். மூன்றாவது ஞானக்கல்உங்கள் அகத்தைக் குளிர வைக்க’’ என்றாள். 

மீன்கள் பெருகின. கூடைகள் நிரம்பின. அன்னையின் முக ஒளியைப் பார்த்து பிரமித்தார்கள்.  அன்னையின் விந்தையில் வியந்து பாதம் பணிந்து மீன்களை பரவலாய் பரப்பி வணங்கினார்கள். தொலை தூரத்தே அரண்மனையின் தோட்டத்திலுள்ள பூங்காவனத்தினுள் அன்னை புகுவது பார்த்து சிந்தனையில் ஆழ்ந்தார்கள். பார்வதி மண்ணில் அமர்ந்தாள். தன் கண்களை சுழற்றி எண்புறமும் அளக்க சூரை சீறிக்கிளர்ந்து அங்கிருந்த மண் குவியலை மழையாய் பார்வதி தேவியின் மீது பொழிந்து, கூம்பாய் குறுகி அன்னையை மூடிக்கொண்டது. அங்கு என்றால் புற்று. காளம் என்றால் பாம்பு. அங்காளம்மனாக புற்றுருவாய் பாம்பை குடையாய் கவிழ்த்து அமர்ந்தாள், அன்னை. தலைக்கு மேல் நங்கென்று தொடர்ச்சியாய் பாறை பிளக்கும் சத்தம் கேட்டு புற்றுக்குள் இருந்த பார்வதி எல்லோரும் பார்க்கும் வண்ணம் பேரொளியின் நடுவே மீனவக் கூட்டத்திடம் பேச ஆரம்பித்தாள்.

‘‘நான் சரஸ்வதியின் சாபத்தால் இங்கிருக்கிறேன். என்னை பூஜித்து வாருங்கள். சந்திரசூரியர் உள்ளவரை உங்கள் பரம்பரையை நான் பாதுகாக்கிறேன்’’ என்று கூறி மறைந்தாள். மீனவர்கள் நீரில் விளையாடும் மீன்களாய் மகிழ்ச்சியில் துள்ளினர். தொடர்ந்து அங்காளியை அன்றாடம் பூஜித்தனர். மூன்று கவளமாய் உணவை உருட்டி அன்னைக்கு படையலிட்டார்கள். அங்காளம்மன் ருசியான அவற்றை எடுத்துக் கொண்டாள்.     மலையனூர் மயானத்தின் ஓரமாய் ஜடாமுடியை அவிழ்த்து, நான்கு புறமும் விரித்து, சுடலைச் சாம் பலை பசியாற்றிக்கொள்ள எடுத்ததைப் பார்த்து அதிர்ந்தாள் அன்னை. பசியில் துடிக்கும் மகேசனின் உணவை பிரம்ம கபாலம் தட்டிப் பறித்து உண்டது. 

   அங்காளி ஈசனுக்கு அண்மையில் நெருங்கினாள். அவளின் மூச்சுக்காற்று பெரும்புயலாய் மாறி மயானத்தையே சுழற்றியது. ஒரு கவளம் சோற்றை ஈசனை நோக்கி கொடுக்க, பிரம்ம கபாலம் இறங்கி வந்து உண்டது. இரண்டாவதை கைகளிலிருந்து சற்று தூரம் வீச, ஈசன் எடுப்பதற்குள் கபாலம் கபளீகரம் செய்தது. அங்காளி கவனமானாள். குடையாய் கவிழ்த்திருந்த பாம்பு விஷம் தேக்கி தயாரானது. மெல்ல கைகளில் உணவை உருட்டினாள். ஈசனின் அருகில் இன்னும் நெருங்கினாள். மெல்ல உருவம் பெருக்கினாள். வானுக்கும் பூமிக்குமாய் நிமிர்ந்தாள். 

சிவந்த நாக்கை வெளியே நீட்டி, வலக்காலை மேலே உயர்த்தி முழு வலிமையோடு தரையை உதைத்தாள். சுடலைச் சாம்பல் புழுதி சூரியனை மறைத்தது. கவளத்தை கீழே பாவனையாய் உருட்டினாள். கைகளில் மறைத்துக் கொண்டாள். கபாலம் உணவை எடுக்க முன்னே நகர்ந்தது. அங்காளி முழு வலிமையோடு பிரம்ம கபாலத்தின் தலையை நசுக்கினாள். கபாலத்திடமிருந்து விடுபட்டு சட்டென்று ஈசன் சிலிர்த்தெழுந்தார். பார்வதி தேவி அங்காளியாய் அதே உக்கிரத்தோடு புற்றின் பின்புறம் அமர்ந்தாள். கபாலத்தை இன்னும் அழுத்திக் கொண்டாள். ஈசனும் பின்னே நடக்க கணவனை அருகே அமர்த்திக் கொண்டாள்.

No comments:

Post a Comment